ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர்கள் யார்? February 8, 2015 News ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர்கள் யார்? ஈழத்தில் உயிருடன் உலவுகிற தமிழ்த் தலைவர்களா? இந்தியாவில் நடைப்பிணங்களாக நடமாடுகிற நாமா? அல்லது 1,46,679 பேரா?’ இப்படியொரு தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினால், – 146679 பேர் – என்று வாதிடுகிற அணிதான் வெற்றிபெறும் என்று தோன்றுகிறது. 2009ல், விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட அந்த 1,46,679 பேரின் உயிர்த் தியாகம்தான், இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை முயற்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, இன்று வரை! இந்த வாரச் செய்தி ஒன்று மேலும் நம்பிக்கையளிக்கிறது நமக்கு. “2009ல் இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியதற்காக நமது நாடாளுமன்றம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்”…….. என்று மனம்விட்டுப் பேசியிருக்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இந்த அளவுக்கு நேர்படப் பேசியிருக்கும் எம்.பி. யார் என்று கேட்கிறீர்களா? அவர் ஒரு பிரிட்டிஷ் எம்.பி. பெயர், லீ ஸ்காட். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைத்திருக்கும் ‘தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு’-வின் தலைவர். இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் தமிழர்களின் போராட்டங்களை முழுமூச்சுடன் ஆதரிக்க வேண்டும் – என்கிற வேண்டுகோளையும் வைத்திருக்கிறார் ஸ்காட். இந்த வாரம் நடந்த குழுவின் கூட்டத்தில் பேசிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ஸ்காட் மாதிரியே மனம் நொந்துபோய்ப் பேசியிருக்கின்றனர். பிரிட்டிஷ் எம்.பி.க்கள் குறிப்பிட்டிருப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. 1. நடந்தது போர் கிடையாது, இனப்படுகொலை என்கிற வலுவான குற்றச்சாட்டு. 2. விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற பிரிட்டன் தவறிவிட்டது என்கிற சுயவிமர்சனம். இலங்கையிலிருந்து பல்லாயிரம் மைல் தூரத்தில் இருக்கிறது பிரிட்டன். ‘தொப்புள் கொடி உறவு’ என்றெல்லாம் அவர்கள் பிதற்ற முடியாது. அப்படியிருந்தும், வெளிப்படையாகப் பேசுகிறார்கள். இனப்படுகொலை நடந்தபோது, அந்த ரத்த வாடையை உணரும் தொலைவில் இருந்தவர்கள் நாம். லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், இந்தியா தங்களைக் காப்பாற்றும் – என்று முள்ளிவாய்க்கால் வரை நம்பினார்கள். இந்தியாவோ உதவி செய்யத் தவறியதோடு, உபத்திரவமும் செய்தது. இனப்படுகொலையை நடத்தி முடிப்பதில் வக்கிர அக்கறை காட்டியது. காங்கிரஸ் அரசு செய்த அந்தப் பச்சைத் துரோகத்துக்காக இந்தியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – என்று வலியுறுத்தும் துணிவு இங்கேயிருக்கிற எந்த எம்.பி.க்கும் இல்லையே….. ஏன்? அன்னை சோனியாவின் மனம் புண்படுமே – என்று பாரதீய ஜனதாவும் சேர்ந்து பதுங்குகிறதா? தனது சிங்களச் சிநேகிதர்களைக் காப்பாற்றுவதற்காக, ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்க சோனியாவின் பரிவாரம் முயற்சித்திருக்கலாம். சங்கப் பரிவாரமும் அந்த மூடி மறைக்கும் முயற்சிக்கு மோடி தரப்பைப் பயன்படுத்துகிறதே…. ஏன்? இங்கேயே நிலைமை மோசமென்றால், ஈழத்து நிலைமை படுமோசம். ஜனவரியில் நடந்தது இலங்கைத் தேர்தல். ஒரே அணியாக இருந்து இனப்படுகொலையைச் செய்த சிங்களத் தலைவர்கள், இரு அணியாகப் பிரிந்து நின்றனர். நாங்கள் தான் இனப்படுகொலை செய்தவர்கள் என்று சிங்களப் பகுதிகளில் தம்பட்டம் அடிக்க இரு அணிகளுமே தவறவில்லை. அப்படியிருந்தும், ஏதாவதொரு அணியை ஆதரித்தே தீருவது என்று தமிழர் பெருந்தலைகள் தலைகீழாக நின்றன. தலைகீழாகத் தொங்கிய அடிமைகளைப் பார்த்து, ‘நான் தெரிந்த பிசாசு, மைத்திரி தெரியாத தேவதை’ என்றெல்லாம் உற்சாகத்தோடு உளறியது மகிந்த பிசாசு. இனப்படுகொலை புகழ் பொன்சேகா – மைத்திரிபாலா அணிக்கு ஆதரவளிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. மைத்திரி என்றால் மாற்றம் – என்று நம்பியது அது. இந்த முடிவுக்கு உள்ளுக்குள்ளேயே எதிர்ப்பும் இருந்தது. ‘என்னால் இரு அணிகளுக்குமே வாக்களிக்க முடியாது’ என்று மனசாட்சியுடன் சொன்ன அனந்திகள் இருந்தார்கள். அதையும் மீறித்தான் மைத்திரியை ஆதரித்து வெற்றி பெற வைத்தது கூட்டமைப்பு. தமிழர்களின் துரதிர்ஷ்டம், ஒரே மாதத்தில் ‘மைத்திரி என்றால் ஏமாற்றம்’ என்பது அம்பலமாகியிருக்கிறது. “நான் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறீசேனாவுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் – நாம் 8-ம்தேதி வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கியது – தொடர்ந்து நாங்கள் அடிமையாகவே வாழ வேண்டும் என்பதற்காக அல்ல” …………….. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மைத்திரி அதிபரான பதினாறாவது நாளே இப்படிப் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன். (காரியம் என்பது பதினாறாவது நாளுக்குள் நடந்துவிட வேண்டும் தானே!) சிறீதரன் கிளிநொச்சி தொகுதி எம்.பி. அவரது தொகுதியில் நடந்த முன்பள்ளி (நர்சரி பள்ளி) விழா ஒன்றில், மலர்களைப் போலிருந்த மழலைகளுக்கிடையே குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினரைப் பார்த்து எரிச்சலடைந்த பிறகுதான், இந்த அளவுக்குக் கடுமையாகப் பேசியிருக்கிறார் அவர். மைத்திரியை ஜனாதிபதியாக ஆக்கியே தீருவது என்று பிடிவாதம் பிடித்தவர்கள், மைத்திரியும் மகிந்தவும் வேறு வேறல்ல என்பதை இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது அனந்தி சசீதரனுக்குத் தேர்தலுக்கு முன்பே தெரிந்திருந்தது….. சிறீதரனுக்கு இப்போதுதான் புரிகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு சிங்கள மிருகம் அதிபராகிறது, லட்சக் கணக்கான தமிழர்கள் அடிமையாகிறார்கள். மகிந்தன் கழுத்தில் கிடக்கிற சிகப்புத் துண்டு மைத்திரி கழுத்தில் இல்லை என்பதைத் தவிர இருவருக்குள் வேறென்ன வேறுபாடு? கூட்டமைப்புத் தலைவர்களில் பலரும், ‘இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை’ என்று இப்போதும் சொல்கிறார்கள். நிலவரம் இப்படியிருக்க “இலங்கையில் இருக்கிற வரை கோதபாய பாதுகாப்பாக இருக்கலாம்” என்று அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகப் பேசுகிறார். அந்தக் கேடுகெட்ட தீவில் யாருக்குப் பாதுகாப்பு இருக்கும், யாருக்கு இருக்காது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொருபுறம், நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரி – சந்திரிகா – மகிந்த மூவரையும் ஒரே அணியாக்கி அழகு பார்க்கும் முயற்சி இப்போதே தொடங்கிவிட்டது. இந்த அழுவாச்சி ஆட்டத்தில், மூன்று பேருக்கும் சேர்த்து கூட்டமைப்பு பல்லக்குத் தூக்குமா என்பது தெரியவில்லை. அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்குக் கிடைத்த தோல்வியை, அந்த மிருகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய தண்டனையாக நினைக்கிற ஏமாளி இனமாகத் தமிழினத்தை மாற்றும் முயற்சியிலும் சிலர் இறக்கிவிடப் பட்டிருக்கிறார்கள். உலக அளவில் ‘ராப்’ இசையுலகைக் கலக்கி வருகிற ஈழத் தமிழ்ச் சகோதரி மாயா, இந்த முயற்சியை வலுவாகக் கண்டித்திருக்கிறார். உனக்கெதுக்கு அரசியல் என்கிற சலசலப்புகளைக் கண்டெல்லாம் அஞ்சாமல், ‘திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலைக்காக ஹேக் சர்வதேச நீதிமன்றத்தின் முன் மகிந்தன் நிறுத்தப்பட்டாக வேண்டும்’ என்கிறார் மாயா. மாயா – ஸ்காட் போன்றவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைகளுக்கும் ஏழாம் பொருத்தம். மாயாவும் ஸ்காட்டும் தெள்ளத்தெளிவாக ‘நடந்தது இனப்படுகொலை’ என்கிறார்கள். தலைகளோ, ஒன்றுமே தெரியாததைப் போல் ‘இனப்படுகொலையா, அப்படின்னா என்ன’ என்பதைப்போல் பாசாங்குப் பார்வை பார்க்கின்றன. இதைப் பார்க்கும்போது, கொலையாளிகளைக் காப்பாற்றுவதற்காக ரகசிய டீல் எதையாவது இந்தத் தலைகள் செய்து தொலைத்துவிட்டனவோ என்கிற சந்தேகம் எழுவதைக் கூட தவிர்க்க முடியவில்லை. இந்தத் தமிழீழப் பெருந்தலைகள் ஈழம் கேட்கவேண்டும் என்று நம்மில் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு நீதி கூட கேட்க மாட்டார்களென்றால் அவர்கள் யார்? அவர்கள் யாருக்கு ஏஜென்ட்? இதைத்தான் உலகமெங்குமுள்ள தமிழர்கள் அறஞ்சார் சினத்துடன் கேட்கிறார்கள். ‘இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், சர்வதேச விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று இந்தத் தலைகளில் ஏதாவது தறுதலை மாதிரி பேசினால், அப்படிப் பேசுகிற தலையைத் தோலுரிக்கக் காத்திருக்கிறது உலகத் தமிழினம். இனப்படுகொலையை மூடி மறைக்க எத்தனை தலைகள் முயற்சித்தாலும், அந்த முயற்சி வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது. இது அரசியல் பிழைப்புக்காக அடிமைகளாக இருக்க ஆசைப்படுபவர்களுக்கும், அடிமைகளாக இருக்கக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று மூச்சை நிறுத்திக்கொண்ட 1,46,679 பேருக்கும் இடையிலான இறுதி யுத்தம். அவர்களின் உயிர்த் தியாகத்தால் தான் சர்வதேசத்தின் பார்வை ஈழத்தை நோக்கித் திரும்பியது. நீதி கேட்பதற்கான இந்த இறுதி யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெறாமல் இந்த அடிமைகளா வெற்றி பெறப் போகிறார்கள்? – புகழேந்தி தங்கராஜ் நன்றி: குமுதம் ரிப்போட்டர்