யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது February 9, 2015 News மைத்திரியின் புதிய அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டு உள்ளது. புதிய அரசு உருவாகிய பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று முல்லைத்தீவிலும் கடந்த வாரங்களில் மன்னார்,கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று யாழ்.நகரில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை மன்னார் மற்றும் வவுனியா பிரஜைகள் குழுவினருடன் இணைந்து யாழ்.மாவட்ட காணாமல் போனோரது குடும்பங்கள் மற்றும் அரசியல் கைதிகளது குடும்பங்கள் ஏற்பாடு செய்திருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் போராட்டத்தி;ற்கு ஆதரவளித்து பங்கெடுத்திருந்தனர். யாழ்.நகரில் ஒன்றுகூடிய அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதியினூடாக யாழ்.மாவட்ட செயலகத்தை வந்தடைந்திருந்தனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதிய ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்கவென செயலக அதிகாரிகளிடம் கையளித்தனர்.