ஐ.நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை ஆரம்பமான  விடுதலைச்சுடர் போராட்டம்  பெப்ரவரி 9ஆம் நாள்  திங்கட்கிழமை 6ஆவது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டமானது காலை 10.00மணிக்கு  வடகிழக்கு லண்டன் East Ham இலிருந்து ஆரம்பமானது.
தமிழீழம் ஒன்றே தமிழருக்கான ஒரே தீர்வென உறுதியோடு பயணிக்கும் தமிழ் மக்களால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட  நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இவ்விடுதலைச்சுடர் போராட்டமானது மார்ச் திங்கள்  16ஆம் நாள் ஐ நா முன்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ள மாபெரும் கொட்டொலிப் போராட்டத்துடன் இணைய உள்ளது.
ஆறாம் நாள் போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  வடகிழக்கு லண்டன்  செயற்பட்டாளர்களுடன் திரு கே கௌதமன்  அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் , திரு ரி சீலன் அவர்கள் விடுதலைச்சுடரினையும் ஏந்திச் சென்றனர். இவர்களுடன்  வி நேசன், ஆர் செல்லப்பா, கே ஆறுமுகன், எஸ் முருகானந்தம், எம் ராகுலன், எஸ் பன்னீர்செல்வம் ஆகியோரும் இணந்து  இன்றைய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Upton park  ஊடாக தொடர்ந்த இன்றைய போராட்டத்தில் East Ham பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான  Labour  கட்சியைச் சேர்ந்த திரு Stephen Timms அவர்களுடைய  செயலகத்தில் மனு கையளிக்கப்பட்டது. 6ஆம் நாள் காலைப்போராட்டம் Canning Town இல்  முடிவடைந்தது.
இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளும் இந்த பயணத்தில் மக்களிடம் கொடுக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி 30 நிமிடமளவில்  மீண்டும் ஆரம்பமான இன்றைய மாலை நேர  விடுதலைச்சுடர் போராட்டம் Manor Park, Eastham High Street, North East Ham முதலிய  பல பகுதிகள்  ஊடாகச் சென்று East Ham Town Centre பகுதியில்  மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. ஆறாம் நாள் போராட்டத்தின் போது அவ்வப்பகுதி மக்களையும் சந்தித்து சமகால அரசியல் விடயங்கள் பற்றி செயற்பாட்டாளர்கள்  கலந்துரையாடினர்.