தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் – மொரிசியஸ் நாட்டின் புதிய பிரதமர் வாக்குறுதி February 11, 2015 News ஈழத்தமிழர்களின் கரி நாளான 4.02.2015 அன்று மொரிசியஸ் நாட்டு பிரதமருடனும் மற்றும் வெளிவிவகார அமைச்சருடனும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திரு . திருச்சோதி அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இச் சந்திப்பின் ஊடாக சிறிலாங்காவில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தாலும் தமிழ் மக்கள் நலன் கருதி எவ்வகையிலும் எவ் நகர்வுகளும் இடம்பெறவில்லை எனவும், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்வதுக்கு சர்வதேசம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத்தையும், அதற்கு மொரிசியஸ் ஆதரவான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேச்சுகள் நடாத்தப்பட்டது. மொரிசியஸ் பிரதமர் தனது கடந்தகால பணியில் 1985 ஆண்டே ஐநா மனிதவுரிமை பொதுச்சபையில் தனது உரையில் ஈழத்தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட குரல்கொடுத்ததாக பதிவு செய்ததோடு, தொடர்ந்தும் தாம் தமிழ் மக்களின் நலனுக்காக உழைப்போம் என்று உறுதிவழங்கியிருந்தார். அத்தோடு அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியை பெற்றுத்தரும் என்பதையும் விளங்கிகொண்டார் . மொரிசியஸ் வெளிவிவகார அமைச்சர் தனது கருத்தை கூறுகையில் மனிதவுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில் தாம் மிகவும் தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் தமிழ் மக்கள் மிக விரைவில் அனைத்து உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதையும் நம்பிக்கையோடு தெரிவித்தார். இச் சந்திப்பில் மொரிசியஸ் நாட்டு தமிழ் பிரதிநிதியும் இணைந்துகொண்டது குறிப்பிடத்தக்கது