நேற்றைய தினம் வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது . இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் தலைவணங்குகின்றோம் .
இதே போன்ற கோரிக்கையினை தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகிய நாம் அனைவரும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி தெளிவாக முன்வைத்து நிற்கின்றோம் .

இந் நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தீர்மானம் என்பது அனைத்துலக சமூகத்துக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி தாயக, தமிழக மற்றும் புலத்து தமிழ் மக்களின் முனைப்பு அரசியலை மீண்டும் கூர்மைப்படுத்தி உள்ளது .

தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதன் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக கண்துடைப்பிற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்பதனாலும் உள்ளக விசாரணை என்பதும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையே அவர்கள் செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் அடிப்படை நியாயமற்ற இயற்கை நீதிக்கோட்பாட்டிற்கு மாறான செயல் என்பதனாலும் நாம் அதை ஏற்கனவே நிராகரித்திருந்தோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக் கூடியவாறும், அவர்களின் நலன்களை பேணக்கூடியவாறும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தேசத்தின் மீது தொடர்ந்தும் புரியப்படுகின்ற இனவழிப்பு, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றை நிரந்தரமாக நிறுத்தப்படக்கூடியவாறானதுமான ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நாடாத்த வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்தும் தாயகத்தில் வாழும் உறவுகளும், தமிழக உறவுகளும், புலம்பெயர் தமிழ் உறவுகளும் போராட வேண்டுமென்று இத் தருணத்தில் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)