பெரும்பாலும் எல்லோரும் அறிந்த மனிதன்…. மட்டக்களப்பின் எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்றான மன்னம்பிட்டியில் 1972ம் ஆண்டு பிறந்தவர். தகப்பனாரின் அரசபணி காரணமாக தீவகம் மண்டைதீவில் வேர்பதித்து வளர்ந்தவர்….
அரசபணி கிடைத்தபோதும் ஊடகப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர்…. இறுதிவரை இன்முகம் காட்டி உலவிய அவருடைய ஆறாவது ஆண்டு நினைவுநாள் இன்று…..
இந்தநாளில் அவர்பற்றிய எம்நினைவுகள் முன்னெழுகின்றன… எங்களுடன் சேர்ந்து வாழ்ந்து… அன்பை விதைத்துவிட்டு சிறிய இரும்புத்துண்டு ஒன்றின் தாக்குதலில் உயிரிபிரிந்துவிட்ட அவரின் நினைவுகள் காலத்தால் அழியாமல் அசைபோடவைக்கினிறன…..
ஆங்கிலமும் தமிழும் கலந்த அவனது பேச்சு….வியர்வையை துடைத்தபடியே சிரிக்கும் அந்த சிரிப்பு……. எப்போதும் துருவித்துருவி கேட்கும் இயல்பு….விவாதிக்கும் நுண்ணறிவு….. என எல்லாம் சேர்ந்த கலவைதான் அவன். இளம்வயதில் சேர்த்துக்கொண்ட ஊடகஅறிவு சத்தியமூர்த்தியின் சொத்து.
கல்விப்புகழ்பூத்த யாழ். இந்துக்கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்தே எழுதும் பணியில் ஆர்வமுற்றிருந்தவர் சத்தியமூர்த்தி.
யாழ் இடம் பெயர்வின் பின்  வன்னியில் கால்பதித்து ஊடகங்களில் பல்வேறு எழுத்துப்பக்கங்களில் பங்களித்து தன்திறமையினை வெளிக்காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனது செயற்றிறனை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து ஊடகஅறிமுகங்களை பெற்று அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுத்தார். அவர் அங்கு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய இடம் வகித்தார்.  இளம் படைப்பாளர்களினதும், ஆர்வலர்களினதும் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று  அந்த அமைப்பின் வளர்ச்சியில் முன்னின்று உழைத்தார்.
வன்னியில் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களில் சத்திய மூர்த்தியினுடைய படைப்புக்கள் இடம் பெற்றிருந்தன.  பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் அவருக்கான பணி அமைந்தது.
ஆனால்  அவரின் ஆhவம் ஈடுபாடுகள் ஊடகப் பணியிலேயே இருந்தன. இந்த ஆர்வம் அவரை புலம் பெயர் மக்களுக்கான செய்தியாளனாக்கியது.
புலத்து மக்களுக்காக ரீ.ரீ.என்இ தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை அவர் செய்தார். இதனூடாக சத்தியமூர்த்தி உலகத்தமிழர்களின் விருப்பத்துக்குரிய செய்தியாளரானார். அவரது ஆளுமை புலம்பெயர் ஊடகங்களையும் அழகுசெய்தன.
கிளிநொச்சியில் இயங்கிய தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் பங்களிப்பு செய்ததில் சத்தியமூர்த்திக்கு மனநிறைவு இருந்தது.
எப்போதும் ஒரு செய்தியாளனுக்குரிய துடிப்போடும் சிந்தனையோடும் காலத்தை நகர்த்தியவர்… தன்னுடைய மிதிவண்டியில் எப்போதும் திரிந்து செய்தியை சேகரித்தவர். ஊடகப்பணியை தவிர எதுவும் நினைத்ததுகூட இல்லை. சிறந்த நேர்மையான விமர்சகன்….
மூத்தோரையும் இளையோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்லும் கலையில் கைதேர்ந்தவர்…. தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் கெட்டித்தனம் கொண்டவர்…..
தமிழ் மக்கள் மீதான போர் முடுக்கி விடப்பட்ட நாட்களில் போகுமிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே அவரும் இருந்தார். தன் சயிக்கிளில் சொற்ப பொருட்களை சுமந்தபடி சென்றார்.
உடையார்கட்டில் தொடங்கி நாளும் பொழுதுமாய் எம்முடன் பெயர்ந்துதிரிந்த அவர் 12.2.2009 அன்று தேவிபுரம் பகுதியில் பொருட்கள் எடுக்கசென்ற மருமக்களுக்கு உதவச் சென்றார்.
அவருக்கெனக் காத்திருந்ததுபோல…. எங்கோ வெடித்த எறிகணையின் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று அவரை சாய்த்தது. எதிர்காலத்தில் பிரசித்தமானவனாக அவன் விளங்கப்போவதை காலம் அன்று விரும்பவில்லைபோலும்…. ஒரேமூச்சில் அவனது உயிர்பிரிந்தது…. நாட்டை நேசித்து… செய்தியாளனாக வாழ்ந்த அவன் அன்று இனத்து மக்களுக்கு அன்றொரு செய்தியானான்….
தன் பெண்குழந்தை பற்றிஅவன் கட்டிவைத்திருந்த கனவுக்கோட்டை அவனுடன் பழகியவர்களுக்கு தெரியும்…. பனிபொழியும் அதி காலையில் ஆஸ்மா நோய் வருத்த… அதைப்பொருட்படுத்தாது….”கைவீசம்மா கைவீசு….” என்று மகளுக்கு பாட்டுப்பாடி ஊஞ்சலாட்டும் அன்புத் தந்தை அவன்… தன்பிள்ளைக்கு அறிவுசார் புத்தகங்களையே பரிசளிக்க வேண்டும் என ஆதர்சப்பட்ட தகப்பன்……
அந்தக்கனவுகளையெல்லாம் சிறிய செல்துண்டு சிதறடித்து எங்களையும் துயரத்தில் ஆழ்த்தியது…. மறக்கமுடியாத துயரமாக அது அமைந்துவிட்டது…. நோயில் வீழ்ந்து பாயில் படுக்காத உடனடி மரணம்…. இன்னுந்தான் நம்பமுடியாமல் வலிக்கிறது…..
அவனின் கனவுகளை சுமந்த அவனின் மகள் சிந்து…. இன்று 9 வயதுப் பிள்ளையாய்….. அப்பாவின் முகத்தை படத்தில் பார்த்தபடி…. என்னசெய்வது?….. நாட்டுப்பற்றாளனாய்….. எம்முன் நிழற்படமாகிவிட்ட அவனை நினைந்துருகுகின்றோம். காலம் வலியது அதுதான் கணக்கை எப்போதும் வைத்திருக்கும்…..
-ஆதிலட்சுமி –