கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள நாதன்குடியிருப்பு, உழவனூர் மற்றும் புதிய புன்னைநீராவி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கக் கோரி நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர்.
மேற்படி கிராமங்களில் கடந்த 25  வருடங்களுக்கும் மேலாக மத்திய வகுப்புத் திட்ட காணிகளில் வசித்துவரும் இவர்களுக்கு இதுவரை காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வீட்டுத் திட்டம், மின்சாரம் மற்றும் வீதி வசதிகள் என்பனவும் அபிவிருத்தித் திட்டங்களும் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த காலங்களில் பலரிடமும் எடுத்துக்கூறிய நிலையில் அவர்கள் எவரும் நடவடிக்கை எடுக்காததாலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றிலில் இந்தப் போரட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தையடுத்து அங்கிருந்து கிளிநொச்சி கச்சேரிக்கு பேரணியாகச் சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகம் சென்று அங்கும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
மேற்படி பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் பிரதேச செயலரோ மாவட்ட அரச அதிபரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று மக்கள் போராட்டத்தின்போது குற்றம்சாட்டினர். தமது குறைபாடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குச் சென்றால் அங்குள்ள அதிகாரிகள் தங்களை மதிக்காமல் செயற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.