8ஆவது நாளாக ஐ நா நோக்கித் தொடரும் விடுதலைச்சுடர் போராட்டம் February 12, 2015 News சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் 8ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. பிரித்தானியாவில் பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை 10, Downing Street முன்பாக ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் பெப்ரவரி 11ஆம் நாள் புதன்கிழமை 8ஆவது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டமானது காலை 10.00 மணிக்கு தென்மேற்கு லண்டன் Twicknham என்னும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. எட்டாம் நாள் போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளரும் விடுதலைச்சுடர் போராட்ட தென்மேற்கு லண்டன் ஒருங்கிணைப்பாளருமான திரு செல்வக்குமரன் சிவானந்தம் அவர்கள் விடுதலைச்சுடரையும், திரு மயூரன் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் ஏந்தியவாறு செல்ல, அவர்களுடன் ஏனைய தென்மேற்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயர்பாட்டளர்கள் பலரும் ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட போராட்டம், Twickenham பகுதியின் பல இடங்களூடாகத் தொடரப்பட்டபொழுது, ஆங்காங்கே சந்தித்த மக்களிடம் சிறுவெளியீடுகளும் கையளிக்கப்பட்டன. இதன்போது Twickenham பகுதிக்கான Liberal Democrat கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு Vince Cable அவர்களிடம் மனு கையளிக்கப்பட்டது. பின்னர் Richmond வரை விடுதலைச்சுடர் பயணத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்களும் மக்களும் Richmond இன் முதன்மைச் சாலைகளில் சந்தித்த மக்களுக்கு எமது போராட்டக் கோரிக்கைகளை விளக்கும் சிறுவெளியீடுகளைக் கொடுத்ததுடன் அம்மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கங்களையும் கொடுத்தனர். Richmond பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான conservative கட்சியைச் சார்ந்த திரு Zac Goldsmith அவர்களிடமும் மனு கையளிக்கப்பட்டது. பின்னர் மதியம் 1 மணியளவில் காலைநேரப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. பிற்பகல் 2.30மணியளவில் மாலைநேரப் போராட்டம் Kingston Upon Thames இலிருந்து ஆரம்பமானது. போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளை மக்களிடம் கொடுத்தவாறே Surbiton ஊடாக தொடர்ந்த சுடரேந்திய பயணமானது பல இடங்களூடாக முன்னெடுக்கப்பட்டது. Kingston, Surbiton பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் Liberal Democrat கட்சியைச் சார்ந்த திரு Edward Davey அவர்களின் செயலகத்தில் மனு கையளிக்கப்பட்ட பின் Tolworth இல் 8ஆம் நாள் விடுதலைச்சுடர் போராட்டம் நிறைவடைந்தது.