10ஆவது நாளாக ஐ நா நோக்கித் தொடரும் விடுதலைச்சுடர் போராட்டம் February 14, 2015 News சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் 10 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. பிரித்தானியாவில் பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை 10, Downing Street முன்பாக ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் பெப்ரவரி 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை 10ஆவது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டமானது காலை 10.00 மணிக்கு தென்மேற்கு லண்டன் New Malden என்னும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. பத்தாம் நாள் போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்களுடன், திரு குணபாலசிங்கம் சுபராஜ் அவர்கள் விடுதலைச்சுடரையும், திரு குமார் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் ஏந்தியவாறு செல்ல, நிரஞ்சன், செல்வன், ஞானசிகாமணி, கோமதி ஆகியோரும் ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட போராட்டம், New Malden பகுதியின் பல இடங்களூடாகத் தொடரப்பட்டபொழுது, ஆங்காங்கே சந்தித்த மக்களிடம் சிறுவெளியீடுகளும் கையளிக்கப்பட்டன. பின்னர் Wimbledon, Tootting , Mitcham, Wandsworth ஆகிய இடங்களூடாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது Wimbledon பகுதிக்கான Conservative கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு Stephen Hammond அவர்களிடமும் Tooting பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Labour கட்சியைச் சார்ந்த திரு Sadiq Aman Khan அவர்களிடமும் Streatham பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Labour கட்சியைச் சார்ந்த திரு Chuka Harrison Umunna ஆகியோரிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட 10ஆம் நாள் விடுதலைச்சுடர் பயணமானது Wandsworth Town Centre இல் நிறைவடைந்தது.