நோர்வே ஸ்ரவங்கர் வாழ் உறவுகளின் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களிற்கான உதவித்திட்டம்.

மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை இல்லாததாக்கும் நோக்கத்தில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டமானது தனது ஒன்பதாவது கட்டத்தை நோர்வே ஸ்ரவங்கர் வாழ் உறவுகளின் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டத்தினால் சாத்தியமாக்கியிருக்கிறது.

122 மாணவர்களை உள்ளடக்கிய இக்கட்டம் மாந்தை கிழக்கில் உள்ள நான்கு பாடசாலைகளையும் கரைதுறைப்பற்றில் உள்ள ஒரு பாடசாலையும் உள்ளீர்த்துள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் ஒன்பதாம் கட்டமானது ஐந்து பாடசாலைகளை உள்ளடக்கியதாக இருவேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இதன் முதற்பகுதி கடந்த 2015-02-11 ம் திகதி காலை 9 மணியளவில் பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது. 79 மாணவர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருந்தன.

கொல்லவிளாங்குளம் அ.த.க.பாடசாலை, குமாரசாமி வித்தியாலயம், நட்டாங்கண்டல் அ.த.க. பாடசாலை மற்றும் பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளில் இருந்து உதவி கோரப்பட்ட அனைத்து மாணவர்களையும் உள்வாங்கியதாய் இந்நிகழ்வின் முதற்பகுதி நடைபெற்றிருந்தது.

43 மாணவர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வின் இரண்டாம் பகுதி கடந்த 2015-02-13 அன்று முல்லை. அளம்பில் றோ.க. வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது.

பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 482 மாணவர்கள் ஏற்கனவே இச்செயற்திட்டத்தின் முதன் எட்டு கட்டங்களில் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இதன் ஒன்பதாம் கட்ட நிறைவோடு இச்செயற்திட்டத்துள் உள்வாங்கப்பட்ட மாணவர் தொகை 604 ஆக உயர்வடைந்திருக்கிறது.

இச்செயற்திட்டத்தின் முன்னெடுப்பாளர் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,

சாதிக்கும் சந்ததியின் ஒன்பதாம் கட்டத்தை நோர்வே நாட்டில் உள்ள ஸ்ரவங்கர் மகளிர் அமைப்பினர், தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம் – நோர்வே இனூடாக சாத்தியமாக்கி இருக்கின்றனர்.

5 பிரதேசங்களிலும் உள்ள 118 பாடசாலைகளோடும் தொடர்புகளை ஏற்படுத்தி, அத்தொடர்புகள் ஊடாக அப்பாடசாலைகளில் உள்ள குறைகள், கவனிக்கப்படவேண்டியவைகள், ஊக்குவிக்கப்படவேண்டியவைகள், அப்பாடசாலைகள் உள்ள சமூகம் – அச்சூழல் தொர்பான நோக்கு என்று ஓர் பரந்துபட்ட தெளிவான வலைப்பின்னலை உருவாக்குவதற்கான முதல்படியாகவே இந்த சாதிக்கும் சந்ததி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கல்வி கற்கும் மாணவ சமூகம் தேர்ச்சி பெற்று இதே சமூகத்தை வலுப்படுத்த முன்னிற்க வேண்டும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அப்பிரதேசத்தை சார்ந்த பணியாட்கள் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்திலும் விழிப்படைந்த வலுவான கல்விப்பின்னணியுடனான சுதேசிகள் காணப்படும் போது எமது தேசம் இயல்பாகவே முன்னேற்றப்பாதையில் களம் காணும்.

அந்தவகையில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை இல்லாததாக்குவதற்கும் அவர்களின் சீரான கற்றல் செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும் களமும் புலமும் இணைந்து இன்னும் பல தொடர்ச்சியான செயற்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தை வலுப்படுத்தும் என்றார்.