வட மாகாண முதல்வரின் அக்னிப்பிரவேசம் – இதயச்சந்திரன் February 15, 2015 News சிவாஜிலிங்கத்தால் முன்மொழியப்பட்டு, செங்கோல் உடைப்போடு சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தீர்மானமொன்று முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களால் வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.பொருத்தமான தருணத்தில் நிறைவேற்றப்பட்ட சரியான தீர்மானம். 60 வருட கால தமிழின அழிப்பினை சுருக்கமாகவும், தெளிவாகவும், அதுவும் ஐ.நா.வின் இனப்படுகொலை குறித்தான சாசனத்திலுள்ள பிரிவுகளை வைத்து விளக்கியுள்ளார் முதலமைச்சர்.ஆட்சி மாற்றத்தின் முதலாம் அத்தியாயம் முடிந்த கையோடு தமிழ் மக்களின் பிரச்சினையை மூடி மறைக்க ஒரு அனைத்துலக வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. இனிவரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலோடு ,அதாவது ஆட்சி மாற்றத்தின் இரண்டாம் அத்தியாயத்தோடு ஒட்டுமொத்தமாக அவை மறைக்கப்படவிருந்த வேளையில், வடமாகாணசபையில் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் வருகை, பூகோள அரசியலின் சுயநலமிக்க பக்கங்களை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு காட்டியுள்ளது போல் தென்படுகிறது. அதுமட்டுமல்லாது, இரணிலின் ஆதரவு பெற்ற பிரதிப்பாதுகாப்பு அமைச்சர், உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவம் வெளியேறாது என்று தெரிவித்த ‘பழைய குருடி கதவைத் திறவடி’ கதையும் முதல்வரை விசனத்திற்குள்ளாக்கி இருக்க வேண்டும்.இத் தீர்மானமானது தமிழினத்தின் சார்பாக சர்வதேசத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுக்கின்றது. அதாவது மார்ச் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ‘அந்த’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும், அத்தோடு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.ஐ.நா.சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டால், வடமாகாணசபை இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றுமா? அல்லது மாவை சேனாதிராஜா சென்ற வருடம் கூறியது போன்று மக்களை அணிதிரட்டி ஆக்கிரமிற்பிற்கு எதிராக போராட்டங்களை நிகழ்த்துமா?. தமிழக சட்டசபை போல அடுக்கடுக்காக தீர்மானங்களை நிறைவேற்றலாம். ஆனால் அதனை செவிமடுக்க பிராந்திய- மேற்குலக வல்லரசுகள் விரும்பாத போது, மாற்றுவழி குறித்து சிந்திப்பதே பொருத்தமானது.இருப்பினும் இக்கோரிக்கையை, ஆட்சி மாற்றத்தை விரும்பிய அமெரிக்கா எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளும் என்பதை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் நிஷா பிஸ்வாலுடன் பேசும்போது புரிந்து கொண்டிருப்பார். அவர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலை, அரசியல் நாகரீகம் கருதி முழுமையாக வெளிப்படுத்த முதல்வர் விரும்பாவிட்டாலும், இக்காட்டமான தீர்மானம் பல செய்திகளை எமக்கு உணர்த்துகிறது.இத்தீர்மானமானது, ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக ஏன் கொண்டுவரப்படவில்லை என்கிற கேள்வி, மாற்றுச் சிந்தனையாளரிடம் உண்டு. அதற்கான பதிலைத் தேடினால், பூகோள அரசியலின் மூலோபாயங்களை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.சுதந்திரம் பெற்ற (?)காலம் தொட்டு பெருந்தேசிய இனவாத அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் இனவழிப்பு குறித்து , படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ், தராகி சிவராம் போன்றோர் சிங்கள சகோதர- சகோதரிகளிடம் எடுத்து விளக்கியுள்ளனர். அதன் தொடர் முயற்சியாக முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் இத் தீர்மானத்தையும் பார்க்கலாம். ஆனால் இத் தீர்மானம், பிராந்திய நலனை முதன்மைப்படுத்தும் வல்லரசாளர்களின் ஆட்சி மாற்ற நிகழ்ச்சி நிரலுக்கு சவாலாக இருப்பது போல் தெரிகிறது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த குழுவின் வாக்குப்பலத்தினை இதுபோன்ற தீர்மானங்கள் அதிகரித்துவிடலாம் என்கிற அச்சம் அமெரிக்காவிற்கு ஏற்படும். அதேவேளை ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் சிறப்பு போர்க்குற்ற விசாரணை அறிக்கை மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட ‘இன அழிப்பு’ தீர்மானம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் புதிய இராஜதந்திரச் சிக்கல்களைத் தோற்றுவிக்குமெனக் கருதப்படுகிறது.இலங்கையில் ஆட்சிமாற்றம் முழுமைபெறும்வரை, மைத்திரி – இரணில் அணிக்குப் பிரச்சினைகளை உருவாக்கும்வகையில், தமிழர் தரப்பிலிருந்து ‘கோரிக்கைகள்’ என்கிற பெயரில் நெருக்கடிகள் வருவதை நிஷா தேசாய் விரும்பவில்லை என்பதனை, தமிழ் தலைமை வெளியில் சொல்லாமல் தவிர்க்க முயற்சிக்கிறது என்பது நிஜம்.ஆனால் தமிழகத்திற்குச் சென்றபோது பல விமர்சனத்திற்குரிய அரசியல் கருத்துக்களைத் தெரிவித்த விக்கினேஸ்வரன் அவர்களின் இப்போதைய நிலைமாற்றம், பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மந்திரிசபைப் பேச்சாளர் ராஜித சேனாரெட்னாவும், இந்தியப்பெரு ஊடகங்களும் இத் தீர்மானத்தினை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. நல்லிணக்க முயற்சியில் மைத்திரி அரசு ஈடுபடும்போது, தாழி உடைந்த கதையாகி விட்டது வடக்கின் தீர்மானம் என்று ‘தி ஹிந்து’ அழுது வடிகிறது. ‘அவர் சொன்னார்’, ‘இவர் சொன்னார்’ என்று, தமது கருத்தினை வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசி வித்தை ஹிந்துவிற்கு நன்றாகத் தெரியும். மகிந்தருக்கு முன்னால் சத்தியப்பிரமாணம் செய்த, இப்போதுதான் ஜனநாயக் காற்றினை தமிழ் மக்கள் சுவாசிக்கின்றார்கள் என்று கூறிய, மாகாணசபை ஊடாக மக்களின் இயல்பு வாழ்வினை மீட்டெடுப்போம் என்ற முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள், ஆட்சிமாற்றத்தின் முக்கிய காலகட்டத்தில் ‘பெர்லின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ (Permanent Peoples’ Tribunal) போன்று ஒரு அறிக்கையைத் தீர்மானமாக, அதுவும் மக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அவையில் முன்வைப்பார் என்று இந்திய தென் வளாகமும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களமும் எதிர்பார்த்திருக்காது.வாக்களித்த மக்கள் சொந்த இடத்திற்கு திரும்பமுடியாமல் இராணுவம் தடுக்கும்போது, எவ்வாறு மாகாணசபையை நடாத்தமுடியும்?. அதிகாரத்தைதந்த மக்கள் அகதிகளாக வாழும்போது, இந்தப் பதவிகளை வைத்து என்ன செய்ய முடியும்?. ஆகவே இத்தீர்மானத்தை, பெரும்பான்மை இன மக்களிடம் வரலாற்றுபூர்வ ஆதாரங்களுடன் முன்வைப்பதைத்தவிர வேறு வழி இல்லையென்கிற முடிவுற்கு முதல்வர் வந்திருக்கிறார்.ஈழத் தமிழின வரலாற்றின் இருண்ட அரசியல் பக்கங்களை சட்டபூர்வ சான்றுகளோடும், ஐ.நா.நிபுணர் குழு மற்றும் அறிவார்ந்த உலகப்பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கைகளோடும், யாஸ்மின் சூக்காவின் பிரத்தியேக பார்வையையும் தாங்கிவந்துள்ள இத்தீர்மானமானது, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ( structural genocide) முக்கிய பகுதியான நில ஆக்கிரமிப்பின் வரலாற்றினை முன்வைத்திருந்தால், இன்னும் கனதியாக இருந்திருக்கும்.இறைமையுள்ள ஓர் பூர்வீக தேசியஇனத்தினை ஐ.நா.வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசொன்று படுகொலை செய்யும்போது , அதனை மனித உரிமை மீறல் -மானுடத்திற்கு எதிரான குற்றம் என்று விளக்கம் கொடுக்கும் வல்லரசுகள், அத்தேசிய இனத்தின் வாழ்விடங்களை வேறொரு இனம் அடாத்தாகக் கையகப்படுத்துதலை எந்த வரையறைக்குள் வைத்துப்பார்க்கும்?. எமது பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்கிற முதல்வரின் நோக்கம் முற்போக்கானது. பேரினவாதத்தின் பிரமாண்டமான ஊடகங்களை ஊடறுத்து, எவ்வாறு சிங்கள மக்களிடம் இச்செய்தியைக் கொண்டு செல்ல முடியும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.இதனை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் ஓர் ஆழமான விவாதத்தினை ஏற்படுத்த முயன்றால், ‘நமட்டுச் சிரிப்புச் சிரித்த’ இரணில் விக்கிரமசிங்காவும், சிந்தனைத்தடைபோடும் ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மாநாயக்க தேரர்களும் இதனை அனுமதிப்பார்களா?.மும்மொழி பேசும் ரவிராஜ் போன்றவர்களின் இருப்பினையே அனுமதிக்காத பெருந்தேசிய இன அதிகாரவாசிகள், அந்த இனவாதச் சுவரினை ‘பெர்லின் சுவர்’ போல் இலகுவில் உடைக்க விடுவார்களா?.இதனை, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு (JDS ) சிங்களத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்பதைத் தவிர வேறு தளங்களில் இம்முயற்சி நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.‘அழிப்பிற்கு மகிந்த இராஜபக்ச- அழித்தவர்களைக் காப்பதற்கு மைத்திரி’ என்று சுழலும் பேரினவாத அதிகார அச்சு, தனது இயக்கத்தையும், இயங்குதளத்தையும் மாற்றப்போவதில்லை என்பதனை முதல்வரின் தீர்மானம் மிகப் பூடகமாக வெளிப்படுத்தியுள்ளது.ஆனால் தீர்மானத்தை நிறைவேற்றிய மாகாணசபை, அடுத்து என்ன செய்யப்போகிறது?. அடுத்ததாக, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் மிக மோசமாக பாதிப்புற்ற கிழக்கில் இருக்கும் மாகாணசபையில், இதே போன்றதொரு இன அழிப்பிற்கு நீதி கோரும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவருமா?. ஏனெனில் இது வடக்கின் பிரச்சினை மட்டுமல்ல, வட – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பொதுப் பிரச்சினை.