யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது.

யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது.

நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் ஜ.நாவிற்கான தமது மகஜரை எடுத்து சென்று கையளிக்க மன்னார் ஆயர் அதிவண இராயப்பு யோசேப் ஆண்டகை மற்றும் இந்து மதகுரு வாசுதேவக்குருக்கள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

போராட்டத்தில் சமயத்தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். முன்னதாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவிரவாக படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் எங்கெணும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சிவில் உடையிலும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவை எதனையும் பொருட்படுத்தாது மிகுந்த வீதி போக்குவரத்துக்கட்டுப்பாட்டுடன் போராட்டகாரர்கள் ஊர்வலத்தை தொடர்ந்திருந்தனர்.

குறிப்பாக போராட்டகாரர்களிற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் ஆயர் அதிவண இராயப்பு யோசேப் ஆண்டகை மற்றும் இந்து மதகுரு வாசுதேவக்குருக்கள் இணைந்து ஊர்வலத்தை முன்னடத்தியிருந்தனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக பிரதிநிதிகள் தென்னிலங்கை பெரும்பான்மையின மாணவ பிரதிநிதிகள், மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள் என சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கு தோள் கொடுத்து இணைந்திருந்தனர்.

22012ம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன பேரணி இரும்புக்கரங்கொண்டு அடக்கப்பட்டிருந்த நிலையினில் இன்றைய போராட்டம் அனைத்து தரப்புக்களது கவனத்தையும் ஈர்த்திருந்தது.


இது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பேரணியாக அமைகின்றது.

நாங்கள் ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளோம் என்பதைக் காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் எமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் இப்பேரணி ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஒரே குடையின் கீழ் ஈழத்தமிழர்களாக கலந்து கொண்டு எமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர் இராசகுமாரன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.


பல்கலைக்கழக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.








நன்றி:பதிவு