ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையை முன்னர் திட்டமிட்டிருந்த படி, மார்ச் மாதமே வெளியிட வேண்டும் எனக் கோரி, யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த பெப்ரவரி 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அறவழிப் போராட்டம் நியுயோர்க்கிலும் ஜெனிவாவிலும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. அதன் வெளிப்பாடே, ஐ.நா பொதுச் செயலாளரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்மட்ட அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் (Jeffery Feltman) யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் கொழும்பை வந்தடைந்த ஜெப்ரி பெல்ட்மன் கொழும்பில் மட்டுமே சந்திப்புக்களை நடாத்துவார் என்று ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரெபனி டுயாறிக்(Stephane Dujarric) பெப்ரவரி 24ம் திகதி வரை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆயினும், இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது(26-02), ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் சென்று சந்திப்புக்களை மேற்கொள்வார் என்று நியுயோர்க்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது.


இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோக்கிம் ரூக்கர்(Joachim Rucker), ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை பிற்போடப்பட்டதை “மிகவும் தர்க்கரீதியானது” , “ஒப்பீட்டளவில் தனித்துவமானது” என நியாயப்படுத்தி உள்ளார்.

யாழில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பின்னரே இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களும் யாழில் இடம்பெற்ற பேரணியை அதிக சிரத்தையுடன் அவதானித்ததாக அறியமுடிகிறது. அறிக்கையை திட்டமிட்டபடி மார்ச் மாதம் வெளிவரப்பண்ணாவிட்டாலும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் போராட்டம் மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்திய மேற்குலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

இதனூடாக “மண்சுமந்த மேனியர்”, 2001 சனவரி 17ல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் என்ற வரிசையில், நீதி கோரி யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் 2015 பெப்ரவரி 24ம் திகதி இடம்பெற்ற போராட்டமும் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசால் முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு நடாத்தப்பட்ட பின் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுச்சியும் உணர்வும் மிக்க பேரணி என இதனைப் குறிப்பிடமுடியும். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை பிற்போடப்பட்டமை, வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட “தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இனஅழிப்பு” தீர்மானத்துக்கு கன்னத்தில் கொடுக்கப்பட்ட அறை என்ற தொனிப்பட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன், “நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை” என்று வடமாகாண சபையின் சனநாயக நடவடிக்கையை இனவாத செயற்பாடாக முத்திரை குத்தியதோடு, மறைமுக அச்சுறுத்தலையும் பிரதமர் விடுத்திருந்த சூழலிலேயே, யாழ் பல்கலைக்கழக சமூகம் நீதிகோரி இப்போராட்டத்தை மேற்கொண்டது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்குள் முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எல்லாம் சவால் விடுகின்ற ஒரு நகர்வாகவே இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இன்றைய அரசியல் சூழலோடு வாழத் தயாராக இருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே தமது நலன்களுக்காக தேவையற்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடாத்துவதோடு, குழப்பங்களையும் ஏற்படுத்துகிறார்கள் என்ற தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கும் இந்த போராட்டம் தீர்க்மான செய்தியொன்றை சொல்லியுள்ளது.

பல்கலைக் கழக சமூகங்களைப் பொறுத்தவரை தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பாகவே தமது இனத்தின் விடுதலைக்கான அவர்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. கொசொவோவின் பிறிஸ்ரினா பல்கலைக்கழக சமூகம் சந்தித்த இழப்புக்கள், விடுதலைக்காக அவர்கள் கொடுத்த விலை போன்றவை இதற்கு ஒரு உதாரணமாகும். பிறிஸ்ரினா பல்கலைக்கழக சமூகம் இழப்புக்களைக் கண்டு பின்வாங்கவில்லை. தமக்குரிய வரலாற்று பொறுப்பையும், தார்மீகக் கடமையையும் முன்னிலைப்படுத்திய போது அவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது. விளைவு 800 விரிவுரையாளர்கள் அவர்களது பணியிலிருந்து அகற்றப்பட்டார்கள். மொத்த மாணவர் தொகையான 23 ஆயிரத்தில் 22,500 மாணவர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் பங்குபற்றுவதிலிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பலத்த அவலங்கள், வேதனைகள், சவால்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்த அவர்களின் போராட்டங்கள் நீண்டகாலத்தில் கொசொவோ சுதந்திரம் அடைவதற்கான காரணங்களில் முதன்மையானது. கொசொவோ தனது ஏழாவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 17 ம் திகதி கொண்டாடிய சூழலில், நீதிக்கான பெரும் போராட்டத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் பெப்ரவரி 24 ம் திகதி முன்னெடுத்திருந்தது. சுதந்திரமான சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கும் யாழில் இடம்பெற்ற போராட்டம், பொறுப்புக் கூறும் கடப்பாட்டுக்கான உள்ளகப் பொறிமுறையை உருவாக்குகிறோம் என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் கபட நாடாகத்துக்கு சவால் விடுத்திருக்கிறது.

அதேவேளை, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்ற, தான் முன்னர் சமர்ப்பித்த ஆவாண நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், போரின் இறுதிக் காலப்பகுதியில் 30 ஆயிரம் தொடக்கம் 35 ஆயிரத்துக்கு அதிகமான சடலங்கள் விசுவமடுப்பகுதியில் காணப்பட்டதென்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். அத்துடன், குற்றம் செய்தவனை நீதவானாக்குவது எப்படி? குற்றம் சாட்டப்பட்ட நபரும் நீதவானும் ஒருவராக இருக்க முடியாது எனக் கூறி சிறீலங்காவின் உள்ளக விசாரணையை கேள்விக்குட்படுத்தியுள்ளார். இதேவேளை, உள்ளக விசாரணையை நிராகரித்து தமிழ் சிவில் சமூக அமையம் தொடங்கியுள்ள கையெழுத்துப் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளவரை நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட முடியாது எனக் கூறினார் மகிந்த ராஜபக்ச. அரசியல் தீர்வு வேண்டுமென்றால் சர்வதேச விசாரணையை – நீதியை கைவிடுங்கள் என்ற செய்தியை மைத்ரிபால – ரணில் அரசாங்கம் சூட்சுமமாக தெரிவித்த நிலையிலேயே, தமிழர்களின் நீதிக்கான போராட்டமும் முனைப்படைந்துள்ளது. 

மறுபுறம், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு அங்கமே, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் 2015 பெப்ரவரி 19 சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைத் தீவு தொடர்பான முதலாவது தீர்மானத்தை கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றபோதே, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றுவோம் என்று அன்றைய நீதியமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் 2012 மார்ச் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூன்றாவது தீர்மானம் 2014 மார்ச்சில் நிறைவேற்றுவதைத் தவிர்க்கும் முகமாக, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மாதிரியை அமுல்படுத்தப் போவதாக மகிந்த அரசாங்கம் கூறியது. சுருங்கக்கூறின், அன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களைத் தவிர்ப்பதற்காக, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான ஆணைக்குழு போன்றதொரு ஆணைக்குழுவை உருவாக்குவோம் என ராஜபக்சக்களின் அரசாங்கம் கூறியது. இன்று, சர்வதேச விசாரணையை தவிர்ப்பதற்காக, குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளதோடு, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான ஆணைக்குழு போன்றதொரு ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான முயற்சியில் மைத்திரி-ரணில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதல்ல மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம். ஆனால், தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப் போவது போன்ற ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இன்றைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுதலும், ஆணைக்குழுக்கள் அமைப்பதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனை, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மங்கள சமரவீரவின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றது. அனைத்துலக விசாரணையொன்றுக்கான அவசியம் இல்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கை. நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றே அவசியம் என்பதை நாம் அன்றும் கூறியிருந்தோம். இப்போதும் எமது இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால், சர்வதேச சமூகத்தை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, சர்வதேச சமூகத்தின் இணக்கப்பாட்டுடன் உள்ளக விசாரணையை முன்னெடுப்போம் என ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு கடித மூலம் தெரிவித்ததாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் லக்ஸ்மன் கிரியெல்ல, முன்னைய அரசாங்கம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாகவும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதாகவும் சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்தது. ஆனால், செயற்படுத்தவில்லை. ஆதலால்தான், சர்வதேச விசாரணை தேவையென்ற நிலையேற்பட்டது. தற்போது இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார். ஒருதுளி இரத்தம் கூட சிந்தாமல் மௌன யுத்தம் புரிந்த ரணில் 6000 உறுப்பினர்களை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றி அவர்களை பலவீனமடையச் செய்தார் என 2008 ம் ஆண்டின் முற்காலப் பகுதியில் நாடளுமன்றில் இறுமாப்புடன் கூறியவர்தான் இந்த லக்ஸ்மன் கிரியெல்ல.

அன்று சமாதானப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டே, சமதரப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியவர்கள், இன்று தமிழர்களுக்கு நீதி வழங்குவோம் என்று கூறிக்கொண்டே தமிழர்களுக்கான நீதியை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

ஆதலால், பொறிகளுக்குள்ளும் மாயைகளுக்குள்ளும் சிக்காமல் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்படுவதோடு, உள்ளகப் பொறிமுறையையும் அதற்கு ஆதரவான தரப்புகளையும் நிராகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.