ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசாங்கம், தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகள் முடுக்கி விட்டுள்ளது.

10-03-2015 அன்று இலங்கைத் தீவுக்கு வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வளைத்துப் போடும் முகமாக, சீனாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் போர்ட் சிற்ரி திட்டத்தை இடைநிறுத்துவதற்கு சிறீலங்காவின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தியா பயன்படுத்துகின்ற தமிழர் அரசியல் துருப்புச் சீட்டை கையாளும் முகமாக, மோடி அவர்கள் வடகிழக்குப் பகுதிக்கு செல்வதற்கு முன்னர் அவசர அவசரமாக சிறீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் வடகிழக்குப் பகுதிக்கான விஜயம் ஒன்றை இம்மாதம் முதல்வாரத்தில் மேற்கொண்டிருந்தார்.

இதனூடாக மீள்நல்லிணக்கத்திற்கும் அதிகார பரவலாக்கத்திற்குமான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகிறது. மறுபுறம், ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள 28 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கோடு மிகக் கவனமாக எழுதப்பட்ட உரையை சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் ஆற்றினார். இலங்கைத் தீவில் சனநாயகம் மீளத் திரும்புகிறது, நல்லாட்சி நடைபெறுகிறது, மனித உரிமை பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று ஜெனிவாவில் மங்கள சமரவீர அவர்கள் கூறிக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே பிரெஞ்சு பிராசா உரிமைய கொண்ட எட்டு வயதுடைய தமிழ்ச் சிறுமியும் அவரது தாயாரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணை திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மீதான இராணுவ புலனாய்வு துறையின் கண்காணிப்பு தொடர்வதோடு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் தொடர்வதாக தெரிவித்துள்ளனர். தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல் விடும் சம்பவங்களும் தொடர்வதை அறியமுடிகிறது.

இத்தனைக்கும் மத்தியில் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உறுத்தும்படி தமிழர் தாயகத்தில் நீதிக்கான போராட்டங்கள் தொடர்கிறது. சிறீலங்காவில் சனநாயகம், மனித உரிமை என்று மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குரல் எழுப்பிய கொழும்பை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களை சார்ந்தோரும், சிவில் சமூகத்தினரும் தமிழர்களின் நீதிக்கான குரலுக்கு தமது உறுதியான ஆதரவை வழங்காதது மட்டுமன்றி சில தருணங்களில் தமிழர்களின் நீதிக்கான நகர்வுகளை கடுமையாக விமர்சிக்கும் சூழல் தீவிரம் பெற்றுள்ளது. இது முகம்மூடியோடு உலாவிய சிங்கள இனவாதிகளையும் அடையாளம் காண்பதற்கான ஒரு சூழலாக அமைந்துள்ளது.

இத்தகைய சூழலில், அண்மையில் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்த ஐ.நா பொதுச் செயலாளரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்மட்ட அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள், வடக்கு மாகாண சபையில் இம்மாதம் பெப்ரவரி 10ம் திகதி நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க “தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு” தீர்மானத்தின் பிரதியொன்றை பெற்றுக்கொண்டதோடு, தமிழர்களுக்கு உரித்தான நிலங்கள், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மற்றும் காணமல் போன தமிழர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சிறீலங்கா அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன், தமிழ் சிங்கள சமுதாயங்களுக்கிடையில் நம்பிக்கையீனம் அதிகரித்து காணப்படுவதையம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டங்களுக்கு உரிய பதிலையும் அங்கீகாரத்தையும் சிறீலங்கா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்காவிட்டால், இரு இனங்களுக்கிடையில் நிலவும் நம்பிகையீனம் கூர்மையடைந்து தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையிலான இதயசுத்தியுடனான நல்லிணகத்திற்கான வாய்ப்புக்களை காலப்போக்கில் இல்லாமல் போகக்கூடிய ஆபத்துள்ளதை குறித்த தரப்புகள் காலம் தாமதிக்காது உணரவேண்டும்.

தமிழ் மக்கள் தமது நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் தாமகவே போராடி ஒரு அழுத்த சக்தியாக உருமாற முயலும் வேளையில், ஐ.நா மனித உரிமைகள் போரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் மத்தியில் உரை ஆற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அவர்கள் அழுத்தங்களின் மூலம் உருவாகும் மாற்றங்களால் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளவதோடு சுதந்திரத்தையும் விரிவுபடுத்தமுடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த இரு விடயங்களுக்களுக்கிடையில் நேரடித் தொடர்பு இல்லாத போதும், தமிழ் மக்களின் அழுத்தத்தை உண்டுபண்ணக் கூடிய அண்மைக்கால அறவழிப் போராட்டங்கள் சர்வதேச சமூகத்தின் கரிசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச அழுத்தத்தை தன்னிலும் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது உண்டுபண்ணியுள்ளது.

அதனடிப்படையிலேயே, கடந்த கால தோல்விகள் மீண்டும் ஏற்பாடதிருக்கும் முகமாக, பொருத்தமான பொறிமுறையை உருவாக்குவதற்காக மக்களுடன் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வேண்டியுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளர். பாதிக்கப்பட்ட மக்களின் மனத்தாங்கல்களையோ அபிலாசைகளையோ சிறீலங்கா அரசாங்கமோ அவர்களினால் உருவாக்கப்படப் போகும் பொறிமுறையோ உள்வாங்கப் போவதில்லை என்பது கடந்த கால வரலாறு ஊடாக கற்றுக்கொண்ட பாடம். ஆயினும், இது இலங்கைத் தீவு தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதை வெளிப்படுத்திதுகிறது. இந்த சூழலை அதிகரிப்பதனூடாக தமிழ் மக்களுக்கான உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் முன்னகர முடியும்.

சிறீலங்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்கவேண்டுமென்ற நேர்மையும் அர்ப்பணிப்பும் அவர்களிடம் இல்லை என்பதை கடந்த ஐம்பது நாட்களில் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக அவர்கள் திரைமறைவில் மேற்கொள்ளும் நகர்வுகள் எடுத்துக்காட்டுகிறது. காலம் அவகாசம் கோரி உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்ற ஒரு பிம்பத்தை உலகின் மத்தியில் உருவாக்கி காலப் போக்கில் தமிழர்களுக்கான நீதியை இல்லாமல் செய்வதற்கான நகர்வுகளே சிறீலங்கா அரசாங்கத்தால் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த அடிப்படையிலேயே தென்னாபிரிக்காவின் உண்மைக்கும் மீள்நல்லிணகத்திற்குமான ஆணைக்குழு மாதிரியை இலங்கைத் தீவிலும் உருவாக்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முயல்கிறது. ஈழப்போராட்டத்தில் தென்னாபிரிக்காவின் வகிபாகத்தையும், தென்னாபிரிக்காவின் உண்மைக்கும் மீள்நல்லிணகத்திற்குமான ஆணைக்குழு மாதிரி ஏன் இலங்கைத் தீவுக்கு பொருத்தமற்றது என்பதையும் விளக்கும் வண்ணம் 2014 மார்ச் 09ம் திகதி வெளிவந்த ஞாயிறு தினக்குரலில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இதனை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம். http://tinyurl.com/oeuy6ud.

சிறீலங்கா அரசாங்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட எந்தப் பொறிமுறையும் தமிழர்களுக்கு நீதியை வழங்கப் போவதில்லை. உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்க வேண்டிய எமது மக்கள், உள்நாட்டு பொறிமுறையும் வெளியக பொறிமுறையையும் ஒன்றாகக் கொண்ட கலப்பு மாதிரிகள் (Hybrid model) தொடர்பாக மிக கவனமாக இருக்க வேண்டும். போர்க்குற்றம் இனஅழிப்பு தொடர்பாக விசாரித்து நீதி வழங்குவதற்காக சர்வதேச ரீதியில் முதன்மையான ஆறு கலப்பு மாதிரி நீதிமன்றங்கள் – தீர்ப்பாயங்கள் செயற்படுகின்றன. இவற்றில் கிழக்கு தீமோர் மற்றும் கொசொவோவுடன் தொடர்புடைய கலப்பு மாதிரி நீதிமன்றங்கள் ஐ.நாவால் உருவாக்கப்பட்டு முகாமைத்துவப்படுத்தப்படுபவை. கம்போடியா (The Extraordinary Chambers in the Courts of Cambodia-ECCC) மற்றும் சியரலியோனுடன் தொடர்புடைய நீதிமன்றங்கள் ஐ.நாவுக்கும் குறித்த இறைமையுடைய நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பெறுபேறால் உருவாக்கப்பட்டவை. இதில் ஒன்றான கம்போடிய சிறப்பு நீதிமன்ற மாதிரி இலங்கைத் தீவில் அண்மையில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆயினும் இது தமிழ் மக்களுக்கு உரித்தான நீதியை வழங்கப் போதுமானதா என்ற பலமான கேள்வி உள்ளது. ஏனெனில், சாதாரணமாகவே, சிறீலங்கா அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்பதில் சாணக்கியமுடையது. உறுதியான அழுத்தங்கள் இல்லாததால் கம்போடிய நீதிமன்றம் இனஅழிப்பு இடம்பெற்று இருபத்தேழு வருடங்களுக்கு பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. கம்போடியவில் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பாக விசாரித்து நீதி வழங்கும் முகமாக நீதிமன்றத்தை உருவாக்குவதற்காக ஐ.நாவுக்கும் கம்போடிய அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமார் எட்டு வருடங்கள் நீடித்தது.

ஆனால், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தங்களை பிரபலப்படுத்தாத சில சிங்கள ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடனும் நேர்த்தியான திட்டமிடலுடனும் செயற்பட்டதால் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தத்தை வழங்க முடிந்தது. இதன் பயனாக போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சுமார் மூன்று மாதத்திலேயே இலங்கைத் தீவில் இடம்பெற்றது போர்க்குற்றம், மானுட குலத்திற்கு எதிரான குற்றம் என்ற அடிப்படையில் கருத்தாடல்கள் மேலெழுந்ததோடு அது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்கள் இலங்கைத் தீவு தொடர்பாக நிறைவேற்றப்படுவதற்கும் தூபமிட்டது.

கம்போடியாவில் ஏப்ரல் 17, 1975 க்கும் சனவரி 6, 1979 இடையேயான 3 வருடம் 8 மாதம் 20 நாட்களில் 1.7 மில்லியன் மக்கள் பட்டினி, கட்டாய பணிக்கு அமர்த்தப்பட்டமை, மரண தண்டனைகள் மற்றும் சித்திவதை உட்பட்டவையால் மரணமடைய நேரிட்டது. 1.7 மில்லியன் மக்கள் சுமார் 4 வருடத்துக்கும் குறைவான காலப்பகுதிக்குள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், அதனை விசாரிப்பதற்கான நீதிமன்றம் இரு தசாப்தங்களின் பின்னரே உருவாக்கப்பட்டது. அதனை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் எட்டு வருடங்கள் நீடித்தது. இதற்கான நிலைமாற்று கால நீதியாக கம்போடியாவில் இன்று காணப்படுவது நினைவுகூரல்கள் மட்டுமே.

மேற்குலகத்துக்கு பிடிக்காததாக ராஜபக்சக்களின் ஆட்சி சிறீலங்காவில் இருந்தமை மட்டுமல்ல, தமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்காக தாமே போராடி, அதனூடாக அழுத்தங்களை தமிழர்கள் உருவாக்கினார்கள். அது ஏனைய நாடுகளின் நீதி தேடும் நடவடிக்கைகளோடு ஒப்பிடுமிடத்து, தமிழருக்கான நீதி விவகாரத்தை சர்வதேச மனித உரிமைகள் சமூகத்துக்கு மத்தியில் விரைவாக மையப்படுத்தியமைக்கு காரணமாகியது.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததொடு, தமிழருக்கான நீதி நீர்த்துப் போவதற்கான சாத்தியப்பாடுகள் தோன்றியுள்ளது. ஆகவே, தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தங்களை உண்டுபண்ணும் முகமாக வரலாற்றில் என்றுமில்லாதவாறு அறவழிப் போராட்டங்களை தொடர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் பரவலாகவும் முன்னெடுக்க வேண்டும். தமிழர்களுடைய வாக்குகள் சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்தை உண்டுபண்ணியது. இனி அழுத்தங்களை உருவாக்கவல்ல தமிழர்களுடைய அறவழிப் போராட்டங்களே அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள பக்கத்துணையாக இருக்கும்.