நோ பயர் சோன் படப் பிரதியை பெற மைத்திரிபால இணங்கவில்லை!- கெலம் மெக்ரே March 12, 2015 Uncategorized தாம், தயாரித்த நோ பயர் சோன் விவரணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு செனல் 4 தயாரிப்பாளர் கெலம் மெக்ரே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சத்தமிட்டு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர உள்ளிட்டோர் இலக்கம்10, டௌனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமரின் இல்லத்தில் பிரதமர் டேவிட் கெமரோனை சந்தித்து விட்டு திரும்பியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நோ பயர் சோன் என்ற படத்தின் சிங்கள பிரதியை இலங்கையின் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று மெக்ரே, மைத்திரிபாலவிடம் கோரினார். அத்துடன் நோ பயர் சோனின் சிங்கள பிரதியை அவர் மைத்திரிபாலவிடம் வழங்க முயற்சித்த போதும் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மெக்ரே, தமது பிரதியை பெற்றுக்கொள்ள மைத்திரிபால இணங்கவில்லை என்று குறிப்பிட்டார். இதன்போது செய்தியாளர் ஜொனாதன் மில்லரும் தம்முடன் இருந்ததாக மெக்ரே கூறினார். அவர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் பேசமுற்பட்ட போது, தமக்கு 6 மாத கால அவகாசம் தருமாறும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மங்கல குறிப்பிட்டதாக மெக்ரே குறிப்பிட்டார். இதேவேளை நோ பயர் சோனின் சிங்கள பிரதியை பொறுத்தவரையில் அது தமக்கு வெற்றியை தந்துள்ளதாக அவர் கூறினார். இதுவரையில் 19000 தடவைகள் http://nofirezone.org/ என்ற இந்த இணையத்தளம் பார்க்கப்பட்டுள்ளதாக மெக்ரே தெரிவித்தார். இலங்கையில் இந்த படத்தை திரையிட அனுமதிக்குமாறும் அதன்பின்னர் விவாதம் ஒன்றுக்கு தாம் தயார் என்றும் மெக்ரே குறிப்பிட்டார். இதற்கிடையில் குறித்த சம்பவத்தின் பின்னர் மெக்ரேயை அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நோ பயர் சோன் காண்பிக்கப்படும் இணையத்தளம் இலங்கையில் தடைசெய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாக கொழும்பின் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.