மோடி வருகையின் போது போராட்டம்! பலதரப்புக்களும் இணைந்து கொண்டன! March 14, 2015 News மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அமைதிப்படை காலத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோர் உள்ளிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வருகை தரும் சமயம் யாழில் மாபெரும் ஊர்வலத்துடன் கூடிய மௌனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் யாழ்.வருகை தரவுள்ள நிலையில் குறித்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்விகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல்,மீள்குடியேற்ற மக்களுக்காகவழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை இலட்சமாக வழங்குதல், இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல்,வளங்களை அழிக்கும் தொழில் முறையைத் தடை செய்தல், இழுவைப்படகால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், சரணடைந்தவர்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல்,போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது. போராட்டகாரர்கள் பின்னர் ஊர்வலமாகப்புறப்பட்டு வைத்தியசாலை வீதி மற்றும் கோவில் வீதியினூடாக நல்லூரிலுள்ள இந்திய துணைதூதுவராலயத்தை சென்றடைந்தனர். அங்கு தூதுவராலயம் முன்னதாக மறியல் போராட்டமொன்றை முன்னெடுத்த அவர்கள் பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை மோடியிடம் கையளிக்க ஏதுவாக துணைதூதரக அதிகாரிகளிடம் கையளித்தனர். தூதரகம் முன்னதாக வீதியை மறித்து காணாமல் போனோரது குடும்பங்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்கள் பலரும் வீதியில் கதறி அழுதனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மட்டுமே அரசியல் தரப்பாக பங்கெடுத்திருந்தனர். போராட்டகாரர்கள் மோடியின் வருகையை முற்றுகை மூலம் தர்மசங்கடத்திற்குள்ளாக்கலாமென்ற அச்சத்தில் இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்ச உயர்மட்ட அதிகாரிகள் பலரும் அச்சத்துடன் போராட்ட சூழலில் நின்றிருந்தனர். எனினும் போராட்டகாரர்கள் எந்தவித குத்தகமும் எவரிற்கும் விழைவிக்காதே தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை மோடியின் இலங்கை விஜயம் மற்றும் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகம் செயற்படுகின்றமை என்பவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றன. இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுவதாகவும் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட தாமதமாக அமெரிக்காதான் காரணம் என்றும் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மோடிக்கு எதிர்ப்பு பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 300 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்தேசிய விடுதலை இயக்கம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, பெரியார் விடுதலை கழகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கேற்றன. இலங்கையுடன் இந்தியா எவ்வித உறவும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகவும் மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்தும் அவர்கள் பலவித முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களை, சைதாப்பேட்டை s.p.s திருமணமண்டபத்தில் அடைத்துவைத்த பொலிஸார், பின்னர் அவர்களை விடுவித்தனர்.