தமிழர்களுக்கெதிரான இந்திய நடவெடிக்கைகளில் மிகமோசமான காலகட்டம் இது-திருமுருகன் காந்தி March 15, 2015 News தமிழர்களுக்கெதிரான இந்திய நடவெடிக்கைகளில் மிகமோசமான காலகட்டமாக வரும் மோடி-மைத்ரிபாலாவின் ஆட்சிகாலம் இருக்கப் போகிறது. ஒவ்வொரு பிரதமரும் அதற்கு முந்தைய பிரதமரைவிட ஒரு படி மோசமானவராகவே தமிழர்களை கையாள்வதை பார்க்கிறோம். காங்கிரஸ் அரசு ஒரு இனப்படுகொலையை தமிழர்கள் மீது நிகழ்த்தியதெனில், மோடி அரசு பண்பாட்டு, பொருளாதார தாக்குதலை தமிழர்கள் மீது நிகழ்த்துவதற்கான அடித்தளத்தினை போட்டுள்ளது. 2009க்கு பின் ஈழத்தில் தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கும்பல்கள் கடந்த வருடங்களில் உருவாக்கிய வலைப்பின்னலை இறுக்க ஆரம்பிப்பார்கள். இந்தி மொழி பாட வகுப்புகளை யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் கடந்த வருடங்களில் ஆரம்பித்திருந்தது. இந்துத்துவத்தின் பண்பாட்டு கூறுகளையும், சீரழிவுகளையும் துவக்க ஆரம்பித்திருந்தது. திலீபனின் நினைவு தூணை இடித்து விட்டு யாழில் இருக்கும் இந்திய தூதரகம் தமிழர்களின் துயரச் சின்னமாக மாறப் போகிறது. இதன் குறியீடாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்தில் 1987இல் இந்தியாவின் கமெண்டோ படைகள் தேசியத்தலைவரை கொலை செய்ய இறக்கப்பட்ட அதே மைதானத்தில் மோடி இறங்குகிறார். தமிழர்களிடத்தில் உரை நிகழ்த்தும் மோடி ‘இந்தி’ மொழியில் பேசி இருக்கிறார். கொழும்புவில் ‘ஆங்கிலத்தில்’ பேசி இருக்கிறார். பொருளாதார முதலீடுகள் இறக்கப்பட இருக்கின்றன. சம்பூரின் வெளியேற்றப்பட்ட தமிழர்களைப் போல பல ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை இழ்ப்பதற்குரிய அறிகுறிகளை மோடி அறிவித்து விட்டு போய் இருக்கிறார். பெளத்த பிக்குகளிடத்தில் அளவு கடந்த மரியாதை வைப்பதன் காரணம் , இலங்கையின் பெளத்தம் பார்ப்பனியத்தின் கூறுகளை அதிகம் உள்ளவாங்கிய தேரவாத பெளத்தம். ஒரு பார்ப்பன குருமாருக்கு கொடுக்கும் மரியாதையை மோடி கொடுத்திருக்கிறார். 1.50 லட்சம் தமிழர்களை கொலை செய்தவர்களுக்கு தமது மிகப் பணிவான நன்றியை இவ்வாறு தெரிவித்திருக்கலாம். இனவெறி பிக்குகளுக்கு தலைவணங்க ஒரு இனப்படுகொலையானால் மட்டுமே முடியும். இதைச் செய்யும் தகுதி மூன்று பேருக்கு உண்டு, ராஜபக்சே, மைத்ரிபாலா/ரணில், மோடி…. இந்தியாவினை நெருக்கடிக்குள்ளாக்கவும், இனபடுகொலைக்கு காரணமான கும்பல்களை உலக அளவில் அடையாளம் காட்டவும் அணி திரள்வோம்.