விபூசிகாவை விடுவிக்க மறுக்கும் சிறுவர் இல்லம் March 20, 2015 News பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி , அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவரது மகளான விபூசிகாவை இன்னும் ஜெயகுமாரியிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூசிகா நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிளிநொச்சியில் உள்ள மகாதேவன் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 10 ஆம் திகதி விடுதலையான பின்னர், ஜெயகுமாரி தனது பிள்ளையை பொறுபேற்காக கடந்த 14 ஆம் திகதி சிறுவர் இல்லத்திற்கு சென்றிருந்தார். விபூசிகாவை விடுவிக்க வேண்டுமாயின் ஜெயகுமாரி தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் நீதிமன்ற உத்தரவு தொடர்பான ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என சிறுவர் இல்ல அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்குமாறு கோரி கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக ஜெயகுமாரியின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.