யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒட்டகபுலம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக  அவர்களின் காணிகளை பார்வையிட இன்றைய தினம் அனுமதியளிக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில், சொந்த மண்ணை 25 வருடங்களுக்குப் பின்னர் பார்க்க வந்திருந்த மக்கள் கண்ணீருடன் தமது இடம்பெயர் வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர்.

மேற்படி ஒட்டகபுலம், தென்மூலை, வடமூலை, தோலகட்டி ஆகிய இடங்கள் மீள்குடியேற்றத்திற்காக காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு பெருமளவான மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பார்க்கும் ஆவலுடன் வந்திருந்தனர்.

எனினும் இன்றைய தினம் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படும் 197 ஏக்கர் காணியில் சுமார் 50 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டதுடன், விடுவிக்கப்படாது என கூறப்பட்ட மற்றொரு கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுடைய காணிகளும் விடுவிக்கப்பட்ட நிலையில், சொந்த நிலத்தை பார்க்க வந்த மக்கள் ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும், தாம் கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.

நேற்று முன்தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவின் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஒட்டகப்புலம் பகுதியில் படையினரின் முகாம்கள் தவிர்ந்த சுமார் 197 ஏக்கர் நிலம், விடுவிக்கப்படுவதற்காக மக்கள் தங்கள் காணிகளை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் மக்கள் தங்கள் காணிகளை பார்வையிடுவதற்கும் துப்புரவு செய்வதற்குமாக சென்றிருந்தனர். எனினும் பதிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட மக்களில் 70வீதமான மக்களுடைய காணிகள், விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.

அச்சுவேலி- தெல்லிப்பளை வீதியில் உள்ள இந்த பிரதேசங்களில் இருந்த மக்களுடைய வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், படையினர் தற்போதும் தங்கியிருக்கும் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வீடுகள் மட்டும் உரியவாறு பராமரிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில், முட்கம்பி வேலிகள் போடப்பட்டு படைமுகாம்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் வசாவிளான் கிழக்கு ஜே.244, பலாலி தெற்கு ஜே.252 ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு காணிகள் தவிர்ந்த மக்களுடைய விவசாய காணிகளே பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எங்களுக்குப் பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம் எங்களுடைய மண்ணைண விடுங்கள் என மன்றாட்டமாக கேட்டுக் கொண்டு ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

இந் நிலையில் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட இடங்கள் விடுவிக்கப்படாமை குறித்து மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர்.