இங்கு நடந்தது ஒரு அமைப்புக்கு எதிரான போர் அல்ல. இனத்திற்கு எதிரான போர் ..தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்பதால் தான் படையினர் இன்னமும் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறார்கள் என்று அண்மையில் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களுக்கு எதிரான இந்தப் போரை வெளிக்கொண்டு வருவதில், பல பொறுப்பு வாய்ந்த சர்வதேச ஊடகங்கள் தங்கள் கடமையை ஆற்ற தவறிவிட்டன என்றும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

அண்மையில் முல்லைத்தீவில் “இந்தியா டுடே” ஊடகம் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தமிழ் மக்களின் தற்கால அரசியல் சூழல் தொடர்பில் செவ்வி கண்டிருந்தனர்.இதன் போது ரவிகரனால் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் பற்றி  விளக்கிக் கூறப்பட்டது.

அவற்றில் சில முக்கிய அம்சங்கள்,
போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிற நிலையிலும் படையினர் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்க வேண்டிய தேவை என்ன?
 ஏனெனில் இங்கு நடந்தது ஒரு அமைப்புக்கு எதிரான போர் அல்ல. தமிழ் இனத்திற்கு எதிரான போர். அது தற்போதும் நடைபெறுகிறது. தற்போது அது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நடைபெறுகிறது.
தமிழர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிய வகையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால், தமிழ் மீனவர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள். தமிழரின் ஏராளமான வயற்காணிகள் மணலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் விடுவிக்கப்படாமல் இருப்பதால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இடம்பெயரும் நிர்ப்பந்தம் தமிழர் மேல் திணிக்கப்படுகிறது.
தமிழர்கள் இங்கு எதிர் கொள்ளும் அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் பல பொறுப்பு வாய்ந்த சர்வதேச ஊடகங்கள் தங்கள் கடமையை ஆற்ற தவறி விட்டனர். குறிப்பாக எம் மக்கள் மலை போல் நம்பியிருந்தது இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களைத்தான்.
மேலும் தமிழர் தாயகத்தில் நடைபெறும் நில அபகரிப்பு பற்றிய முழுமையான விவரங்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகள் உள்ளடங்கலான பல சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஆதாரங்களுடன் ரவிகரன் கருத்துக்களை முன்வைத்தார் என அறிய முடிகிறது.