நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் விருது வென்ற கௌதமனின் ‘’புத்தாண்டு பரிசு’’ குறும்படம் March 21, 2015 News அன்பிற்கினிய என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! சமீபத்தில் நார்வே நாட்டில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எண்ணற்ற குறும்படங்களில் எனது உயிர் நண்பர் திரு. த.மணிவண்ணன் அவர்களும், பழ.ஜீவானந்தம் அவர்களும் இணைந்து தயாரித்து நான் இயக்கிய ‘’புத்தாண்டு பரிசு’’ எனும் படைப்பு தேர்வாகி ‘’சிறந்த இயக்குனர்’’ என அறிவிப்பு செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஈழத்தில் யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், அதனால் தங்களது தாலிகளை இழந்து நிற்கும் தொண்ணூற்று ஆறாயிரம் விதவைகளையும் சுமந்து தாங்க முடியாத துயரத்தில் நிற்கும் நமது தமிழினம், இன்று தாய்த்தமிழகத்திலும் யுத்தமில்லாமல் சத்தமில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மது என்னும் அரக்கனால் இரண்டு லட்சம் பெண்கள் விதவைகளாக நிற்கிறார்கள், கிட்டத்தட்ட நான்கு லட்சம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை சகித்துக்கொள்ள முடியாத கோபத்தினால் தான், நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘’புத்தாண்டு பரிசு’’ படைப்பினை செய்ய நேர்ந்தது. ‘’அரசு மக்களுக்கு தரும் பரிசு மது’’ ‘’மக்கள் அரசுக்கு தரும் பரிசு உயிர்’’ எனும் கருப்பொருளை இப்படத்தில் உக்கிரப்படுத்தி இருக்கிறேன்.. நார்வே திரைப்பட விழாக்குழு அறிவிப்பு தெரிந்த கணமே தனது எல்லையில்லா மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்த எனது பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்களது ‘’அதிர்வு திரைப்பட்டறை’’ அலுவலகத்திற்கே நேரில் வந்து, எனக்கும் எனது தயாரிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்களுக்கும் மரியாதை செய்து பெருமனதோடு வாழ்த்தியது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. நான் இதுவரை செய்த ஒவ்வொரு படைப்பும் என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும், இதுவரை உலகம் கண்டிராத வீரம் செறிந்த ஈழப்போராட்டத்தையும் பெரும் படைப்புகளாக்க நான் செய்து பார்க்கும் ஒத்திகை படைப்புகளேயாகும். திரு.பன்னீர்செல்வம், தம்பி. திரு.பாலமுரளிவர்மன், இசையமைப்பாளர் திரு.தாஜ்நூர், ஒலிக்கலவை செய்து தந்த நண்பர் சத்யா, அஜ்மல், என்றும் எங்கள் நினைவுகளில் வாழும் கிஷோர், இப்படைப்பினில் தயாரிப்போடு நாயகனாக நடித்தும் கொடுத்த திரு.பழ.ஜீவானந்தம் அவர்களுக்கும், என்னோடு தோள் நின்ற ஒவ்வொரு படைப்பாளியையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். மேலும் என் வாழ்க்கையின் பெரும் அங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிற எனது உயிர் நண்பர் திரு.மணிவண்ணன் அவர்களுக்கும் வெறும் நன்றி என்ற சொல்லை மட்டும் உரித்தாக்க முடியாது. இந்த விருதினை வழங்கும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என்னோட விருது பெற உள்ள என் தாய்த்தமிழ் திரைக்கலைஞர்களுக்கு எனது பிரியமான வாழ்த்துகள்! எனக்கு கிடைத்த இந்த விருதினை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் மற்றும் உலகம் முழுக்க பரந்து வாழ்ந்து கொண்டிருக்கிற எனது உயிருக்கு நிகரான தமிழ் உறவுகள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன். நன்றி! அன்போடு, வ.கௌதமன்