தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர்
இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு பல்லாயிரம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது .

புலம்பெயர் தேசமெங்கும் தமிழ் மொழியும், கலையும், பண்பாடும், வரலாறுமே எமது இனத்தைக் தாங்கி நிற்கும் என்பதை எமது எதிர்காலச் சந்ததிக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் எடுத்தியம்பி தனது இறுத்திக்காலம் வரை உழைத்த ஆசானுக்கு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வித்துடல் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

ஒரு தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு உன்னதமான மனிதருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் “மாமனிதர் ” எனும் அதிஉயர் மதிப்பளிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமது இறுதி வணக்கத்தை தெரிவித்தனர் .

மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்கள் தமிழ் மொழிக்காக ஆற்றிய பணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதை மீண்டும் அரங்கம் நிறைந்த மக்களிடம் பதிவு செய்ததை தொடர்ந்து யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பாக மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களுக்கான இரங்கல் உரைகளின் வரிசையில், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாகவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது நாட்டின் சார்பிலும் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினார்கள்.

பழ.நெடுமாறன் ஐயாவின் மற்றும் புரட்சிக் கவிஞர் காசிஆனந்தன்அவர்களின் இரங்கல் உரையும் காணொளியில் காண்பிக்கப்பட்டது.

உறுதி உரை இடம்பெற்று தமிழீழத் தேசியக் கொடி ஒப்படைப்பு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றதை தொடர்ந்து மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் வித்துடலை மண்டபம் நிறைந்த பல்லாயிரம் மக்கள் இருபுறம் நிரலில் நின்று மலர் தூவி வழி அனுப்பி வைத்தார்கள்