சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் அதிகாலை 3.18 அளவில் பிரிந்ததாக அந்நாட்டு பிரதமர் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்தார். லீ, கடந்த மாதம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1965-ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, மக்கள் செயல் கட்சியை தொடங்கி அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். 1959 – 1990 பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலகட்டத்தில் பிரிட்டிஷிடமிருந்து முழு அதிகாரத்தை அந்நாடு பெற்றது.

31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். துறைமுக நகரமாக மட்டுமே அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

திறமையான, பொறுப்பான, நீடித்த முற்போக்கான சிந்தனையுடய ஊழலைத் தடுக்கும் ஆட்சியாக அவரது ஆட்சிக் காலம் இருந்ததால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார்.

சுத்தமே முதல் நோக்கமாகக் கொண்ட அவர், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூரை சுத்தம் செய்தார். இதற்கு பின்னரே, சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

ஆட்சியில் இல்லாத போதிலும் ஆளுமையுடன் திகழ்ந்த அவர் ‘உலகின் பாலைவனச் சோலை’ என அனைவராலும் அழைக்கப்பட்டார். நிர்வாக செயல்பாட்டில் தொடர்ந்து பங்காற்றிய லீ, 2011-ஆம் ஆண்டு அமைச்சரவை செயல்பாடுகளிலிருந்து விலகினார். சமீப காலமாக வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை குறித்து லீ குவான் யூ

லீ குவான் யூ உடனான உரை யாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகளுடனான போர் 2009 இல் முடிவிற்கு வந்த நிலையில், இலங்கையின் இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டுகிறார்கள். ஆனால், சிறு பான்மையினரான தமிழர்களின் மனங்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.

முன்பும் இப்படித்தான் செய் தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயல்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத் தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர் களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான். மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத் தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள்.

அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிகையாளரும், லாஸ் ஏஞ் சல்ஸை சேர்ந்தவருமான பேரா சிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.