இடிஅமீன்……கள் இன்னும் புதைக்கப்படவில்லை – துவாரகா கலைக்கண்ணன் March 28, 2015 News உகாண்டாவின் சர்வதிகாரி இடி அமீன் தனக்கு தானே பட்டங்களை வழங்கினார். “பொது நலவாய நாடுகளின் தலைவன்“, “இங்கிலாந்தை வென்ற வீரன்“ “ஸ்கொட்லாந்தின் கடைசி மன்னன்,“. “டாக்டர் “……………என.அவரது பட்டங்கள் நீண்டன, தனது அகலமான மார்பே மறையும் அளவுக்கு ராணுவத்தில் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டார். 22-03-2015 அன்று இலங்கையின் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலக மைதானத்தில் வைத்து முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷலாக பதவிவழங்கி கௌரவித்தார். உலகில் உள்ள இராணுவங்களில் மூத்த அதிஉயர் இராணுவத்தரமான பீல்ட் மார்ஷல பதவியானது சண்டைக்களத்தில் அசாதாரண வெற்றியை பெற்ற பிரிவுத் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படும் நிலையாகும். உலகில் இது மிகச்சிலருக்கே வழங்கப்படுகின்றது. மத்திய காலத்தில் ஜெர்மனியில் அரசனின் குதிரைப்படைகளை பாதுகாக்கும் வீரனுக்கே இப் பதவி நிலை வழங்கப்பட்டது. அசாதாரண இராணுவ சாதனைக்கு வழங்கப்படும் இப் பதவியினை இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கப்பட்டது என்பதை விட அவரால் வலிந்து பெறப்பட்டது என்பதே உண்மை நிலையாகும்.அதாவது பொன்சேகா இவ்வுயர் பதவி நிலை தனக்கு கட்டாயம் தரபடவேண்டும் என மைத்திரி அரசாங்கத்துடன் கைகோர்த போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இடி அமீன் தனக்கு தானே பட்டங்களை சூடிக் கொண்டது போல பொன்சேகாவும் அரசாங்கத்தை அழுத்தி பெற்றுக் கொண்டதே இவ்வுயர் பதவியாகும். முள்ளிவாய்காலில் முடிவுக்கு வந்த யுத்தின் பின் வீரத்தளபதியாக மகிந்த அரசால் கொண்டாடப்பட்ட பொன்சேகா அதே அரச தலைமையால் புறந்தள்ளபட்டதால் அரசியலில் கால்பதித்தார். 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா மகித அரசுக்கு போட்டியாக களமிறங்கினார். தேர்தலில் வெற்றியிட்டிய மகிந்த அரசு , சரத்பொன்சேகா ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி அவருக்கு 30 மாத கடுங்காவல் தண்டனையை ராணுவ கோர்ட்டு வழங்கியது. ஜனாதிபதி ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத் பொன்சேகா வெலிக்கடை சிறையி்ல் அடைக்கப்பட்டார். மகிந்த அரசால் பொன்சேகாவிற்கு . 0/22032 இலக்கம் கைதி எண்ணாக வழங்கப்பட்டது. மைத்திரி அரசால் பொன்சேகாவிற்கு யு.க.5555 என்ற இலக்கம் கார் எண்ணாக வழங்கப்பட்டது. அதாவது ஐந்து நட்சத்திரம் பொறித்த விஷேட கார்( எஸ்.400 பென்ஸ்) இலங்கையில் இதுவரை பயணித்த கார்களில் காணப்படாத இலக்கத்துடன், காரின் முன் பகுதியில் ஐந்து நட்சத்திரங்களும் காரின் பின் பகுதியில் 5 நட்த்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பீல்ட் மார்ஷல் ஒருவரின் கார் என்பதை ஏனையோர் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், இந்த விஷேட அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. உலகில் ஒரு பீல்ட் மார்ஷல் வேறுபடுத்தி காட்டுகிறது பாரம்பரிய பண்பு ஒரு கோல். (அலங்கார தடி) அதனை வழங்கி மைத்திரி பால சிறிசேன பொன்சேகாவை கௌரவித்து தன்னை உலகத்தின் முன் தன்னைதானே தாழ்த்திக் கொண்டார். ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோரை கொலைசெய்த இடி அமின், லிபியாவில் தஞ்சம் புகுந்தார் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தார். இறுதிக்காலகட்டத்தில் 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பால் இறந்து போனார். இடி அமின் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டார். ஆனால், இடி அமின் போன்ற கொலையாளிகளும் பட்டங்களை தமக்கு தாமே சூடிக் கொள்வோரும் இன்னும் பூமிக்குள் புதைக்கப்படவில்லை.