10 கோடி தமிழனுக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாகட்டும் – சத்யராஜ் March 31, 2015 News இழந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள். எட்டு இலட்சம் சனத்தொகை கொண்ட மக்களுக்கு கொசோவோ என்ற நாடு உருவாகியது போல 10 கோடி தமிழனுக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாகட்டும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான பேர்சுட் ஒப் ஜஸ்டிஸ் (”Pursuit of Justice) என்ற ஆவணப்படம் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,சரியான நேரத்தில் இந்த ஆவணப்படம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழர்களுக்ககு எதிரான கொடுமைகள் இவ்வளவு நடந்த பின்பும் ஒரே நாடு என்று சொல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் இழந்த நாட்டை மீட்டெடுக்கிறோம். உலகம் தோன்றின போதே நாடுகள் கிடையாது. சில நாடுகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலும், சில நாடுகள் நூறு வருடங்களுக்கு முன்னாலும் வந்தவையே. ஒரு நாடு பல நாடுகளாக பிரிகிறது.பல நாடுகள் சேர்ந்து ஒரு நாடாக மாறுகிறது. ஒரு எட்டு இலட்சம் சனத்தொகை கொண்ட கொசோவோ நாடும் இப்போது தானே உதயமானது. அதே போல் 10 கோடி தமிழனுக்கு தமிழீழம் என்ற ஒன்று வந்துவிட்டு போகட்டும். அது புது நாடல்ல. இழந்த நாட்டை நாம் மீட்டெடுக்கின்றோம்.எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விட முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கிப் போராடினார்கள். இதை விட படைப்பாளிகள் கவிதைகள், நாடகங்கள் ஊடாக கூட போராடுகின்றார்கள்.இந்திய சுதந்திர போராட்டத்தில் பகத்சிங் ஆயுதமேந்தியும், காந்தியடிகள் அற வழியிலும், பாரதியார் தேச விடுதலைக் கவிதைகள் ஊடாகவும் போராடினார்கள். ஆனால், வெள்ளைக்காரன் பார்வையில் காந்தியும் தீவிரவாதிதான், பகத்சிங்கும் தீவிரவாதி தான், பாரதியும் தீவிரவாதிதான். அதேபோல் தான் இன்றும் நடக்கிறது என்றார்