இலங்கை, இந்தியா, சர்வதேசம் என்று மூன்று   மர்மதேசங்களை நம்பி நாசமாகியிருக்கிறது இந்த இனம். நம் தலையில் மசாலா அரைப்பது சுலபம் – என்று மூன்றும் நம்புகின்றன.நமக்குள்ளேயே சில அதிதீவிர அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். புவிசார் அரசியல், இந்துமகாசமுத்திர அரசியல், தெற்காசிய நாடுகளுடனான நட்பரசியல், பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்  – போன்ற வார்த்தைகளால் நம்மைப் பயமுறுத்தி வருகிற பெருமக்கள் இவர்கள்.

‘புவிசார் அரசியலில், இந்தியாவின் வல்லாண்மையை நிரூபிக்க, இலங்கையின்  ஒருமைப்பாட்டை  இந்தியா காப்பாற்றவேண்டும்’ என்றெல்லாம் நம் காதில் பூ சுற்றும் வேலை இந்தப் பெருமக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வாங்குகிற கூலிக்கு வேலை பார்க்கிறார்கள் இவர்கள். எம் இனம் விடுதலை அடைந்துவிடக் கூடாது – என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள் யாரோ, அவர்கள் இவர்களுக்குக் கூலி கொடுக்கிறார்கள். இலங்கை ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற விரும்பாமல், சிங்கள அரசே இன அழிப்பில் இறங்கும் நிலையில், அடுத்தவன் வீட்டுப் படுக்கையறையில் இவர்களுக்கு  என்ன வேலை?

உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்குதான் – என்றெல்லாம் பீற்றிக் கொள்கிற இனமில்லை – எம் இனம். அதே சமயம், தமிழினம் ஒரு தனிப்பெரும் இனம் என்கிற வரலாற்றையும், தமிழ்மொழி ஒரு தனிப்பெரும் மொழி என்கிற உண்மையையும் மூடிமறைக்க முயல்பவர்களைச் சுளுக்கெடுக்க வேண்டியது  கடமையாகிவிடுகிறது நமக்கு!

 

உலகின் மிகச்சிறந்த எந்த இலக்கியத்தோடும் இணைவைத்துப் பேசத் தகுந்த குறளும் சிலம்பும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றால், இந்த மொழியும் பண்பாடும் எவ்வளவு தொன்மையானதாக இருக்கவேண்டும்……… அவை படைக்கப்படுவதற்கு எவ்வளவு ஆன்டுகளுக்கு முன் இந்த மொழி வேர்பிடித்திருக்க வேண்டும்…….  சமஸ்கிருதத்தைப் போல செத்துச் சுண்ணாம்பாகிவிடாமல் வழக்கு மொழியாக இன்றைக்கும் தமிழ் நிலைத்திருக்கிறதென்றால் அதற்காக எம் இனம் எவ்வளவு விலை கொடுத்திருக்க வேண்டும்…….

இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும் எவரும், தமிழகத்தையும் ஈழத்தையும் இணைக்கும் தொப்புள்கொடி எது என்பதை எளிதில் புரிந்துகொள்வர்.

வன்னித் தமிழில் வடிவாகக் கதைப்பதோ நெல்லைத் தமிழில்  அ’ல’காகப் பேசுவதோ சென்னைத் தமிழில் கலாய்ப்பதோ என்   நோக்கமல்ல! எது நம்மை இணைக்கிற இழை என்பதைச்   சுட்டிக்காட்டவும், எதற்காக நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்கிற உண்மையை எடுத்துச் சொல்லவுமே சொல்கிறேன் இதை!

 

செத்துப் போய்விட்ட சமஸ்கிருதத்தைத் தோண்டி எடுத்து சப்பரத்தில் ஏற்றிச் சுமக்கிற கும்பல் ஒன்று, டெல்லி தர்பாரில் ஒட்டிக் கொள்கிறது எப்படியாவது! தங்களது புனித மொழி செத்துப் போனபிறகும்,  கடலுக்கு இருபுறமும் மனித மொழியான  தமிழ் உயிர்ப்போடு  இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவர்களால்!  ‘தமிழீழமா… அதை   அனுமதிக்கவே  கூடாது’ – என்று அவர்கள் ஒற்றைக்காலில் நிற்பதற்கான ஒற்றைக் காரணம், அது தமிழுக்கான தேசமாகத் திகழும் என்பதுதான்! இந்த உண்மையை மூடி மறைத்து, ‘தீவிரவாதம்’ என்று கயிறுதிரிக்கப் பார்ப்பவர்களை முதலில்  கழுவில் ஏற்றவேண்டும்.

 

தமிழுக்கென்று ஒரு தேசம் அமைந்துவிட்டால், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தமிழின் தலைமுடியைக் கூட  அவர்களால் தொடமுடியாது. அதனால்தான், இந்தியத் திருநாட்டின் மீது, தமிழீழ விரோதக் கொள்கையைத்   திணிக்கிறார்கள் சமஸ்கிருத சாமியாடிகள்.

 

புவிசார் அரசியல் – என்கிற நாடகம்   உண்மையானதாக   இருந்தால், ஈழம் அமைவதுதான் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்கிற உண்மையை இவர்கள் ஏன் மூடி மறைக்கவேண்டும்?

 

ஒரு வாதத்துக்கு, இலங்கை அரசு சொல்வதை ஏற்றுக்கொண்டு – விடுதலைப் புலிகள் அமைப்பை ‘தீவிரவாத அமைப்பு’ என்றே வைத்துக்கொள்வோம். ‘விடுதலைப்புலிகளை மட்டுமே தாக்கினோம், அப்பாவித் தமிழர்களில் எவர்மீதும் ஒரு துரும்பு கூட படவில்லை’  என்று மகிந்த மிருகம் கூசாமல் பேசியதே… அதற்கு என்ன அர்த்தம்? கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரும் விடுதலைப்புலிகள்தான் என்கிறார்களா?

 

ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில் கோவை கருப்புசாமி அனுப்பியிருந்த ஒரு குறுஞ்செய்தி, பெருஞ் செய்திகளைப் பேசியது.

அடித்துக் கொன்று புதைக்கப்படும்

கடைசித் தமிழனின் கல்லறையில் எழுதுங்கள்…

எங்களைக் கொன்றது எங்களது தாய்மொழி….

இதுதான் அந்தக் குறுஞ்செய்தி.

 

ஈழத்து உறவுகள், தமிழனாகப் பிறந்ததற்காகவும், தமிழைப் பேசியதற்காகவும் தான் கொல்லப்பட்டார்களே தவிர,  தீவிரவாதிகளாக இருந்ததற்காக அல்ல! அந்த மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள்,  விடுதலைப் போர் வீரர்களே தவிர, தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்ல!

 

இந்த உண்மையையெல்லாம் ஒருநாள் நாம் பேசித்தான் ஆகவேண்டும்…. என்றாலும், இப்போது நாம் எதைப் பேச வேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்கிற தெளிவான   பாதையைத் தெரிவுசெய்து கொடுத்திருக்கிறார் – தமிழினத்தின் முதல்வர் விக்னேஸ்வரன். அவரைப்பார்த்துத்தான், இன்றைக்கு இலங்கையும் இந்தியாவும் சர்வதேசமும் நடுங்குகின்றன.

 

ஈழம் கேட்கவில்லை விக்னேஸ்வரன். இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கிறார். இனப்படுகொலையை அம்பலப்படுத்த சர்வதேச விசாரணை கேட்கிறார். ராணுவத்தால் ஊரை விட்டு விரட்டப்பட்ட மக்களை, அவர்களது சொந்த இடத்துக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று கேட்கிறார்.

 

உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் விக்னேஸ்வரனைத் தேடி வந்துவிட்டனர். அவர்கள் பார்வையில், புதிய ஆட்சியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதாம்! ‘இந்த நேரத்தில் – இனப்படுகொலை –  என்று பேசுவது சரியா’ என்பது அவர்களது கேள்வி.

 

இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, இப்படியெல்லாம் அலறித் துடித்தபடி ஓடி வரவில்லை சர்வதேசம். ஒரு  இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வாய்ப்பிருந்த நிலையில்,  அசைய மறுத்தது சர்வதேசம். இன்று ‘நடந்தது இனப்படுகொலை’ என்று விக்னேஸ்வரன் சொன்னவுடன் பதறி அடித்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடுகிறது. இப்படியெல்லாம் பேசலாமா – என்று வெட்கமேயில்லாமல் கேட்கிறது. அப்படியென்றால் அவர்கள் யார்?

 

இனப்படுகொலையை வேடிக்கை பார்ப்பார்களாம்…

நடந்தது இனப்படுகொலை – என்கிற உண்மையைச் சொன்னால் வேதனைப்படுவார்களாம்!

அப்படிச் சொல்வது, இனப்படுகொலை செய்த மிருகங்களின் இதயத்தைப் புண்படுத்தி விடும் – என்று கூசாமல் பேசுகிறார்கள்.  நல்லாயிருக்குல்ல நியாயம்!

 

‘நடந்தது என்ன என்கிற உண்மையை மூடிமறைத்தால், தமிழ் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? நல்லிணக்கம் எப்படி சாத்தியமாகும்’ என்று சுற்றிவளைக்காமல் கேட்கிறார்  விக்னேஸ்வரன்.

 

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பல மாற்றங்களுக்கு வழிவகுத்திருப்பதால் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன – என்கிற சர்வதேச நிலைக்கும் இந்திய அரசின் நிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதே பேத்தல் வாதத்தைத்தான் இந்தியாவும் முன்வைக்கிறது.

 

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், ஒரே ஒரு மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. மகிந்த மிருகம் ஆட்சியிலிருந்தபோது, தமிழினப் படுகொலைக்குக் காரணம் கோதபாய ராஜபக்சே தான் என்று  கொண்டாடினார்கள். மைத்திரி ஆட்சிக்கு வந்தபிறகு, அதற்குக் காரணம் சரத் பொன்சேகா தான் என்று கொண்டாடப் பார்க்கிறார்கள்.

 

எந்த மிருகம் தமிழரைக் கொன்ற மிருகம் – என்கிற கேள்விக்கான பதில் மாற்றப்பட்டிருக்கிறதே தவிர, வேறெந்த மாற்றமும் இன்றுவரை செய்யப்படவில்லை. இனப்படுகொலை செய்த மிருகம் எதுவாக இருந்தாலும் அதைப் போற்றிப் பாராட்ட வேண்டும் – என்கிற மகாவம்ச மனநிலை தான் இருக்கிறது அத்தனை மிருகத்துக்கும்!

 

இனப்படுகொலை செய்த சரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் என்கிற கௌரவத்தை அளித்திருப்பதன் மூலம், சிங்கள ராணுவப் பொறுக்கிகளுக்கு ராங் சிக்னல் கொடுத்திருக்கிறது மைத்திரி அரசு. “ஈவிரக்கமில்லாமல் தமிழரை நசுக்கினால்தான், அரசு நம்மை கௌரவிக்கும்” என்று அந்தப் பொறுக்கிகள் நினைப்பார்களா மாட்டார்களா?

 

நடந்தது இனப்படுகொலையில்லை, அது தீவிரவாதத்துக்கு எதிரான போர் – என்பது மகிந்த மிருகத்தின் கட்டுக்கதை. அந்தப் பொய்யை, ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே சொல்கிறது மைத்திரி அரசு. ‘எங்களை நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம், சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது’ – என்பது மகிந்தனின் நிலை. ஆட்சி மாற்றத்தால் அதிபரானவர் அதையும் மாற்றவில்லை. அவர் ஆனைக்கு அர்ரம் என்றால், இவர் குதிரைக்கு குர்ரம் என்கிறார். வேறெந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – என்று எதைச் சொல்கிறார்கள் சர்வதேசமும் இந்தியாவும்!

இப்போதுள்ள இலங்கை அமைச்சர்களில் வாய்ச்சவடால் வீரர், மங்கள சமரவீர. ஒன்றரை லட்சம் தமிழரின் உயிரை விட இலங்கையின் இறையாண்மைதான் முக்கியம் அவருக்கு!  ‘தீவிரவாதத்துக்கு எது அடிப்படை என்பதைக் கண்டறிந்து, அதை அடியோடு அழிக்கப் போகிறோம்’ என்பது அவரது சமீபத்திய  சவடால்! ‘உயிரைக் கொடுத்தாவது இனத்தைக் காப்போம்’ என்கிற  தமிழ் இளைஞர்களின் “தீவிர”வாதத்துக்கு அடிப்படையாக இருந்தது, தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிங்கள வெறியர்களின் இனவெறியும் பௌத்தத் தீவிரவாதமும் தான்! அதை ஒழித்துவிட்டுத்தான் வேறுவேலை பார்ப்பேன் என்கிறாரா சமரவீர?

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே, தமிழினப் படுகொலை தொடங்கிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது விக்னேஸ்வரனின் தீர்மானம். தன் நாட்டு மக்களில் ஒரு பிரிவினரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்யும் ஒரு நாட்டுக்கு, இறையாண்மை எப்படி இருக்க முடியும்?

தமிழரைத் தீர்த்துக் கட்டுவதுதான் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி – என்கிற நிலைப்பாட்டில் 60 ஆண்டுகளாக உறுதியாக இருக்கிறார்கள் என்றால், இலங்கையின் இறையாண்மை எப்போதோ செத்துவிட்டது என்பதல்லாமல் வேறென்ன அர்த்தம்? வேண்டுமென்றால், இலங்கை இறையாண்மைக்கு 60வது ஆண்டு நினைவுதினம் – என்கிற பெயரில் சோனியாவையோ சுவாமியையோ மோடியையோ அழைத்துப் பேசச் சொல்லவேண்டியதுதானே! அதைவிட்டுவிட்டு,   செத்துப் போய்விட்ட சமஸ்கிருதத்தைப் போல, இலங்கையின் இறையாண்மையையும் மணவறையில் உட்கார வைக்க முயல்வது என்ன நியாயம்?

60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது என்றால், அந்த இனத்தில் தீவிரவாதிகள் தோன்றாமல் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தருமா தோன்றுவார்கள்? வடமாகாண சபையில் விக்னேஸ்வரன் நிறைவேற்றிய இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், இதைப்போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்புகிறது.

விக்னேஸ்வரனின் உறுதியான நிலைப்பாட்டைப் பாராட்டும் கட்டுரை ஒன்று இந்த வாரம் ‘கொழும்பு டெலிகிராப்’ இதழில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரையைக் கண்டித்து வந்துள்ள கடிதங்களில் ஒன்று, ‘விக்னேஸ்வரன் வடமாகாண மக்கள் பிரச்னைகளைப் பார்த்தால் போதும்’ என்று போதிக்கிறது.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது நிலங்களை ராணுவம் ஆண்டு அனுபவித்துவருவது என்ன நியாயம்? அதைக் கேட்காமல் வேறு எதைக் கேட்கவேண்டும் விக்னேஸ்வரன்? தம் மக்களை இலங்கை அரசு திட்டமிட்டு  இனப்படுகொலை செய்தது  தொடர்பாக சர்வதேச  விசாரணை வேண்டும் – என்று அவர் கேட்பதில் என்ன தவறு?

இந்தியா, இலங்கை, சர்வதேசம் ஆகிய மூன்றும் நம் முதுகில் குத்தியுள்ள நிலையில், அவர்கள் செவுளைப் பெயர்க்கிற மாதிரி, விக்னேஸ்வரன் பேசும் மூன்று உண்மைகளையும் பேசியாக வேண்டும் நாம்.

1. இலங்கை செய்தது இனப்படுகொலை.

2. இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை.

3. ஈழத்தமிழரின் தாயகத்தில் ராணுவம் எதற்கு?

விக்னேஸ்வரன் ஈழம் கேட்டிருந்தால் கூட இந்த அளவுக்குப் பதறித் துடித்திருக்க மாட்டார்கள். இனப்படுகொலை – என்கிற வார்த்தைதான் அவர்களை அலறவைத்திருக்கிறது என்றால், அந்த வார்த்தையைத்தான் நாம் ஒவ்வொருவரும் பேசியாக வேண்டும். ‘விக்னேஸ்வரன் பிரபாகரனாகப் பார்க்கிறார்’ என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிற வேகத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தமிழ் மக்களின் மனக்குமுறலை அவர் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் என்பதை அதன்மூலம் உணரவேண்டும்.

இந்த நேரத்தில் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், நடந்த  இனப்படுகொலைக்கு நியாயம் கேட்பது, தாய்த் தமிழகத்தின் உடனடிக் கடமை. எண்ணிக்கையில் நாம் எட்டுகோடி பேர். 8 கோடி பேருமே எட்டப்பனாக இருக்க வாய்ப்பில்லை. ஒன்றரை லட்சம் உறவுகளைக் காப்பாற்றத் தவறிய நாம், இனிமேலாவது பேசியாக வேண்டும். இனிமேலாவது என்றால், இன்றே இப்போதே!