மொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தின் அனுசரணையுடன் வடமராட்சி பிரசேத்தில் “அறிவொளி கல்வி வளர்ச்சி நிலையம்”

யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பிரசேத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான கேவில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளாகியும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற கிராமமாகவே காணப்படுகின்றது. இங்கு 5ம் வகுப்புவரை மட்டுமே பாடசாலை உள்ளது. மேலதிக கல்வி வசதிகள் போதியதாக இல்லை.

ஆண்டு 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்காக ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கடந்த ஒரு வருடமாக கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். எனினும் நிர்வாகிகளால் மேலதிக ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலையில், கிராமத்து மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களை அணுகி மேற்படி பிரச்சினையை தெரிவித்து மேலதிக கல்விக்காக உதவுமாறு கோரியிருந்தனர். அதேவேளை கருணை உள்ளம் என்ற அமைப்பினரும் அந்த உதவியை கோரியதுடன் கல்வி நிலையத்தை பொறுப்பெடுத்து நடாத்துமாறும் கோரியிருந்தனர்.

மேலதிக கல்வி வசதிகள் அக் கிராமத்தில் இல்லாத காரணத்தினால் அக் கிராமத்து மாணவ மாணவிகள் சுமார் 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள உடுத்துறைக்கு அல்லது மருதங்கேணிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று திரும்புவதற்கு பஸ்போக்குவரத்து இல்லை. வீதிகள் குன்றும் குழியுமாக உள்ளது. இடையில் மக்கள் குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில் மிகப் பெரிய இராணுவ முகாம் உள்ளது. அதன் காணமாக பெண்கள் வீதியில் தனியாக செல்வதற்கு அஞ்சும் நிலையில் பெண் பிள்ளைகள் கிராமத்திற்கு வெளியே சென்று கல்வி கற்பதனை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது. மேற்படி காரணங்களால் திறமையான பெருமளவு மாணவ மாணவிகள் தமது கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாதவர்களாவும் தமது கல்வியை இடைநிறுத்தி கூலித் தொழிலுக்குச் செல்ல வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம் அமைப்பினரை தொடர்புகொண்டபோது ஒஸ்லோவில் அமைந்துள்ள மொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தினர் இந்த கல்வி நிறுவத்தினை தாமே பொறுப்பேற்று, அந்த கல்வி நிறுவனத்தில் ஜந்து ஆசிரியர்களை நியமனம் செய்து அங்கு படிக்கவரும் பிள்ளைகளிற்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, தமிழ் போன்ற பாடங்களை கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர்

மொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தின் நிதி அனுசரணையுடன் 05.04.15 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் மாலை நேர கல்வி நிலையமானது ”அறிவொளி கல்வி வளர்ச்சி நிலையம்”; என்னும் பெயரில் இப்போது இயங்கிவருகிறது.

செயற்திட்டம்: இலவச கல்வி நிலையம்
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமம்: கேவில்
பிரதேச செயலர் பிரிவு: மருதங்கேணி
மாவட்டம்: யாழ்ப்பாணம்
பயனாளிகளின் எண்ணிக்கை: 150
நிதிப் பங்களிப்பு: நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம் ஊடாக
ஒஸ்லோ மொட்டன்ஸ்றூட் கல்வி வளாகம்