உலகின் தொன்மையான மொழியான தமிழின் சிறப்பினை, உலகமே போற்றுகின்றது; பெருமை செய்கின்றது. ஆனால் தமிழின் மீது தமிழர் காட்டும் அக்கறை மிகுந்த கவலை தருவதாக உள்ளது. இன்றைய சூழலில் 100-க்கு 20 விழுக்காடு தமிழர்களின் பெயர் மட்டுமே தூய தமிழாய் உள்ளது.

உலகின் அனைத்து மொழியின மக்களும் தத்தமது மொழிகளில் பெயர் கொள்கின்றனர். ஆனால், தமிழர்கள் மட்டும் வடமொழியாய், அரபியாய், இலத்தீனமாய், பாரசீகமாய் பெயர் கொண்டு அடையாளம் இழக்கின்றனர். இந்த அவலநிலை இன்னும் நீடிக்கலாமா? உலக மொழிகளுக்கெல்லாம் வேர் மொழியான தமிழுக்கு அணி செய்யும் வகையில், குழந்தைகளுக்கும், நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டிட உறுதி ஏற்போம்!

பிறமொழிப் பெயர்களை தமிழர்கள் சூட்டிக்கொண்டிருப்பதற்கு, பல்வேறு நம்பிக்கைகளும், மாயைகளும், மதப்பற்றுமே அடிப்படையாய் உள்ளது.

பிற நாடுகளில் எல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றோர்தான் குழந்தையின் பெயரினை முடிவுசெய்து, பெயர்சூட்டி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் சோதிடர்கள் சொல்லும் பொருளற்ற பிறமொழிப் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டும் நிலை நிலவுகிறகிறது.

தமிழர்களின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், ஜாதகம், எண் கணியம் போன்றவை அடிப்படைகளாக உள்ளன.

ஒரு குழந்தை பிறந்தவுடன் ஓரைகளின் (நட்சத்திரங்களின்) அடிப்படையில் சோதிடர்கள் பெயர்களை சொல்கின்றனர். பெற்றோர்களும் அப்பெயர்களை தமிழா? பிறமொழியா? என்றெல்லாம் ஆராயாமல், குழந்தைகளுக்குச் சூட்டிவிடுகின்றனர்.

தமிழில் எந்த எழுத்துக்களில் எல்லாம் பெயர் தொடங்காதோ, அந்த எழுத்துக்களையே சோதிடர்கள் சொல்கின்றனர். அவர்கள் சொல்லும் எழுத்தின் அடிப்படையிலான பெயர்கள் வேற்றுமொழி என்பதைக்கூட தமிழர்கள் அறியாமல், அப்படியே ஏற்கின்றனர். வடமொழியின் ஓரைப்பலனெல்லாம் (நட்சத்திரப்பலனெல்லாம்) நமக்கு எப்படிப் பொருந்தும் என சிந்திப்போம்!

நட்சத்திரப் பலனுக்கு அடுத்தபடியாக எண் கணியத்தின் (எண் சோதிடம்) அடிப்படையில், நெடுங்காலமாய் நல்ல தமிழ்ப்பெயரோடு இருப்பவர்கள்கூட, தங்களின் பெயரினை பொருளற்ற பிறமொழியில் மாற்றிக்கொள்கின்றனர். பெயரின் பொருளும், அதன் எண்களுக்குமான கூட்டுத்தொகையும் வாழ்வை மாற்றுமெனும் நம்பிக்கைகள் உழைக்காமலே உயர்வு எனும் சோம்பல் வாழ்க்கைக்கு அடித்தளமிடுகின்றது.

வாழ்க்கை மேம்பாடு உழைப்பால் மட்டுமே அடையக்கூடிய ஒன்றென்பதை மறந்து, சோதிடத்தின் அடிப்படையில் வைத்துக்கொள்ளப்படும் பிறமொழிப்பெயரால் மட்டுமே விளையும் எனும் நம்பிக்கையில் மக்கள் சோம்பலாகிப் போகின்றனர். தம் தாய்மொழியினையும் அழிக்கின்றனர்.

-தமிழன்¬-