நடந்தது இனப்படுகொலைதான் என்பதை சர்வதேசத்துக்கும் ஆதாரத்துடன் உணர்த்தியதன் மூலம், 10 கோடி தமிழர்களின் போற்றுதலுக்கு உரிய மாமனிதராக மலர்ந்திருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் ‘ராயப்பு ஜோசப்’ தான் அந்த மாமனிதர்.

பிரபாகரன் மாதிரியே இவர் செயல்படுகிறார்…..
இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை…..
அடுத்த பிரபா என்று தன்னை நினைக்கிறார்……

ஒரு பழுத்த ஆன்மீகவாதியின் மீது 2 ஆண்டுகளுக்கு முன் இப்படியெல்லாம் பாய்ந்தார்கள் சிங்கள பௌத்த பயங்கரவாதிகள்.

அந்த மனிதர் இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படி மறுத்தார், அதற்காக அவர் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினார் – என்பதை இப்போதுகூட மறக்க முடியவில்லை என்னால்!

நான் போராளி இல்லை………… சமயவாதி!
தனிச்சிறப்பு மிக்க பிரபாகரனுடன் என்னை ஒப்பிடாதீர்கள்!
எந்தவகையிலும் நான் அவருக்கு இணையானவன் இல்லை” –
சிங்கள வெறியர்களுக்கு அந்த மனிதர் அளித்த ஆணித்தரமான பதில் (பதிலடி!) இது.

‘அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்’

என்கிறது வள்ளுவம். இந்த வள்ளுவத்தை அந்த மனிதர் அறிந்திருக்க வேண்டும். பயனுள்ள சொற்களை மட்டுமே தனது பதிலில் பயன்படுத்தினார். அவர் அடித்த அடியில், சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது சிங்கள மிருகங்களுக்கு!

நடந்தது இனப்படுகொலைதான் என்பதை சர்வதேசத்துக்கும் ஆதாரத்துடன் உணர்த்தியதன் மூலம், 10 கோடி தமிழர்களின் போற்றுதலுக்கு உரிய மாமனிதராக மலர்ந்திருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் ‘ராயப்பு ஜோசப்’ தான் அந்த மாமனிதர்.

காணாமல் போன ஒன்றரை லட்சம் பேர் எங்கே – என்று ஆதாரத்துடன் ராயப்பர் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை சிங்கள இலங்கையால்! அந்த ஆத்திரத்தில்தான், ‘ராயப்பர் பிரபாகரனாகப் பார்க்கிறார்’ என்று வார்த்தைகளால் வறுத்தெடுக்கப் பார்த்தார்கள். அவர்களது வார்த்தைகளை வைத்தே ராயப்பர் திருப்பி அடித்ததுதான், ‘ஆன்டி கிளைமாக்ஸ்’.

சர்வதேச சமூகத்துடன் எல்லாநிலையிலும் தொடர்பில் இருப்பவர் ராயப்பர். அவரது கருத்துகள் பாரபட்சமற்றவை என்பதாலும், அவர் தெரிவிக்கிற தகவல்கள் நேர்மையானவை என்பதாலும், அவர் தருகிற புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்பதாலும் சர்வதேச சமூகம் அவரை மதிக்கிறது.

சர்வதேச அளவில் பிரபாகரன் என்கிற விடுதலைப் போராட்ட வீரனைக் குறித்த தவறான பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிற பௌத்த சிங்களப் பூதங்கள், பிரபாகரனுடன் ராயப்பரை ஒப்பிடுவதன் மூலம் அவருக்கு ‘செக்’ வைக்கப் பார்த்தன. குறைந்தபட்சம், ‘நான் ஆன்மீகவாதி, அவர் தீவிரவாதி. இப்படியெல்லாம் ஒப்பிடலாமா’ என்றாவது ராயப்பர் திருப்பிக் கேட்பார் என்று நினைத்தார்கள் அவர்கள்.

சிங்களப் பூதங்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதாக இருந்தது ராயப்பரின் பதில். ‘தனிச் சிறப்பு மிக்க பிரபாகரனுக்கு எந்த வகையிலும் நான் இணையானவன் இல்லை’ என்று முகத்திலடிக்கிற மாதிரி ராயப்பர் பதில் சொல்வார் என்று அந்தப் பூதங்கள் கனவில்கூட நினைக்கவில்லை.

ராயப்பர் அளித்த பதில், சிங்கள வெறியர்களுக்கான பதில் மட்டுமேயில்லை. இந்தியா முதலான சர்வதேசத்துக்கும் சேர்த்தே கொடுத்த பதில் அது. பிரபாகரன் யார் – என்கிற உண்மையை, உலகுக்கு உணர்த்தியது அந்தப் பதில். கூடவே, பிரபாகரனைப் போலவே ராயப்பரும் தனிச்சிறப்பு மிக்கவர் என்பதையும் உணர்த்தியது.

ஈழத்தின் உண்மை நிலவரத்தை உலகுக்குக் காட்டும் காலச் சாளரமாகத் திகழும் ராயப்பர் என்கிற அந்த மனிதர், இந்த வாரம் முக்கால் சதம் அடித்திருக்கிறார். ஆம்…… ராயப்பருக்கு இப்போது 75 வயது. (பார்த்தால் அறுபது மாதிரிதானே தெரிகிறார் – என்று வியக்கிற எவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்……. பயன்பாட்டிலேயே இருக்கிற இரும்பு துருப்பிடிக்குமா என்ன!)

சென்ற நவம்பரில் பிரபாகரனுக்கு மணிவிழா.
ஐந்தே மாதத்தில் பவளவிழா கண்டுள்ளார் ராயப்பர்.

“ஊழிப் பெருவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படும்
தமிழ்ச் சமூகத்தைக்
காப்பாற்றிக் கரைசேர்க்க
உழைக்கும் கருணைப் பேழையை…..
பற்றிப் படர்ந்து பரவி
கைப்பிடித்து நடக்க
வழிகாட்டி ஆக உதவும்
காலக் கைத்தடியை……”

அகவை எழுபத்து ஐந்தில் உச்சி மோந்து மெச்சி மகிழ்ந்திருக்கிறது ஈழத்தில் செயல்படும் ‘நாங்கள்’ அமைப்பு. ராயப்பருக்கு அவர்கள் தெரிவித்துள்ள பவள விழா வாழ்த்து, மின்னஞ்சல் வழி வந்து சேர்ந்திருக்கிறது எனக்கு!

அண்டை அயலாரை நேசி – என்கிற தேவகுமாரனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் உற்றார் உறவினராகவே ஏற்றுக் கொண்டவர் ராயப்பர். துவக்குகளின் நுனிகள் தன்னை நோக்கி நீண்ட சமயத்திலும், ஆபத்தின் விளிம்பில் நின்றபடி நீதி கேட்டவர்.

தங்களுக்கான சிலுவைகள் தயாராவது தெரிந்தும், நிலுவையிலிருக்கும் வழக்குகளுக்கு நியாயம் கேட்கத் தவறாதவர்கள் எவரோ, அவர்கள்தான் பிரபாகரன்களாகவோ ராயப்பர்களாகவோ இருக்கமுடியும். எம் கண்ணெதிரில் வன்னி மண்ணின் நம்பிக்கை விருட்சமாக விசுவரூபம் எடுத்திருக்கும் ராயப்பர், இன்னும் 75 ஆண்டுகள் வாழவேண்டும் – என்று ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் அவரை மனமார வாழ்த்த வேண்டும்!

ராயப்பு ஜோசப் என்கிற ஆன்மீகவாதியின் மீது சுமத்திய குற்றச்சாட்டு, இப்போது முதல்வர் விக்னேஸ்வரன் மீதும் சுமத்தப்படுகிறது. கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான விக்னேஸ்வரன் தொடர்பான கட்டுரைக்கு, சிங்கள வாசகர்களிடையே கடும் எதிர்ப்பு. வாசகர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தபோது, ஒவ்வொரு சிங்களப் பிரஜையின் அடிமனத்திலும் பௌத்த சிங்கள இனவெறி ஆழப் பதிந்திருப்பதை உணர முடிந்தது. ‘விக்னேஸ்வரன் பிரபாகரனாகப் பார்க்கிறார்’ என்கிற பாரபட்சப் பார்வையே பலருக்கும் இருக்கிறது.

‘இனப்படுகொலை என்று எப்படிச் சொல்லலாம் ஒரு மாகாண முதல்வர்’ என்று ஒருவர். ‘ஒரு நீதிபதி முதல்வரானவுடன் தமிழர்களுக்கு அரசியல் கலப்பில்லாத நேர்மையான தலைவர் கிடைத்துவிட்டதாக நம்பி ஏமாந்துவிட்டோம்’ என்று இன்னொருவர். ‘ஒருமைப்பாட்டை உடைக்க முயல்கிறார்’ என்றும், இனப்படுகொலை தொடர்பாக சிவாஜிலிங்கம் கொடுத்த சுருக்கமான தீர்மானத்தை 19 பக்கமாக வளர்த்தவர் விக்னேஸ்வரன்தான் என்றும் இன்னொருவர்.

தங்களது வரிப்பணத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய, இதே சிங்கள அறிவுஜீவிகள்தான் இப்படியெல்லாம் வன்மத்தோடு கடிதம் எழுதுகிறார்கள். அவர்களில் எவரும் லசந்த விக்கிரமசிங்க போல் மானுடனல்ல! அதனால்தான், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்காமல், கொன்றவர்களுக்குப் பரிந்து பேசுகிறார்கள். ஒரு இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் விக்னேஸ்வரனை ‘பிரபாகரனாகப் பார்க்கிறார்’ என்று முத்திரை குத்த முயல்கிறார்கள்.

தான் முதல்வராக இருக்கும் பகுதியில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பதற்காக அல்லாமல் வேறெதற்காக விக்னேஸ்வரன் பேச வேண்டும் என்று சிங்கள அறிவுஜீவிகள் எதிர்பார்க்கிறார்கள்? இனப்படுகொலை செய்த கொலைவெறியர்களைக் காப்பாற்றத் துணைபோகும் தமிழ் அரசியல் துரோகிகளைக் காட்டிலும் விக்னேஸ்வரன் என்கிற நீதியரசர் உயர்ந்தவர் என்பதாலேயே அவரை நாங்கள் மதிக்கிறோம் என்பது சிங்களச் சகோதரர்களுக்கு விளங்கவேயில்லையா?

நியாயம் கேட்கும் எவர் மீதும் ‘இவர் பிரபாகரனாகப் பார்க்கிறார்’ என்று முத்திரை குத்துவதிலிருந்து, இரண்டு உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, தன் மக்களுக்காக நியாயம் கேட்பதில் பிரபாகரன் என்கிற அந்த விடுதலைப் போர் வீரன் எவ்வளவு தெளிவோடும் உறுதியோடும் பற்றுதலோடும் அர்ப்பணிப்போடும் இருந்தான் என்பது. இன்னொன்று, பிரபாகரன் என்கிற பெயரே கொலைக்குற்றவாளிகளை அச்சுறுத்துகிறது என்பது. சிங்கத்துக்குப் பிறந்த சிறுநரிகளால் (சிங்கத்துக்குத் தானே பிறந்தார்கள்!), வல்வெட்டித் துறையின் வெப்பக்காற்றை இன்னும்கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழர்களின் பெயரில் ‘பேரம்’ பேசுபவர்கள் மட்டுமே தமிழினத்தின் தலைவர்களாக இருந்துவிடக் கூடாதா என்கிற ஏக்கம், பௌத்த பூதங்களுக்கு எல்லாக் காலத்திலும் இருந்துவந்திருக்கிறது. அப்படிப் பேரம் பேசுகிற ஏஜென்டுகளை அவர்கள் நேசித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே இணக்கமும் நெருக்கமும் இருந்துவந்திருக்கிறது. ஆண்டைகளுடன் சேர்ந்து கூடிக் குலவி கும்மியடித்த அடிமைகள், கதிர்காமர் வடிவம் தொடங்கி சுமந்திரன் வடிவம் வரை எத்தனையோ வடிவங்களைப் பெற்றிருக்கிறார்கள். இது தமிழினத்தின் சாபக் கேடு.

கதிர்காமர்கள் சுமந்திரன்கள் போல் உடன்பிறந்தே கொல்லும் அறிவாளிக் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரணாக எல்லாச் சமயத்திலும் எவரேனும் ஒருவர் இருப்பது ஒன்றுதான் நமக்கிருக்கிற ஒரே ஆறுதல். அப்படித்தான் இருக்கிறார்கள் இன்றைக்கு விக்னேஸ்வரனும் ராயப்பரும்! (ராயப்பரைப் போலவே விக்னேஸ்வரனின் வயதையும் கணிக்க முடியவில்லை…… முதல்வருக்கு என்ன வயசு இருக்கும்னு யாரையாவது கேட்டுத் தெரிஞ்சிக்கணும்!)

ராயப்பரையும் விக்னேஸ்வரனையும் உன்னிப்பாகக் கவனிக்கிற எவரும், இருவருக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமையை எளிதாக உணர முடியும். இருவருக்குமே, குறும்பு கொப்பளிக்கிற கண்கள். விழி வழி ஒளிரும் அந்தக் குறும்புப் பார்வை எவரையும் ஊடுருவக் கூடியது. இருவருமே, எதிரிகளின் அதிரடிக் கேள்விகளால் தடுமாறிவிட மாட்டார்கள். நிதானம் தவறிவிடாமல் பொறுமையிழக்காமல் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல இருவராலும் முடியும். அதைத்தான் அவர்களது சொல்லும் செயலும் உறுதிசெய்தபடியே இருக்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தான், ‘இவர் புலி’, ‘அவர் பிரபாகரன்’ என்றெல்லாம் ஊளையிடுகின்றன நரிகள்.

ராயப்பர் மீதும் விக்னேஸ்வரன் மீதும் மட்டுமே ‘புலி’ ‘பிரபாகரன்’ என்கிற ஏவுகணைகள் பாய்ந்துவிடவில்லை. தமிழருக்காக நியாயம் கேட்கும் எவர்மீதும் நடக்கிற தாக்குதல்தான் இது. படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க எல்லாவகையிலும் முயன்ற நவநீதம் பிள்ளையை ‘அவர் நவ்விப் பிள்ளை இல்லை, புலிப்பிள்ளை’ என்று வெளிப்படையாகவே விமர்சித்ததுடன் நின்றார்களா பௌத்த பிக்குகள்…. அந்த நீதியரசியின் உருவப்படத்துக்குக் குட்டைப்பாவாடை போட்டுப் புளகாங்கிதம் அடைந்தார்கள் பௌத்த மகா தேரர்கள்.

இனப்படுகொலையை அம்பலப்படுத்திய கல்லம் மேக்ரே என்கிற மானுடன் மீது, ‘புலிகளின் ஆள்’ என்கிற அவதூறை அப்ப கூச்ச நாச்சமில்லாமல் முயற்சித்தார்கள்.

ராயப்பரோ விக்னேஸ்வரனோ மேக்ரேவோ நவ்விப்பிள்ளையோ புலிகளாக அல்லது பிரபாகரனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களை அப்படி அடையாளப்படுத்த பௌத்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி, அவர்களது அப்பழுக்கில்லாத ஆண்மைக்குக் கிடைத்த அங்கீகாரம், கௌரவம். அவர்கள் நேர்மையான பாதையில் நீதி தேட முயல்கிறார்கள் என்பதை இந்த அங்கீகாரம் உறுதி செய்கிறது.

வெறும் பேனர்கள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் அடைமொழிகள் மூலமும் தங்களை ‘பிரபாகரன்’ என்று காட்டிக் கொள்ள முயல்வோரைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருப்பவர்கள் நாம். அதனால்தான், தங்களது நேர்மையான நடவடிக்கைகள் மூலம், ‘இவர்கள் பிரபாகரன் தானோ’ என்று எதிரிகளை அச்சுறுத்தும் எவரையும் நாம் கைகூப்பி வணங்க வேண்டியிருக்கிறது.

‘தமிழர் பகுதியில் பாலியல் வன்முறை தொடர்கிறது, ஆனாலும் அரசு நடவடிக்கை போதிய அளவுக்கு இருக்கிறது’, ‘தமிழர் பகுதியில் ஆட்கடத்தல் தொடர்கிறது, ஆனாலும் ஆட்சி மாற்றத்தால் நம்பிக்கை மலர்கிறது’ என்றெல்லாம் ஐ.நா.கோமாளிகள் மாதிரி ‘இருக்கு ஆனா இல்லை’ என்று கிறுக்கு பிடித்தமாதிரி அறிக்கை வெளியிடாமல், என்ன நடக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கிற எவரும் பிரபாகரனாகத்தான் இருக்க முடியும்.

எம் இனம் எவரிடமும் கையேந்தி பிச்சை கேட்கவில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கிறது. நீதி கேட்பதற்கான இந்த வேள்வியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரையும் நாம் ஏற்றிப் போற்ற வேண்டியது அவசியம். அவர்கள் புலத்தில் இருந்தாலும் சரி, இனப்படுகொலை நடந்த நிலத்தில் இருந்தாலும் சரி, தாய்த் தமிழகத்தில் இருந்தாலும் சரி!

சுமந்திரன் போன்ற நவீன கதிர்காமர்களை நம்பி நாம் மோசம் போய்விடக் கூடாது என்பதில் எதிரியேகூட எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான், யார் யார் உண்மையானவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகிற விதத்தில் ‘யார் யார் பிரபாகரன்’ என்று அவ்வப்போது அறிவிக்கிறார்கள் அவர்கள். அப்படி அவர்கள் யாரை அறிவிக்கிறார்களோ, எந்தப் பக்கம் கை காட்டுகிறார்களோ, அந்தத் திசை நோக்கித் தொழுகிறோம் நாம்.

இந்த வாரம் அது மன்னார் இருக்கிற திசை. எங்கள் ராயப்பர் இருக்கிற திசை. ராயப்பர் என்கிற அந்த மனிதருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்…. என் சார்பிலும், தமிழக அரசியல் வாரமிருமுறை ஏட்டின் ஆயிரமாயிரம் வாசகர்கள் சார்பிலும்!