முள்ளிவாய்க்காலில்  இனஅழிப்பிற்குள்ளானவர்களிற்கான நினைவேந்தல் இம்முறை பெருமெடுப்பினில் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார்.மே12 முதல் 18 வரை நினைவேந்தல் வாரமாக பிரகடனப்படுத்தி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அதே போன்று தமிழகத்திலும் நினைவேந்தல்களை பெருமெடுப்பினில் முன்னெடுக்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையினில் இவ்வாறு நினைவேந்தலை செய்வதன் மூலம் எமது அழிவுக்கு நீதிவேண்டுமென்ற எண்ணத்தை சர்வதேசம் தொடர்ந்தும் கொண்டிருக்க செய்யமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

எமது தற்போதைய கோரிக்கைகள் முதன்மையாக அரசியல் தீர்வு விடயமே உள்ளது.ஒரு அரசியல் தீர்வைக்காண ஜரோப்பிய சமூகம்,அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டிணைந்து செயற்படவேண்டும்.அதற்கான ஆலோசனைகளை ஜ.நா வழங்கமுடியும்.19வது திருத்தமோ 20 வது திருத்தமோ எமக்கு முக்கியமானதொன்றல்ல.இனப்பிரச்சினைக்கான தீர்வே முக்கியமானதொன்றாக உள்ளது.

தற்போதைய ஜனாதிபதியும் ஒரு போர்க்குற்றவாளி என்பதில் எமக்கு வேறு கருத்தில்லை.யுத்த இறுதிக்காலத்தினில் அவர் பதில் மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்திருந்தார்.அவ்வகையினில் அவரும் கொலையாளியே.மஹிந்த அண்ணரெனில் இவர் போர்க்குற்றத்தினில் தம்பியாவார்.

தேர்தலிற்கு முன்னதாக புலம்பெயர் அமைப்புக்களினை சந்தித்த ஆதரவு கோரியவேளை தடுத்து வைத்தள்ளவர்கள் விடுதலை,ஆக்கிரமிக்கப்பட்ட நிலவிடுவிப்பு என உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

கடந்த 5வருடங்களினில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ஏக்கரினில் இப்போதுதான் ஒருவாறாக ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று சிறைகளினில் அரசியல் கைதிகள் 300 பேரே உள்ளதாக கூறுகின்றனர்.இரகசிய தடுப்பு முகாம்கள் இல்லையெனவும் கூறுகின்றனர்.போர்க்குற்றவாளி சரத்பொன்சேகாவிற்கு ஒருநாளில் மார்சல் வழங்கும் இவர்கள் எமது இளைஞர்களை விடுவிக்க கால அவகாசம் கேட்பதாகவும் தெரிவித்தார்.