மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ் அரசியல் தலைவர்களே!!

என்றும் தமிழ்த்தேசியப்பாதையிலே நீங்கள் பயணிக்கவேண்டும் என்றும் எதற்காக தமிழர்கள்  ஈடுசெய்துகொடுக்கமுடியாத இழப்புக்களையும் தியாகங்களையும் செய்தார்களோ! அதன் நோக்கம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காக எந்த ஒரு அரசியல் கட்சியினையும் சாராத ஒரு தமிழ் மகனாகிய நான் இந்த கடிதத்தினை தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்கள்  அனைவரதும் கவனத்திற்காக வரைகின்றேன். இதன் நோக்கம் யாரையும் விமர்சனம் செய்யவேண்டும் என்பதோ அல்லது என்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள
வேண்டும் என்பதோ அல்ல.

மேலும் எதற்காக இவளவு இழப்புக்களை சந்தித்தோமோ அதற்கு நியாயமான ஒரு தீர்வு வேண்டும். உடலிலும் மதிலும் வலிகளை சுமந்து நடமாடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வலி நிவாரணம் என்பது அவர்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் மாத்திரமே தங்கியுள்ளது
எனவே அதனை யதார்த்த ரீதியாக சிந்தித்து செயற்பட்டு பெற்றுக்கொடுக்கவேண்டியது தமிமக்களால் தெரிவுசெய்யபட்ட அத்தனை பிரதிநிதிகளதும் கட்டாய கடமை அதனை செய்யமுடியாதவர்கள் அரசியலில் இருந்து வெளியேறிவிடவேண்டும்  மாறாக சுயநலவாத அரசியலிலே ஈடுபட்டுவது மரத்தால் விழுத்தவனை
மாடு ஏறி மிதித்ததைப்போலாகும்.

அறுபது ஆண்டுகளாக போராடி கணக்கிட்டுச்சொல்லமுடியாத அளவு பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துங்களைய்யும் எண்ணிக்கையில்லாத  சொந்தங்களையும் இந்த விடுதலை வேள்விக்கு விறகாக கொடுத்துவிட்டு இன்று ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்கின்றோம் என்பதை இல்லை என்று எவராலும்
கூறிவிட முடியாது. ஆனால் அன்று தந்தை செல்வாகாலத்தில் தமிழர்களது இனவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்தபோது தமிழர்கள் என்றால் யார்? எதற்காகஅவர்கள் போராடுகின்றார்கள் ? இவர்கள் எந்த சமூகத்தினை சார்ந்தவர்கள்  இவர்களது கோரிக்கைகள் என்ன ? இவர்களது பலம் என்ன? பலவீனம் என்ன?
என்ற எந்த ஒரு தகவலும் சர்வதேச சமூகத்திடம் சரியாக சென்றடையவில்லை எனவே சர்வதேச அரங்கிலே தமிழர்களது போராட்டம் அவ்வளவாக பேசப்படவில்லை அதனைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியமும் அவர்களுக்கு அப்போது இல்லை .ஆனால் இன்று அப்படியல்ல உலகத்தில் உள்ள  மூலை முடுக்குகளெங்கும் எமது விடுதலைப்போராட்டம் சென்றடைந்துள்ளது எமது கோரிக்கைகள் என்ன? எமது போராட்டத்தின் நியாயத்தினை உலகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது அதற்காக ஒருசில மனிதநேயம் உள்ள அமைப்புக்களும் குரல்கொடுக்க தொடங்கிவிட்டன

2009இற்கு முன்னதாக  விடுதலைப்புலிகள்  ஆயுதம் ஏந்தி போராடியகாலத்தில் களத்தில் நின்று மட்டுமே தமிழர்களால் வெளிப்படையாக போராடமுடிந்தது அதற்கு ஆதரவாக புலத்திலே தமிழர்களால் வெளிப்படையாக போராடவோ குரல்கொடுக்க முடியாமலே இருந்தது அதற்கான காரணம் அன்று தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு பயங்கரவாதம் என்ற ஒரு கறை பூசப்பட்டிருந்தது ஆனால் இன்று அந்த பயங்கரவாதம் இன்று இல்லை அன்று பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அனைவருமே இந்த மண்ணுக்குள்ளே மாவீரர்களாக விதைக்கப்பட்டுள்ளார்கள் எனவே இன்று  தமிழர்களின் அரசியல் ரீதியான அகிம்சைரீதியான போராட்டங்களை பயங்கரவாதம் என்று கூறிவிடமுடியாது எனவே இப்போது புலம் களம் இரண்டிலும் உள்ள தமிழர்கள் ஒன்றாக இணைந்தே போராடவேண்டும் அப்போதுதான் நாம் பலமானவர்களாக மாறலாம் நாம் பலமான இடத்திலே நின்றால்தான் எமது கோரிக்கைகளும் நியாயங்களும்
ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும் அதைவிடுத்து நீ வேறு நான் வேறு என்று புலம் களம் இரண்டையும் பிரிந்துவிட்டால் நாம் பலமற்றவர்களாக மாறிவிடுவோம்  வலுத்தவன் முன்னே களைத்தவன் தலைகுனியும் இயல்பு நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் எனவே இந்த இழிநிலைக்கு
தமிழர்கள் தள்ளப்படவேண்டும் என்று ஒர் சில அரசியல் வாதிகள் நினைப்பதும் அதற்காக அல்லும் பகலும் உழைப்பதும் எதற்காக?

ஆசியா,ஐரோப்பா, அமெரிக்கா, என கண்டங்கள் அனைத்திலும் அகதிகள் என்ற அவப்பெயருடன் சிதறிவாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் அனைவரையும்  ஒன்றாகத்திரட்டி  ஒற்றுமையுள்ள சமூகமாக கட்டியெளுப்பி  மாபெரும் பலத்துடன் இனவிடுதலைப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு உந்துசக்தியினை  கொடுக்கவேண்டிய எமது தலைவர்களாகிய நீங்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்? மாகாணசபை தேர்தலின் போது எவளவு எதிர்பார்ப்புக்களுடன்
வாக்களித்தோம் ஆனால் நீங்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையினைப்போல தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம், ஆகிய கோசங்கள்  எல்லாம் படிப்படியாக குறைந்து இப்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாண்போம் இணக்க அரசியல் செய்வோம் என்று கூறுகின்றீர்களே
உங்கள் நெஞ்சத்தில் ஈரம் ஏதும் உள்ளதா?

நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு திருப்தியளிக்கின்ற ஒரே காரணத்தினால் அதனை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லையா? இரகசியப்பேச்சுவார்த்தை என்றும் அரசியல் தந்துரோபாயம் என்றும் நீங்கள் மட்டுமே முடிவுகளை எடுக்கின்றீர்கள் மக்களின் விருப்பம் என்ன ? அவர்களின் அபிலாசை என்ன என்பதை கேட்டறியாது இன்று சர்வாதிகாரப்போக்குடனே செயற்படுகின்றீர்கள் என்பதனை என்னால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டமுடியும்?  தமிழர்கள் உங்களை தெரிவுசெய்தது சிங்களத்தோடு முரண்பட்ட அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக அல்ல எமது இன விடுதலைப்போராட்டத்தினை அரசியல் ரீதியாக வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே எனவே நீங்கள் உங்கள் செயற்பாடுகள் என்ன ? சமகால அரசியல் நிலவரம் என்ன? நீங்கள் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு திருப்தியளிக்கின்றதா உங்கள் முடிவுகளின் நோக்கம் என்ன என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தி  அவர்களையும் உங்களுடன் இணைத்துக்கொண்டு போராடவேண்டுமே தவிர மூடிய அறைகளுக்குள் நீங்கள் செய்வது அரசியலா அல்லது அரசியல் விபச்சாரமா என்ற கேள்வியினை மனவருத்தத்துடன் உங்களிடம் கேட்கின்றேன்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே மகிந்தவை வீழ்த்துவோம் என்று கூறி மக்கள் மனதிலே வெறும் பழி உணர்வை தூண்டிவிட்டு மகிந்தவை வீழ்த்தினீர்கள் ஆனால் இன்று இதனால் எமக்கு கிடைத்த சன்மானம் என்ன? தமிழர்களை தனது ஓட்டு இயந்திரமாக பயன்படுத்திக்கொண்டு ஆட்சிபீடம் ஏறிய இன்றைய
ஜனாதிபதி தமிழர்களுக்கு தந்த சன்மானம் என்ன?  இனப்படுகொலையின் முக்கிய குற்றவாழிகளில் ஒருவரான சரத்பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி வழங்கப்பட்டுள்ளது இதை எவ்வாறு தமிழர்களால் ஜீரனித்துக்கொள்ள முடியும் கூண்டில் ஏற்றப்படவேண்டிய குற்றவாழிக்கு கோட்டையிலே அரியணையா?
எவ்வாறு இதனை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியும் இனவழிப்பு விசாரனை முடியவில்லை குற்றவாழிக்கூண்டிலே ஏற்றப்படவேண்டிய ஒரு நபருக்கு எவாறு அதியுயர் பதவி வழங்கமுடியும் ?உன்மையுள்ளவர்களாக நீங்கள் இருந்திருந்தால் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஒட்டுமெத்த தமிழர்களையும்  கொன்று குவித்தமைக்காக இந்த அரசு சரத்பொன்சேகாவுக்கு அதியுயர் பதவி  வழக்குகின்றது என்றால் பாத்திக்கப்பட்ட தமிழர்கள் எவாறு இவர்களின் ஒன்று பட்ட இலங்கைக்குள் வாழ உடன்படுவார்கள் அது எவ்வாறு சாத்தியமாகும் மேலும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட நீங்களே எமக்கு பாதகம் செய்கின்றீர்களா  என்ற சந்தேகம் நீடிப்பதோடு அதுவே நிதர்சனமாகின்றது

உண்மையிலே நீங்கள் முட்டாள்களா? அல்லது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்கள் ஆக்கிவிட நினைக்கின்றீர்களா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னராக  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களை பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் சந்த்தித்தேன்  அப்போது அவரிடம் நான் சில கேள்விகளை கேட்டேன் ஆனால் அவர் கூறிய பதில்கள் எனக்கு மிகவும் ஏமாற்றத்தினையும் எமது தலைவர்களாகிய உங்கள்
மீது அவ நம்பிக்கையினையும்  ஏற்படுத்தியது  முக்கியமாக அவரிடம் நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலிலே எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரியை ஆதரித்தது எதற்காக என்று கேட்டிருந்தேன் அதற்கு பிரபல சட்டத்தரனி திரு சுமந்திரன் அவர்கள் கூறிய பதில் இதுதான்.

இதுவரை காலமும் நாங்கள் பல சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களைச்செய்திருக்கின்றோம் ஆனால் அவை அனைத்துமே செயலற்றுப்போனவை பல ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டன
எனவேதான் நாம் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்துகொள்ளாது மைத்திரிபால மற்றும் ரணில் சரத்பொன்சேகா சந்திரிக்கா ஆகியோருடன் பேசி அவர்கள் கூறிய உறுதிமொழிகளை நம்பி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம் வெற்றியடைய வைத்தோம் -இவ்வாறு கூறி முடித்தார் உன்மையிலே என் அன்புக்குரிய
உறவுகளே! உலகத்தமிழர்களே! நான் கேட்ட கேள்விக்கு அந்த அறிவாளி கூறிய பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? மூன்றாம் தரப்பு ஒன்றின் முன்னிலையில்  சட்டபூர்வமாகவும் அதிகாரபூர்வமாகவும் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையே கிழித்து எறிந்தவர்களின் வார்த்தைகளை நம்புகின்றோம் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனைமாக இல்லையா ?

அடுத்து நான் அவரிடம் இன அழிப்பு பிரேரனையினை தமிழர்களின் பிரதிநிதியாகிய நீங்களே எற்றுக்கொள்ளவில்லை அதை எவ்வாறு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் இலங்கையில் நடபெற்றது இன அழிப்பு அன்பதனை ஏன் இன்னமும் வலியுறுத்தவில்லை அதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது அவர்  என்னை பார்த்து  ஒரு கேழ்வி ஒன்றினை கேட்டார் அதாவது இன்று  ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட  முன்னாள் அமைப்பாளர் கமலேந்திரன் அவர்கள் கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் கொலையாளியா இல்லையா என்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது எனவே விசாரணை முடியமுன்னதாக அவரை கொலைகாறன் என்று கூறுவீர்களா என்று என்னை பார்த்து கேட்டார் நான் மௌனமாகி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் மேலும்  அவர் கூறியதாவது இப்போது ஐநாசபையிலே போர்க்குற்ற விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை அதன் விசாரனை இன்னமும் முடிவடையவில்லை எனவே எவ்வாறு நாங்கள் இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று முடிவெடுக்க முடியும் என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார் இதனே கேட்கும்போது அப்படியே எழுந்து சென்று அவர் சட்டையினை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடவேண்டும் போல் இருந்தாலும் நாகரிகமற்ற முறையிலே நடந்துகொள்ள விரும்பாத காரணத்தினால் நான் மௌனமாக அமர்ந்து கொண்டேன் உன்மையிலே எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நாமே சாட்சி முறிந்த பனைமரங்களும் இடிந்த வீடுகளும் சொல்லும் எங்கள் மீது சிங்கள இரானுவம் குண்டுகளை வீசவில்லை குண்டு மழைகளை வீசினார்கள் என்று எமக்கு நடைபெற்ற கொடுமைகள் வெட்டவெளியிலே சர்வதேசத்தின் முன்னே நடைபெற்றது ஆனால்  திரு சுமந்திரன் அவர்கள் கூறிய கமலேந்திரன்  கொலைக்குற்றச்சாட்டு ஒரு மூடிய அறைக்குள் நடைபெற்றது இவை இரண்டையும் தொடர்புபடுத்தி தமது  தவறுகளை நியாயப்படுத்தும் திரு சுமந்திரன் அவர்களின் அரசியல் தெளிவு எவ்வாறனதாக இருக்கும்  என்பதைனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுதைப்போல எமக்கு நடந்தது இன அழிப்பே என்பதனை ஏற்றுக்கொள்ள ஆதாரங்கள் தேவை என்று கூறுவது நியாயமாகுமா?

இது தனிப்பட்ட விரோதமோ அல்லது விமர்சனமோ அல்ல எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் தவறுகள் செய்யும்போது அதனை தட்டிக்கேட்கும் உரிமை ஒவ்வெருகுடிமகனுக்கும் உள்ளது அதனையே நானும் உங்களிடம் கேட்கின்றேன் . உன்மையில் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலே எப்போது போர் நடைபெற்றது? இலங்கையில் போர் நடைபெற்றது  எனவே போர்க்குற்ற விசாரனை நடைபெறுகின்றது என்று கூறிவிட்டு உங்கள் சுயநலவாத அரசியல் நடவடிக்கைகளிலே நீங்கள் குதித்துள்ளீர்கள் என்பதனை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் காரணம் இலங்கையில் எப்போது போர் நடைபெற்றது என்பதை உங்களால் கூற முடியுமா? தமிழர்கள் எப்போது சிங்களவர்களோடு போர் தொடுத்தார்கள் என்பதனை உங்களால் கூறமுடியுமா? இலங்கையில் ஒருபோதும் போர் நடைபெறவில்லை சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகாரக தமிழர்கள் போராடினார்களே தவிர அவகள் மல்லுக்கட்டிக்கொண்டு சென்று போர் தொடுக்கவில்லை சிங்களவர்கள் செய்த இனவழிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களே தவிர அவர்கள் போர் செய்யவில்லை இதனை நீங்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கத்தவறிவிட்டீர்கள் போருக்கும் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள தவறிவிட்டீர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக சர்வதேசத்திடம் சென்று இலங்கையில் போர்  நடைபெறவில்லை எனவே போர்க்குற்ற விசாரனை என்பதனை நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் அங்கே நடைபெற்றது தமிழின அழிப்பு எனவே நீங்கள்
இன அழிப்பு விசாரைனையினை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தமுடியாது  போனது ஏன் ?இன அழிப்பு என்ற வார்த்தையினை உச்சரிக்கவே நீங்கள் தயங்குவது  எதற்காக? யாரை திருப்திப்படுத்துவதற்காக? இந்த கேள்விகள் நியாயமானவை இதற்கு உங்களால் பதில் கூற முடியுமா?

அடுத்து நடந்து முடிந்த ஜனாதிபதிதேர்தலினை புறக்கணிக்கவேண்டும் என்று கூறிய வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் ஆகியோரை கட்சியின்  கொள்கையினை மீறினார்கள் என்றும் தலமையின் முடிவுக்கு எதிராக தனித்து செயற்பட்டார்கள் என்றும் கூறி   கட்சியில் இருந்து நீக்கினீர்கள் ஆனால் தமிழரசு கட்சியின் இன்றைய கொள்கை தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்பவற்றை பற்றி பேசக்கூடாது என்பதா என்ற சந்தேகம் எழுகின்றது.  தமிழ்த்தேசியத்தில் தீவிரமாக உள்ள அனைவரையும் நீங்கள் ஓரம்கட்டி வருகின்றமையினை என்னால் ஆதாரபூர்வமாக
பட்டியலிட்டு காட்டமுடியும் எனவே தமிழ்த்தேசியவாதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இலங்கைத்தேசியவாதிகளை உள்வாங்கிக்கொள்ளப்போகின்றீர்களா?  உன்மை எதுவோ மக்களுக்கு அதனை தெளிவுபடுத்துங்கள் மாறாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசியம் பேசிவிட்டு கொழும்பில் சென்று சிங்களத்தேசியம்  பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்

குரு செய்தால் குற்றமில்லையா  தமிழ்மக்களின் இன்றைய பிரதிநிதிகள் ஆகிய நீங்கள் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குபின்னர் பூனையில்லா விட்டிலே சன்னதமாடும் எலிகளாக மாறி சர்வாதிகார
போக்குடன் பல சந்தர்ப்பங்களிலே செயற்பட்டுள்ளமையினை ஆதாரங்களுடன்  என்னால் முன்வைக்கமுடியும் அனால் இறுதியாக நடந்த ஒரே ஒரு சம்பவத்திற்கு உங்களிடம் நியாயமான விளக்கத்தினை கோரி நிற்கின்றேன் அதாவது .இலங்கையின் சுதந்திர தின விழாவிலே திரு சம்மந்தன் அவர்களும்சுமந்திரன் அவர்களும் கட்சியின் அனுமதியின்றி பல வருடங்களாக தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட சுதந்திர தின விழாவிலே சென்று கலந்து கொண்டார்களே இவர்களுக்கு எதிராக
ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை குரு செய்தால் குற்றம் இல்லை என்ற சட்டத்தினை எப்போது தமிழரசு கட்சி உருவாக்கியது தனது கொள்கையில் இருந்து விலகிச்சென்றால் தனது பாதுகாவலனே தன்னை சுட்டுக்கொள்லலாம் என்று கூறிய தலைமையின் கீழே உருவாகிய சமுதாயம் உங்கள் கீழ்த்தரமான
செயல்களை இன்னமும் எத்தனைகாலம் பெறுத்துக்கொள்ளப்போகின்றன?

இன்று எதிர்க்கட்சித்தலைவர் பதவி வேண்டும் என்று ஒற்றைக்காலிலே நின்று சிங்களத்தலமைகளிடமும் கடும்போக்காளர்களிடமும்  கோரிக்கை விடுக்கின்றீர்கள் ஆனால் எதிர்வரும் பாராளுமண்றத்தேர்தலிலே போட்டியிடும்போது எந்த தீர்மானத்தினை தமிழ்மக்கள் மத்தியில் முன்வைக்கப்போகின்றீர்கள். தயவுசெய்து
அதனை வெளிப்படையாக கூறிவிடுங்கள் வடக்கிலும் கிழக்கிலும் பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் மாவீரர்கள் என்று கூறிவிட்டு கொழும்பிலே சென்று பிரபாகரன் சர்வாதிகாரி விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று பேசுவதையே இன்றைய தமிழ்தலமைகள் வழக்கமாகக்கொண்டுள்ளனர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக கண்களை மூடிக்கொண்டு தமிழ்மக்கள் இதுவரை வாக்களித்தார்கள் ஆனால் இனியும் அப்படியே
தமிழர்கள் செய்வார்கள் என்ற தைரியத்தில் தமிழினத்துக்கு பல நாசகார வேலைகளை கூட்டமைப்பின் ஒரு சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்  அந்த அளவு மதிகொட்ட மந்தைகளாக தமிழர்கள் இல்லை என்பதை வெகு விரைவிலே புரிந்துகொள்வீர்கள்

மேலும் உங்களிடம் ஒருவிடயத்தினை தயவுடன் கேட்க்குக்கொள்கின்றேன் தனிநாடு வரும் தனிநாடு வரும் என்று போராடி  மூன்று சந்ததிகள் மண்ணுக்குள் மாவீரர்களாக புதைக்கப்பட்டுவிட்டன தனிநாடு காண காத்திருந்த கண்கள் எல்லாம் இப்போது சுடுகாட்டைனையே காண்கின்றன அம்மா நான் போராடப்போறேன்
என்று விளையாடப்போகவேண்டிய பிள்ளைகள் கூட அன்று போராடச்சென்று பேரினவாதப்போய்களின் இரையாகிபோயின இனவிடுதலை ஒன்றையே  தங்கள் இலட்சியமாக நினைத்து  களமாடச்சென்ற எத்தனையோ போராளிகள் இன்று அங்கவீனர்களாகவும் வாழ வழியற்றவர்களாகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன எத்தனையாயிரம் உறவுகளைத்தொலைத்தோம் கண்முன்னே இன்னமும் வந்து வந்து போகின்றன எங்கள் அவல வாழ்கையின் அந்த நாள் நினைவுகள் ஆனால் அவையெல்லாவற்றினையும் மறந்தோம் மன்னித்தோம் என்ற ஒரே வார்தைக்குள் அமுக்கிவிட்டு சிங்களப்பேரினவாதப்பிசாசுகளுடன் சேர்ந்து வாழ வாருங்கள் என்று எங்கள் வீட்டுப்பிள்ளைகளை அழைக்கின்றீர்களே! இது நியாயமாகுமா? சாத்தியமாகுமா?உங்களுக்கு மனசாட்சி இல்லையா?
ஓநாய்க்கூட்டத்துடன் புள்ளிமான் கூட்டம் எவ்வாறு வாழமுடியும் இந்தியா என்ற குரங்கின் பேச்சினை கேட்டு எங்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் மீண்டெழமுடியாத பள்ளத்தில் தள்ளிவிடவேண்டாம்

அய்யா சம்மந்தன் அவர்கள் கூறுகின்றார் இந்தியா விரும்பாத எதையும் நாங்கள் செய்யமாடோம் என்று ? அதேவேளை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் கூறுகின்றார் எங்களுக்குத்தெரியும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னைப்பொறுத்தவரை எனது சிற்றறிவுக்கு எட்டியவரை இந்தியா என்பது ஒரு குரங்கு அந்த குரங்கிடம் இனப்பிரச்சினை என்ற அப்பத்தினை தமிழ் சிங்கள பூனைகள் கொடுத்தால் அதன் முடிவு என்னவாகும்? இந்தியா அகிம்சை என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் ஒரு சர்வாதிகார நாடு இது ஒருபோதும் தமிழர்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை இதனை இன்னமும் நீங்கள்
புரிந்துகொள்ளவில்லையா? அல்லது நீங்கள் இந்தியாவிடம் பட்ட கடனுக்காக தமிழ்மக்களை அடகுவைக்கின்றீர்களா இது நியாயமான கேள்வி இதற்கெல்லாம் பதில் உங்களிடம் உள்ளதா?

வயதிலும் அனுபவத்திலும் மூத்த சம்மந்தன் ஐய்யா உற்பட அனைத்து தமிழ்த்தலைமகளிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன் எமக்கான நியாயமான ஒரு தீர்வினை நிரந்தரமாக பெற்றுத்தாருங்கள் அல்லது உங்களால் முடியாவிட்டால் அரசியலில் இருந்து வெளியேறிவிடுங்கள் அதைவிடுத்து கதிரைகளுக்காக
சுயநலவாத அரசியலிலே ஈடுபடவேண்டாம் மேலும் ஒருபோதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ ஆசைப்படமாட்டார்கள் வாழவும் முடியாது இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலிலே இணக்க அரசியலை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழ்மக்கள் முன்னே வைத்து போட்டியிட்டுப்பாருங்கள் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை நன்கு அறிவீர்கள் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தினை நிறைவேற்றியபோது  தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு மக்கள் கொடுத்த தீர்புத்தான் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலே அமரவைத்தது என்பதை மறக்கவேண்டாம்

கண்டங்கள் யாவற்றிலுமே சிதறிக்கிடக்கின்றது தமிழினம் ஆனால் அவர்களை எல்லாம் ஒன்றாகத்திரட்டி  ஒற்றுமையுள்ள சமூகமாக கட்டியெளுப்பி  போராட வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் புலம்பெயர்தமிழர்கள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று பிரித்து தமிழினத்தை பலவீனப்படுத்துவது எதற்காக உதாரனமாக கடந்த மாதம் திரு சுமந்திரன் அவர்கள் புலம்பெயர் தமிழர்களால் எந்த நன்மையும் இல்லை என்றும் புலம்பெயர் தமிழர்களை எமது அரசியல் போராட்டத்திற்கு வேண்டப்படாதவர்களாகவும் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார் ஆனால் இதனை தவறு என்று கட்சியின் தலமை ஏன் சுட்டிக்காட்டவில்லை புலம்பெயர் தமிழர்களால் எந்த நன்மையும் இல்லை என்று கூறும் திரு சுமந்திரன் அவர்களே உங்களால் ஏற்பட்ட நன்மை என்ன என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளது என்பதை மறக்கவேண்டாம் போர்க்குற்ற விசாரணை பிற்போடப்பட்டமைக்கு நீங்கள் கூறிய விளக்கம் அதன் நோக்கம் எல்லாமே தெட்டத்தெளிவாக உங்கள் முகமூடிகளை எமக்கு அடையாளமிட்டுக்காட்டுகின்றன ஒரு நீதிக்கானவிசாரனையினை எதிர்ப்பாத்து ஏக்கத்தோடு காத்திருக்கும் சமூகத்திடம் அந்த விசாரனை பிற்போடப்பட்டதனி நியாயப்படுத்தி  நீங்கள் கூறிய விளக்கமே உங்கள் அடையாளத்தினை தெளிவுபடுத்தியுள்ளது

நாசகாரவேலைகளை திரைமறைவிலே செய்துவிட்டு தமிழர்கள் வீடுகளுக்கு ஓட்டுகேட்டு வரும் ஒவ்வெருவருக்கும் இம்முறை சரியான பாடம் கற்பிக்கப்படும்  எங்கள் வீடுகளிலே தமிழ்த்தேசியம் கொழும்பிலே சிங்களத்தேசியம் இனியும் உங்கள் மந்திரச்சொல்லுக்கு தமிழர்களின் வாக்குகள் விழப்போவதில்லை உன்மையிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அதன் தலமைகளும் சரியான பாதையிலே செல்கின்றார்களா? எனது குற்றச்சாட்டுகள் போலியானைவையா ? தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற தலமையில் இருக்கும் உங்கள் மீது எங்கிருந்தோ ஒரு மூலையில் இருந்துகொண்டு சேறுபூசவேண்டும் என்பது எனது ஆசை அல்ல அல்லது கூட்டமைப்பின் மீது அவதூறு செய்ய வேண்டும் என்பதோ அதை உடைக்கவேண்டும் என்பதோ எனது ஆசை அல்ல அனுபவசாலிகள் என்றும் அறிவாளிகள்
என்றும் கூறிக்கொண்டு எனது சமூகத்தினை தவறாக வழிநடத்துவதை நான் விரும்பவில்லை எனது குற்றச்சாட்டுகள் என்ன என்பதையும் நீங்கள் செய்த இழிவான செயல்களையும் அடுத்து பட்டியலிட்டுக்காட்ட விரும்புகின்றேன் தவறுகள் திருத்தப்படவேண்டும் முகமூடிகள் கிழிக்கப்படவேண்டும்

தொடரும்……….
-நன்றி
ஈழத்தில் இருந்து
-ஒருவன்