யாழ் ஊடகவியலாளர் உட்பட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் நள்ளிரவில் கைது April 23, 2015 News யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், இன்று அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர், ஹிரு தொலைக்காட்சியின் யாழ்ப்பாண செய்தியாளரான ந. பிரதீபன் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மூவரில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், தெரியவந்துள்ள அதேவேளை, மூன்றாமவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் யாழ். காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 7ம் நாள் நல்லூரில் சிறிலங்கா காவல்துறையினரால், அச்சுறுத்தப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களில் ஒருவரான ந.பிரதீபனே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.