போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள்.

இதுபற்றி பிரபல ஆங்கில  ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது.

இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார்.

பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவன்மார்களை இழந்து விதவைகளாகி தங்களையும், தன் குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

இந்த போர்விதவைகளை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக மறந்துவிட்டது. வாழ்வதாரத்துக்காக தவித்துவரும் இந்த ஆயிரக்கணக்கான விதவைகளுக்கு புதிய அரசாங்கம் என்ன உதவி செய்வார்கள் என்பதே தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது என்று கூறி இந்த ஆவணப்படத்தை முடித்துள்ளனர்.