நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை.

தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை நடத்தி இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சவை நாமும் தண்டிக்க மாட்டோம், சர்வதேச தண்டனைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கமாட்டோம் என்று சொல்லியே மைத்திரி ஆட்சியைப் பிடித்தார். அவரின் 100 நாள் ஆட்சி தமிழர்களுக்கு எதுவும் தந்துவிடவில்லை. கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி வடக்கில் எப்படியிருந்ததோ, அப்படியேதான் இப்போதும் இருக்கின்றது. மக்கள் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனுவித்த அதே துயரத்தைத் தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள். வடக்கில் இராணுவப் பிரசன்னம் அப்படியே தான் இருக்கின்றது. கொக்கிளாய் பகுதிக்குள் இப்போதும் நில அபகரிப்புத் தொடர்கின்றது. காணிகள் விடுவிப்பதாக சொல்லப்பட்டாலும் புதிதாக எவையும் விடுவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் விடுவிப்பதற்கெனத் திட்டமிட்ட, காணிகளின் ஒரு பகுதியையே இந்த அரசு விடுவித்திருக்கின்றது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் இரண்டுபேர் சேர்ந்து கதைத்தாலே புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஜனநாயக வழிப் போராட்டங்களை மக்களும், அரசியல் கட்சிகளும் நடத்தினாலும் உடனடியாகவே அந்த இடத்தை இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிவளைத்துக்கொள்கிறார்கள். இந்த 100 நாளுக்குள்தான் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலளாரகள் 3 பேர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஆகவே நடைமுறையில் சுதந்திரமற்ற நிலைதான் ஒட்டுமொத்த தாயகப் பரப்பிலும் இருக்கின்றது. இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்றன. தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத் தலையீடு தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

எனவே இந்த அரசு நிலைப்பதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ, அடிப்படை வாழ்வாதார உரிமைகள் பேசாது. பேசவும் முடியாது. அப்படிப் பேசினால் பெரும்பான்மையினத்தவரின் பலத்தை இழக்க நேரிடும்’

நன்றி – கொழும்புமிரர்