ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன முரண்பாடு உச்சத்தைத் தொட்டபோது அகிம்சையும் வாய்ப் பேச்சும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தராது என்ற புரிதல் இளைஞர் மத்தியிலே உருவாகி அவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தமது மார்க்கமாகத் தேர்ந்தேடுத்த போது இன உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழ் இளைஞனும் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டான்.

பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளியாக மாறுவதே மேல் என்ற கொள்கையுடன் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து சிவராம் எடுத்த முடிவும் அவர் பயணித்த பாதையில் அவருக்குக் கிட்டிய அனுபவமும், அதனால் சம்பாதித்துக் கொண்ட அறிவுமே பிற்காலத்தில் ஊடகத்துறையில் அவர் தனக்கெனத் தனியான முத்திரை பதிக்க பெரிதும் உதவியது.

போராளியாக இருந்த காலத்தில் கூட பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப்போக அவர் விரும்பவில்லை என்பது அவரது முன்னாள் தோழர்கள் தற்போதும் நினைவு கூரும் ஒரு விடயம்.

இலக்கியத் துறையின்மீது இருந்த அதீத ஈடுபாடு காரணமாகவே பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்துவரும் தீவிர விமர்சனக் கண்ணோட்டம் அவரது பிற்கால எழுத்துக்களில் நன்கு பரிணமித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவராமின் பங்கு எனும் தலைப்பிலே ஆய்வு செய்யப் புறப்படும் ஒருவர் சிவராமை வகைப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார் என்பது நிச்சயம். ஏனெனில் சிவராமின் ஆளுமையும் இயங்குதளமும் அத்துணை விசாலமானது.

ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார்.

தீவிரத் தமிழ்த் தேசியவாதியான சிவராம் ஒரு சிங்கள இனவெறிப் பத்திரிகையில் எழுதுவதனூடாகத் தனது எழுத்துலக வாழ்வை ஆரம்பித்தமை ஒரு முரண்நகையே.

ஆரம்ப காலங்களில் சிவராமின் எழுத்து கவனிக்கப்படாது விடப்பட்ட போதிலும் தான் சார்ந்த விடுதலை இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனான தொடர்புகளைத் துண்டித்த பின்னர் அவரின் எழுத்துக்களில் புதிய உத்வேகமும் சடுதியான மாற்றமும் ஏற்பட்டன.

ஆனால், சிவராமின் கருத்தின்படி 90 களின் நடுப்பகுதியில் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மேற்கொண்டிருந்த பயணமே அவரின் பிற்கால வாழ்க்கைக்கான செல்நெறியைத் தீர்மானித்தது எனலாம்.

இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான இந்த பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.

தமிழர்களின் போராட்டம் ஒரு ‘நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம்’ எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார்.

எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. தான் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.

தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.

அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.

மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரால் ஊடகவியலாளர் சிவராம் அவர்களுக்கு வழக்கப்பட்ட “மாமனிதர்” விருது.

ஊடகவிலாளர்கள் தமது ஊடகப் பணிக்கு அப்பால் எத்தகைய சமூகப்பணியை ஆற்ற முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்த சிவராம் செய்தி அளிக்கை தொடர்பிலும் ஒரு புதிய மாதிரியை அறிமுகஞ் செய்தார். அவரால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நெற்’ இணையத்தளம், ‘நோர்த் ஈஸ்ரன் ஹெரல்ட்’ ஆங்கில வாரப்பத்திரிகை ஆகியவை எழுத்தில் புதிய மாதிரியையும், பரிபூரண அளிக்கையின் பெறுமானத்தையும் அறிமுகஞ் செய்தன.

ஊடகவியலாளராக சிவராம் மேற்கொண்ட பணிகளுக்கு அப்பால் ஒரு தமிழ்த் தேசியவாதியாக அவர் மேற்கொண்ட துணிகரச் செயற்பாடுகளே அவரது உயிருக்கு உலை வைத்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டதன் பின்னான இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவராமின் சாதனைகளுள் ஒன்று எனக் கூறினால் அது மிகையாகாது.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தன்னளவில் மகத்தான சாதனைகளைப் படைத்த போதிலும் அது மக்கள் சார்ந்த போராட்டமாகப் பரிணமிப்பதில் சில பின்னடைவுகள் இருந்தே வந்தன. எனினும் சிவராமைப் போன்றோரின் முயற்சிகள் இப் போராட்டத்திற்கு குடிமக்கள் சார்பு முகத்தைத் தந்திருந்தது.

பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்வுகளாகட்டும், கடையடைப்பு போன்ற எதிர்ப்பு நிகழ்வுகளாகட்டும் அவற்றை ஏற்பாடு செய்வதிலும் நேரடியாகச் சென்று பங்கெடுத்துக் கொள்வதிலும் அவை தொடர்பிலான செய்திகளை அளிக்கை செய்வதிலும் சிவராம் எடுத்துக் கொண்ட சிரத்தை அபரிமிதமானது.

இது தவிர, இலங்கைத் தீவில் கொடூரமான சட்டங்களே அமுலில் இருந்த போதிலும் அவை குடிமக்களுக்கு வழங்கியுள்ள அற்ப சொற்ப பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் ஊடாக, கொடுமைகளையும் அநீதிகளையும் தட்டிக் கேட்கும் வல்லமையுள்ள ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் சிவராமிடம் நிறையவே இருந்தது.

அதன் விளைவாக மட்டக்களப்பில் உதயமான தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் செயற்பாடுகளில் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கழகத்தின் அறிக்கைகள் சிவராமின் கைவண்ணத்தில் அர்த்தம் பொதிந்தவையாகவும் அறிவூட்டக் கூடியவையாகவும் அமைந்திருந்தமையை மறுப்பதற்கில்லை.

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்ற தத்துவத்தில் சிவராமுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதே அவரின் நிலைப்பாடு. படைத்துறை வெற்றிகளே தமிழர்களின் நியாயங்களை எதிரிக்குப் புரிய வைக்கும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

சிவராமின் வகிபாகம் தமிழர் அரசியலைப் பொறுத்தவரை எவ்வளவு காத்திரமானதாக விளங்கியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிரிகளைப் பொறுத்தவரை அது அவர்களது செயற்பாடுகளுக்குப் பெருந்தடையாக விளங்கியது. தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த சிவராம் தனது பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார்.

ஆனாலும் கூட அவரது உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டு விட்டது. சிவராமைக் கொலை செய்வதன் ஊடாக அவரின் சிந்தனைகளை தமிழர் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியும் எனக் கொலைகாரர்கள் மனப்பால் குடித்தனர்.

ஆனால், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில் அவரைக் கொலை செய்தவர்களுக்கு சிவராமின் மரணம் ஒரு தோல்வியே அன்றி வேறில்லை.

– ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நீங்கா நினைவாக சண் தவராஜா.

மாமனிதர் சிவராம் (தராக்கி)

பல்திறன் கொண்ட ஊடக நண்பன் சிவராமின் இழப்பு ஐந்து ஆண்டுகள் சென்றாலும் என் மனதை இன்னும் வாட்டிக் கொண்டே இருக்கின்றது. அவரின் இழப்பு ஊடகத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் சமுகத்திற்கே ஏற்பட்ட பாரிய இழப்பாகும் என மாமனிதர் சிவராமின் நெருக்கிய நண்பரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாபகர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாமனிதர் சிவராமை ஒரு போராளியாக ஊடகவியலாளராக நான் சந்தித்திருக்கின்றேன். அவர் போராளியாக இருந்து நாட்டுக்குச் செய்ததைவிட ஊடகவியலாளராக இருந்து செய்த சேவை என்பது மிக காத்திரமானது. அவர் ஒரு ஊடகவியலாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக, இலக்கியவாதியாக, பேச்சாற்றல் கொண்டவராக……. என்று பல் கலைகளிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.

அவரைப் பற்றிக் கூறுவதென்றால் அது நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அவருடன் இறுதிக் காலம் வரை நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் சிவராமைப் போன்ற ஒரு பல்துறை சார் ஆற்றல் கொண்ட ஒருவரை எமது சமுகம் இழந்திருக்கின்றது. இந்த இடைவெளியை இன்னும் எவராலும் ஈடு செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

நானும் சிவராமும் நீண்டகாலம் ஊடகத்துறையில் மாத்திரமின்றி கலை கலாசார சமுக, அரசியல் என பல விடயங்களில் ஈடுபட்டிருந்தோம். ஊடகத்துறையில் குறிப்பாக 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நெற் உட்பட சர்வதேச ஊடகங்களில் இணைந்து பணியாற்றிய வேளையில் பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது, அந்த வேளையிலும் நாங்கள் இருவரும் அசட்டுத்துணிவில் மோட்டார் சைக்கிளில் இரவு பகல் பாராது மட்டக்களப்பில் சுற்றிக் கொண்டிருந்ததையும் வாழைச்சேனையில் உள்ள எனது வீட்டில் இருவரும் தங்கியிருந்ததையும் இன்றும் என்னால் மறக்க முடியாது.

எங்களுடன் பல ஊடக நண்பர்கள் சேருவதற்கோ, கதைப்பதற்கோ பயந்திருந்த காலமது. எழுத்துத்துறையில் சர்வதேச ரீதியில் என்னை உயர்த்தி விட்டவர் சிவராம் என்பதை நான் மறக்க முடியாது. பேனா கொண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை கணணி யுகத்திற்குக் கொண்டு சென்றவர் சிவராம்தான். என்னை மாத்திரமல்ல வடகிழக்கு என்ற பேதமின்றி எழுத்துத்துறையில் ஆற்றல் உள்ளவர்களை மாத்திரமல்ல பல புதியவர்களையும் அவர் ஊடகத்துறையில் இணைத்து வளர்த்தெடுத்தார்.

ஊடகத்துறையில் இருக்கும் பலர் இவ்வாறு புதியவர்களை வளர்த்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பது என்பது மிகமிக அரிதான விடயம். மாறாக போட்டி பொறாமையுடன் ஒருவரை ஒருவர் எவ்வாறு கருவறுக்கலாம் என்றிருந்தோர்கள் மத்தியில் அற்புதமனிதராகத் திகழ்ந்தவர் சிவராம். ஏனைய ஊடகவியலாளர்களை மதிக்கும் பண்பு கொண்ட அவர் ஊடகப் பண்புகளை மதித்து தொழில் ரீதியாக எவரையும் புண்படுத்தாமல் அவதூறு பேசாமல் நாகரீகமாக வாழ்ந்தவர். அந்த பண்பு இன்று சிலரிடம் இல்லை என்பது உண்மை. நான் கொண்ட கொள்கையை ஆழமான தேசப்பற்றை அவர் மிகவும் நேசித்தார்.

இதனால் நாங்கள் இருவரும் தேசியம் தொடர்பான பல வேலைகளில் ஈடுபட முடிந்தது. அவருடன் ஊடகத்துறை மாத்திரமின்றி பல சமுக வேலைகளிலும் நான் ஈடுபட்டிருந்தேன். அது மாத்திரமின்றி கொள்கை தமிழ் தேசியம்விடுதலை என்ற சித்தாந்தத்திற்குள் எனக்கிருந்த அரசியல் என்ற பக்கத்தையும் அவர் இனங்கண்டதனால் நான் பாராளுமன்ற உறுப்பினராகவும் செல்ல முடிந்தது. அவர் தமிழ் தேசியத்திலும் தமிழீழ போராட்டத்திலும் உறுதியாக இருந்தார். எமது தேசியத் தலைவர் மீது ஆழமான பற்று வைத்திருந்தார். இதற்கு உதாரணமாக 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து செய்யப்பட்டு ஏ9 பாதை திறக்கப்பட்ட ஒரு சில தினங்களில் நானும் சிவராமும் மட்டக்களப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் வன்னிக்குச் சென்றோம். அது இலகுவான பயணமாக இருக்கவில்லை.

அதிகாலையில் புறப்பட்ட நாங்கள் நண்பகல் வவுனியாவை அடைந்தாலும் ஓமந்தைக்கு அப்பால் போரினால் பாதிக்கப்பட்டிருந்த கரடு முரடான பாதையைக் கடந்து கிளிசொச்சியை அடையும்போது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவ்வாறு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சிரமமான பயணம் அது. முதல் முதலாக வன்னிக்கு இவ்வாறு பயணம் செய்தவர்களும் நாங்களாகத்தான் இருந்தோம். அங்கு பத்து நாட்கள் வரை தங்கியிருந்தாலும் தேசியத் தலைவரைத் சந்தித்தபோது அவர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்ததை என்னால் உணர முடிந்தது.

‘இனி நாம் செத்தாலும் பரவாயில்லை’ என ஒரு கட்டத்தில் என்னிடம் கூறினார். தேசியத்தில் பற்றுக் கொண்ட அவரை சிங்கள தேசம் திட்டமிட்டு அழித்து விட்டது. அவரின் படுகொலைச் செய்தி கேட்டு தாயகமே கலங்கி நின்றது. அவரின் தேசியப் பற்றை கௌரவிக்கும் வகையில் எமது தேசியத் தலைவர் ‘மாமனிதர்’ என்ற கௌரவத்தை வழங்கியதில் இருந்தே அவரின் தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியும்.

அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். “நான் செத்தால் என்னை மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் புதைக்க வேண்டும். இதை நீ செய்ய வேண்டும்” என்பார். அவரின் அந்த இறுதி ஆசையை குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் என்னால் நிறைவேற்ற முடிந்தது. அந்த பூரண திருப்தி எனக்கு உண்டு. அவர் இறந்தாலும் அவரின் சிந்தனைகளும் சேவைகளும் என்றும் மறையாது. அது மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். ஆன்னாரின் ஆத்மா சாத்தியடையப் பிரார்த்திக்கின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நினைவுடன் ஜெயானந்தமூர்த்தி.

நன்றி:பதிவு