-RKy2p-N0pYஊடகத் துறையில் நண்பர் சிவராம்-ஊடகவியலாளர் தேவராஜ் May 3, 2015 News ஊடகத்துறைப் பயணம் என்பது எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காதவர்களுக்கு, அதாவது ஊடகத் தர்மத்தை விலை பேச முன்வராத எந்த ஒரு பத்திரிகையாளனுக்கும், அது ஒரு சவால் நிறைந்த களமாகும். நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் அத்தகையது தான். அவர் தனது ஊடகத்துறைப் பயணத்தில் எந்தச் சக்திகளிடமும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காதவராகத் தனது பணியினை மேற்கொண்டார். இதன் விளைவுதான் அவரது உயிர் பறிக்கப்படக் காரணமாகியது. அவர் எதையும் தனிப்பட்ட ரீதியில் பார்ப்பதில்லை. மனதிலும் அவ்வாறான ஒரு எண்ணத்தைப் பதியவிடுவதும் இல்லை. அதாவது Nothing Personal என்பது தான் அந்தப் பண்பு. அதே வேளையில் தனக்கு சரி எனப் பட்டதை ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொண்ட பின் எழுதுவதற்கும் அவர் தயங்கியதில்லை. இந்தப் பண்பு பல எதிரிகளைத் தானாகவே உருவாக்கிவிடும். இதற்கு நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் விதி விலக்காக அமைந்துவிடவில்லை. இந்தப் பண்பு அவரது உயிருக்கே அச்சுறுத்தலாகி இறுதியில் கொலை செய்யப்படக் காரணமாகியது. உண்மையில் நண்பர் சிவராம் நினைத்திருந்தால் ஊடகத் துறையில் சமரசத்துடனான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். சுக போகத்தில் திளைத்திருக்கலாம். அல்லது தனக்கு வந்த அச்சுறுத்தல்களைக் காட்டி வெளிநாடுகளில் தஞ்சம் கோரி இருக்கலாம். ஆனால் நண்பர் சிவராம் இந்த நிலைகளுக்கெல்லாம் அப்பால் மக்களுடன் நின்று தனது ஊடகப் பயணத்தைத் தொடர்ந்தார். நண்பர் சிவராமைப் பொறுத்து, ஊடகத்துறையினருக்கு, அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை —அது வடக்கு-கிழக்காக இருக்கட்டும், தென்பகுதியாக இருக்கட்டும்— நாட்டின் எந்தப் பகுதியும் ஊடகத்துறை சார்ந்தோருக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்பட்டது. எவ்வேளையிலும் எந்த ஊடகவியலாளனும் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படலாம். அத்தகைய ஒரு நெருப்பாற்றுக்கூடாகவே அவரது ஊடகப் பயணம் தொடர்ந்தது. நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் போராட்டக் களத்தில் இருந்து அதன் பின்புல அறிவு, தகவல், அனுபவங்களுடனான தளத்தில் இருந்து ஆரம்பமாகியது. குறிப்பாகக் கூறுவதாயின் தமிழ்த் தேசியம் பிரசவித்த அக்கினிக் குழந்தைகளில் அவரும் ஒருவர். போராட்டக் களம் புகுந்த நண்பர் சிவராம் பின்னாளில் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கின்றார். இந்தப் பிரவேசமே நண்பர் சிவராமுக்கும் எனக்கும் இடையிலான உறவுக்கு வழி சமைத்தது. அவரது ஆரம்பகால ஆங்கில எழுத்துக்களால் கவரப்பட்டவன் நான். இனச் சாயல் அற்ற தளத்தில் இருந்து அறிவு சார்ந்தவையாக அவரது எழுத்துக்கள் இருந்தன. அதேவேளையில், ஆங்கிலம் கற்ற உலகிற்கு, குறிப்பாக கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் தூதகர மட்டத்தினருக்கும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆங்கிலம் கற்ற சிங்களத் தரப்பினருக்கும் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டையும் அரசியல் அபிலாசைகளையும் ஈழப் போர் குறித்த தகவல்களையும் வழங்குவதாகவும் அமைந்ததன. உண்மையில் நண்பர் சிவராம் அவர்கள் தனது நடு நிலையான தமிழ் இனச் சாயல் அற்ற எழுத்துக்களின் மூலம் தமிழர்கள் அவர்களது உரிமைகள் அரசியல் அபிலாஷைகள் குறித்த பயணத்தின் நீதியை, நியாயத் தன்மையை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தன. இதன் மூலம் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் மனப் போக்கில் மாற்றத்திற்கு வித்திட முடியும் என்று கருதினார். ஆனால் நண்பர் சிவராம் அவர்களின் எழுத்துக்கள் அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின. அதாவது இவரது ஆங்கில எழுத்துக்கள் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வெளிநாட்டுத் தூதரக மட்டத்தினருக்கும் தமிழர் தொடர்பான மற்றும் ஈழப் போராட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் அதேவேளையில் அறிவுபூர்வமான இராணுவ புலனாய்வு குறித்த உள் இரகசியங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குமான களமாகவே பார்க்கப்பட்டன. குறிப்பாக சிவராம் என்ற மனிதனின் அறிவுசார் இராணுவ ஆய்வுகள் குறித்து தென்னிலங்கையில் சிலாகித்துப் பேசப்பட்டது. மறுபுறம் நண்பர் சிவராமை ஒரு தகவல் பொக்கிஷமாக இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் வெளிநாட்டுத் தூதரக மட்டத்தினரும் பார்த்தனர். அவ்வேளையில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தேடப்பட்ட நபராக இருந்தமையால் அவரது ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரமும் அந்தஸ்தும் தென்னிலங்கையில் கிடைத்தது. ஆனால் சிவராமின் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் மக்களிடையே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின. தமிழர்கள் தொடர்பான தகவல்களையும் தமிழர்களின் போராட்டம், இராணுவ இரகசியங்கள் குறித்த தகவல்களையும் சிவராம் தென்னிலங்கைச் சக்திகளுக்கு வழங்குகின்றார் என்ற கருத்தோட்டம் தமிழ் மக்களிடையே பரவத் தொடங்கியது. இந்த ஒரு பின்னணிதான் நான் அவரை தமிழ் மொழியில் எழுதுமாறு வற்புறுத்தக் காரணமாகியது. அதேவேளையில், அக்காலகட்டத்தில் வெளிவந்த மாற்றுப் பத்திரிகையான சரிநிகரில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. எனினும் தேசியப் பத்திரிகை ஒன்றில் அவரது எழுத்துக்கள் வெளிவருவது பரந்து விரிந்த ஒரு வாசகர் வட்டத்திற்குள் செல்வதுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான பதிவினை, செல்வாக்கினை, மேற்கொள்ள முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பிலேயே அவரை நான் வீரகேசரி வார இதழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். எத்தகைய இடர்வரினும் அவரது எழுத்துக்களுக்குத் தொடர்ந்தும் களம் அமைத்துக் கொடுப்பேன் என்பது மாத்திரமல்ல, அவரது எழுத்துக்கள் முழுமையாகப் பிரசுரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கினேன். எனினும் கேசரி வார இதழில் எழுதுவதற்கான தீர்மானத்தை எடுக்க அவருக்கு மூன்று வருடங்கள் எடுத்தன. இறுதியில் ‘‘உங்களைச் சரியாக விளங்கிக் கொண்டேன்” என்ற வாசகத்துடன் வீரகேசரி வார இதழில் அவர் எழுதத் தொடங்கினார். உண்மையில் நண்பர் சிவராம் அவர்களை வீரகேசரி வார வெளியீட்டில் எழுத வைத்தது தனிப்பட்ட ரீதியில் எனக்குக் கிடைத்த வெற்றியாகவும் பெருமையாகவும் இருந்தபோதும், அவரது இழப்பு தந்த வலியினை இன்றுவரை சுமந்து நிற்கின்றேன். என்னைப் பொறுத்து ஒரு பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் பத்திரிகைக்கு, மக்களுக்கு எது தேவை என்பதைத் தேடிப் பிடித்து அவற்றுள் பெறுமதிமிக்கதை பத்திரிகைக்கூடாக மக்களுக்கு வழங்குதல் என்ற பணியினை மிகச் செம்மையாகச் செய்தேன் என்ற ஆத்ம திருப்தி உள்ளது. அந்தப் பணியில் சிவராம் போன்ற மகத்தான ஊடக ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்தமை, அவரது எழுத்துக்களை பிரசுரிக்கக் கிடைத்தமையானது, எனது 28 வருட கால பத்திரிகைத் துறைப் பயணத்தில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன். இலங்கையின் ‘‘சிங்கள தேசிய அரசியல்” போக்கில் தமிழ் மக்கள் மீதான உரிமை மறுப்பு, அடக்கு முறை, அடாவடித்தனம், கட்டவிழ்த்து விடப்படும் காடைத் தனங்கள் போன்றவற்றைக் கண்டும், அனுபவித்தும், இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகும், பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்துடன் சமரசத்திற்கு இடம் உண்டு என்ற எதிர்பார்ப்புடன் புறப்பட்ட பலருக்கு தென்னிலங்கை சளைக்காது தோல்வியையே கொடுத்துள்ளது. அதாவது, தமிழ் மக்களுடன் கை கோர்த்து சமரச அரசியல் பயணத்துக்குத் தயார் இல்லை என்பதையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் அப்படியொரு அத்தியாயமே இல்லையென்பதையும் தென்னிலங்கை மிகத் தெளிவாகவே உணர்த்தி வந்துள்ளது. அதன் முழுமையான வெளிப்பாட்டை நாம் இன்றும் காணக் கூடியதாக இருக்கின்றது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியும் எந்தவித பலனும் பயனும் கிடைக்கவில்லை என்ற சிவராமின் ஆதங்கத்தின் எதிரொலியாகவே கேசரி வார இதழில் ‘‘தமிழர் பிரச்சினை தொடர்பாக சிங்களத்திற்குக் கூறுவது பயனற்றது” என்று கட்டுரை வரைந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இனவாதம் அற்ற ஒரு நிலைக்கு தென்னிலங்கையைக் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை என்ற அவரது நியாயமான கோபம் அவரை தீவிர தமிழ்த் தேசியவாதியாக மாற்றியது. எனவேதான் பின்னைய அவரது எழுத்துக்களில் தமிழ்த் தேசியத்திற்கான குரல் ஓங்கி ஒலித்ததை தரிசிக்கக் கூடியதாக இருந்தது. நண்பர் சிவராம் ஆரம்ப காலத்தில் எதைச் செய்ய நினைத்து தோற்றுப் போனாரோ அதைத்தான் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது பதவி ஏற்பு முதலாக தொடர்ச்சியாக நல்லிணக்க சமிக்ஞையை தென்னிலங்கைக்கு காட்டி இறுதியில் தோற்றுப் போய் சிவராம் போன்று இன்று தமிழினத்தின் நியாயமான, நீதியான, அரசியல் அபிலாஷைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை இவ்விடத்தில் நினைவு கூருதல் பொருத்தம் என்று நினைக்கின்றேன். சிவராம் உயிருடன் இருக்கும்வரை தமிழர் அரசியலை செம்மைப்படுத்துவதற்கும், தமிழ் மக்களின் நியாயமான குரலை ஒலிப்பதற்கும் அவர் பின் நிற்கவில்லை. ஆனால் இன்று அது வெற்றிடமாக உள்ளது. அன்று சிவராமுக்கு மாத்திரமல்ல, தமிழர்களின் அபிலாஷைகள் குறித்துப் பேசிய தமிழ், சிங்கள ஊடகத்துறையினருக்கும் புலி முத்திரை குத்தப்பட்டது. பிரிவினைவாதிகள் என்ற நாமமும் சூட்டப்பட்டது. ஆனால் இன்று வரலாறு வேறுவிதமாகத் திரும்பிவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை குறித்தோ, தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம் குறித்தோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிய வேண்டும் என்றோ, தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் பேச முற்படின் அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகின்றது. குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளது என்று எழுத முற்படும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் இதே முத்திரைதான் குத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதோ, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் குறித்துப் பேசுவதோ, அல்லது தமிழ்த் தலைமைகளுக்கான பொறுப்புக் கூறலை உணர்த்துவதோ தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாக அமையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதாகவும் அமையாது. இதற்கும் அப்பால் இன்னும் ஒரு தீவிரவாதத்திற்கான விதைகளைத் தூவுவதாகவும் அமையாது. நண்பர் சிவராம் உயிருடன் இருந்திருந்தால் அவர் அதனையே செய்திருப்பார். தமிழ்த் தலைமைகள் தமது இயலாத் தன்மையை மறைக்க, தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க முற்படும் தமிழ் ஊடகத்துறையினரை தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாக சித்தரிக்க முற்படுவதானது, தமிழர் அரசியலுக்கு நிரந்தரமான மரணசாசனம் எழுதுவதாகவே அமையும். தமிழ்த் தலைமைகளைப் பொறுத்து தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அப்பழுக்கற்ற நிலையில் கொண்டு செல்வதாகக் கூறுவார்களாயின் தமிழ் ஊடகத் துறையினர் குறித்து கலக்கமடையத் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். நண்பர் சிவராம் அவர்களைப் பொறுத்து தமிழ் ஊடகத் துறைக்கு புதிய இரத்தம் பாய்ச்ச முயற்சித்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். குறிப்பாக, வடக்கு-கிழக்கில் பணியாற்றிய சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு ஊடகத் துறையில் பயிற்சிகளை வழங்கி புதிய பரிமாணத்துக்குக் கொண்டு சென்றார். ஊடகத்துறை சார்ந்த தொழில் நுட்பங்கள் இணையத் தளங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கியதுடன் இலங்கைக்கு வெளியில் ஊடகத் துறையினருடனான தொடர்புகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தார். அதற்குச் சாட்சியாக இன்றைய இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பல ஊடகவியலாளர்களைக் கூறலாம். ஞாயிறு தினக்குரலில் (26.04.2015) திரு. அதிரன் அவர்கள் சிவராம் குறித்து எழுதிய கட்டுரையில் ‘‘தமிழ் ஊடகத்துறையை BBC, CNN தரத்திற்கு உயர்த்த பாடுபட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். திரு. அதிரன் குறிப்பிட்டுள்ளது உண்மைதான். நண்பர் சிவராம் அவர்களது காலத்தில் தமிழ் ஊடகத்துறை, குறிப்பாக சுதந்திர ஊடகவியலாளர் மட்டத்தில், சர்வதேச தரச் சான்றிதழை எட்டியது. ஆனால் இன்று அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. நண்பர் சிவராமின் பெயரில் அது மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு இன்றைய நாளில் தமிழ் ஊடகத் துறையினருக்கு அழைப்பு விடுக்கின்றேன். நண்பர் சிவராம் அவர்களின் பெயரில், அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய, தமிழ் ஊடகத் துறையினராகிய நாம் திடசங்கற்பம் பூணுவோம். இறுதியாக, முஸ்லிம் ஊடகத் துறைக்கு ஒரு முஸ்லிம் மீடியா போரம் இருப்பது போல் தமிழ் ஊடகத் துறைக்கென ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. கடந்த ஞாயிறு (26.04.2015) இந்த உரையைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது எங்களது பக்கத்து வீட்டில் இருந்து பெரும் அழுகுரல் கேட்டது. ஏதோ பெரும் அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டதோ என்ற பதைபதைப்பு என்னுள். வெளியில் சென்று பார்த்தேன். கடந்த 12 வருடங்களுக்கு மேலாக வளர்த்து வந்த ‘‘சீபா” என்ற நாய் இறந்துவிட்டது. அந்தத் துக்கத்தைத் தாங்காது சீபாவை வளர்த்த மாது அழுது புலம்புவதைக் கண்டேன். எனது மனதுக்குள் ஒரு நெருடல். சீபாவுக்காக அழ அந்த மாது உள்ளாள். ஆனால், தமிழ் ஊடகத் துறையினருக்காக அழ, கண்ணீர் சிந்த, யார் இருக்கின்றார் என்ற எண்ணம் எனது இதயத்தைக் கீறி ரணமாக்கி விட்டதை உணர்ந்தேன். அந்த கனத்த இதயத்துடன் உங்களிடமிருந்து விடை பெறும் முன் நண்பர் சிவராம் மற்றும் நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜ் சுப்பிரமணியம் உட்பட ஊடகப் பயணத்தில் ஆகுதியாகிய அனைத்து ஊடகத்துறை சார்ந்தோருக்கும் எனது அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் சிரம் தாழ்த்தி செலுத்திக் கொள்கின்றேன். நன்றி;தமிழ்நெற்