‘இலங்கை தன்னைத்தானே விசாரிக்கும்….’ ‘தன்னைத் தானே கூண்டில் நிறுத்தும்…’ ‘தன்னைத் தானே தண்டிக்கும்…..’ இப்படியெல்லாம் நம்புகிறவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருக்க முடியும்.
நல்ல மனநிலையில் இருக்கிற எவரும், இதைப்போன்ற அபத்தமான நம்பிக்கைகளுடன் நடமாட வாய்ப்பேயில்லை. நமது போதாத காலம் – இப்படியெல்லாம் நம்பவைத்து, கறிக்கோழி மாதிரி மீண்டும் நம்மைக் கழுத்தறுக்கப் பார்க்கிறது இந்தியா!

“ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதையெல்லாம் ‘இனப்படுகொலை’ என்று சொல்லி, தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஆபத்தை அழைத்து வந்துவிடாதீர்கள்” என்பது, எப்படியெல்லாம் கழுத்தறுக்கலாம் என்று இந்தியாவுக்குச் சொல்லிக்கொடுக்கும் இன்னொரு கும்பலின் வாதம். வாய்க்கு வக்கணையாகப் பேசி, கொலைகாரர்களைக் காப்பாற்றும் கடமையைச் சாதுர்யமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். மைத்திரி அரசு வேறு மகிந்த அரசு வேறு – என்கிற அழுகிப்போன புளுகை வைத்தே வண்டி ஓட்டுகிறார்கள் அந்த சமந்தகர்கள்.

இவர்களுடைய வேஷத்தைக் கலைத்துக் காட்டுவதற்கென்றே ஒரு மனிதர் இருக்கிறார் இலங்கையில். ரணில் விக்கிரமசிங்க என்பது அவரது பெயர். ‘எங்கள் கையில் பொம்மைத் துப்பாக்கியையா வைத்திருக்கிறோம்’ என்று தமிழக மீனவர்களைப் பார்த்து ‘ஜோக்’ அடித்தாரே (நன்றி: சந்திரிகா), அதே மகானுபாவர். தான்தான் உலகின் ஆகப்பெரிய ஓட்டை வாய் – என்கிற இறுமாப்பில் மிதக்கும் சு.சு.வுக்கெல்லாம் இன்றைய தேதியில் ரணில்தான் சவால்!

‘நடந்தது இனப்படுகொலைதான்’ என்று முதல்வர் விக்னேஸ்வரன் தீர்மானம் நிறைவேற்றிவிட்டாராம்! ‘அவர் ஒரு பொய்யர்… அவர் ,முதல்வராகவே இருந்தாலும்கூட, யாழ்ப்பாணத்துக்குப் போகும்போது அவரைச் சந்திக்க மாட்டேன்’ என்றெல்லாம் உதார் விட்டதன் மூலம், பெரும்பான்மை சிங்களர்களுக்கு சிக்னல் கொடுத்துப் பார்த்தார் ரணில். அது வொர்க் அவுட் ஆகவே இல்லை.

இந்தவாரம் ரணில் கொடுத்திருப்பது அடுத்த சிக்னல்.

“இலங்கை ராணுவத்தினருக்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு. ராணுவத்தினர் மீது சர்வதேச விசாரணை நடத்த ராஜபக்சே அரசு சம்மதித்திருந்தது. அது ராணுவத்தினருக்கு ராஜபக்சே செய்த துரோகம்”…… இதுதான், ரணில் பேசியிருப்பதன் சாரம்.

ஒரு நாட்டின் ராணுவம், எம் உறவுகளை விரட்டி விரட்டி வேட்டையாடியிருக்கிறது….

குறுகிய நிலப்பரப்பில் அவர்களைக் குவித்து, பீரங்கிகளால் அவர்கள் உடலைப் பிய்த்து எறிந்திருக்கிறது…..

அவர்களுக்கு உணவோ மருந்தோ சென்று சேர்ந்துவிடாதபடி தடுத்திருக்கிறது….

அவர்கள் உயிருக்குப் போராடிய மருத்துவ மனைகள் மீது கண்மூடித்தனமாகக் குண்டு வீசியிருக்கிறது….

பால்மாவுக்காக பச்சைக் குழந்தைகளுடன் கியூவில் நின்ற தாய்மார்களைக் குண்டுவீசிக் கொன்றிருக்கிறது…

வயது வித்தியாசமின்றி எம் சகோதரிகளையும் குழந்தைகளையும் ஈவிரக்கமில்லாமல் சீரழித்திருக்கிறது…..

அந்த ராணுவத்தினர் மீது துரும்பு கூட பட விடமாட்டேன் – என்றது மகிந்த மிருகம்…

ஒரே ஒரு படை வீரனைக் கூட காட்டிக் கொடுக்க மாட்டேன் – என்றது மைத்திரி மிருகம்….

குற்றமிழைத்த படையினருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வேன் – என்கிறது ரணில் மிருகம்….

படையினர் மீது துரும்பு விழுந்தாலும் கூட, தன் தலையில் இடியே விழும் என்பது தெரியும் முதல் மிருகத்துக்கு!

ஒரே ஒரு படை வீரனைக் காட்டிக் கொடுத்தால்கூட, அத்தனை குற்றவாளிகளையும் அவன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்பது தெரியும் இரண்டாவது மூன்றாவது மிருகங்களுக்கு!

ஒருபுறம் இந்த மிருகங்களின் அணிவகுப்பு என்றால், இன்னொருபுறம் – சரத் பொன்சேகா, பீரிஸ், மங்கள சமரவீர – என்கிற துணை மிருகங்களின் அணிவகுப்பு. மகிந்தவின் பரம வைரியான இந்த மங்கள சமரவீர தான் இப்போது வெளியுறவு அமைச்சர். அந்த நரியின் ஊளைதான் அதிக சத்தத்துடன் ஒலிக்கிறது இப்போது.

இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறதாம்…

அந்த விசாரணைகளின் மூலம் ராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்படுமாம்….

இரு தினங்களுக்குமுன் மங்கள வெளியிட்டுள்ள அறிவிப்பு இது.

இலங்கையின் விசாரணை என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதையும், என்ன நோக்கத்துடன் அந்த விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது மங்களவின் அறிவிப்பு.

பதவியில் அமர்ந்ததிலிருந்து, இந்தியாவில் ஆரம்பித்து, நாடு நாடாக ஓடிக்கொண்டே இருக்கிறார் மங்கள. விசாரணையைத் தொடங்கப் போகிறோம் – என்கிறார். நம்பகமான விசாரணையாக இருக்கும் – என்கிறார். இந்தியாவும் சர்வதேசமும் அதை நம்பித்தான், ‘மார்ச்சில் அறிக்கை இல்லை’ என்று அறிவிக்க வைத்தன ஐ.நா.வை! அப்படி அறிவிக்கப்பட்ட பிறகு, தனது முகமூடியைக் கழற்றிவிட்டு சுயரூபம் காட்டுகிறது இலங்கை.

உண்மையிலேயே விசாரணை நடக்கப் போகிறதா – அப்படி நடந்தால் எப்போது நடக்கப் போகிறது – என்பதையெல்லாம் தெரிவிக்காமல், தீர்ப்பை முதலில் தெரிவித்திருக்கிறது மைத்திரியின் இலங்கை. ‘குற்றமிழைத்த ராணுவத்தினர் அத்தனை பேரையும் குற்றமற்றவர்களாக அறிவிக்கப் போகிறோம் பார்’ என்று இப்போதே அறிவிக்கிறது அது. எப்படி அப்படி அறிவிக்க முடியும் – என்று சர்வதேசத்திலிருந்து இதுவரை ஒரே ஒரு குரல் கூட எழவில்லை.

புனிதநதி மாதிரி நகர்ந்துகொண்டிருந்த 13 வயது குழந்தை புனிதவதியிலிருந்து, எம் இனத்தின் குரலான இசைப்பிரியா வரை, ஆயிரமாயிரம் மலர்கள் நசுக்கி நாசமாக்கப்பட்டிருக்கின்றன…. அந்த மலர்களுக்கு நியாயம் கிடைக்காதாமா? யுத்தத்தின் பெயரால், அந்த மலர்களை இதழ் இதழாகப் பிய்த்துச் சிதைத்துச் சீரழித்த மிருகங்களை புத்த விகாரைகளுக்குள் அழைத்துக் கொண்டுபோய் டெட்டால் போட்டு குளிப்பாட்டி ‘பரிசுத்தமானவர்கள்’ என்று அறிவித்துவிடுவார்களாமா?

நரியைப் பரியென்று எப்படி அறிவிக்கப் போகிறது இலங்கை? பாலியல் கொடுமையில் ஈடுபட்ட படைவீரர்களில் எவனுக்கும் அதற்குத் தேவையான உறுப்பே இல்லை என்று ஆதாரத்துடன் அறிவிக்கிற திட்டம் எதையாவது கைவசம் வைத்திருக்கிறதா மைத்திரி – ரணிலின் ‘நல்லாட்சி’! கல்லம் மேக்ரேவின் ஆவணப்படத்தில் ஒரு மிருகத்தின் முகம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே….. அந்த மிருகத்துக்கு இடுப்புக்குக் கீழே எதுவும் இல்லை என்று தெரிவிக்கப் போகிறார்களா?

சிங்களப் பொறுக்கிகள் மட்டுமில்லை, அந்தப் பொறுக்கிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் சேர்த்தே இத்தனைக் கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

எம் இனம் கொன்று அழிக்கப்பட்டபோது……

எம் இனத்தின் பிணக்குவியல் மூடி மறைக்கப்பட்டபோது…..

சொரணையின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் இவர்கள். எமக்கான நீதி மறுக்கப்படும்போது மட்டும், இவர்கள் கொதித்து எழுந்துவிடப் போகிறார்களா என்ன?

எங்கோ இருக்கிற இந்த உலக நாடுகளை விடுங்கள்….

கொல்லப்பட்டவர்களின் தொப்புள்கொடி உறவுகள் எட்டரை கோடி பேர் இருக்கிறோம் தமிழகத்தில்! கொல்லப்பட்ட எமது ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி தேவை, சர்வதேச விசாரணை தேவை – என்று கேட்கிறது தமிழகம். எம்மைக் கொன்ற இலங்கை எப்படி இந்தியாவின் நட்பு நாடாக இருக்கமுடியும் – என்று ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சார்பில்தான் கேட்கிறார் ஜெயலலிதா. சோனியாவைப் போலவே செவிகளை மூடிக்கொண்டு, விஷமப் பார்வையை எம் மீது வீசுகிறது மோடி அரசும்!

எங்களையும் சேர்த்துத்தான், இந்தியா என்பது ஒரு துணைக்கண்டமாகத் திகழ்கிறது. தன்னுடைய ஒட்டுமொத்த மக்கள் தொகையில், சற்றேறக்குறைய பத்து சதவீத மக்களைக் கொண்ட தமிழகத்தின் கோரிக்கையை அலட்சியப்படுத்துகிற திமிர் இந்தியாவுக்கு இருக்க முடியுமென்றால், இந்தியாவின் நிலையை அலட்சியப்படுத்தும் திமிர் தமிழகத்துக்கு இருக்க முடியாதா என்ன?

அண்மையில், இந்தோனேசியாவில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட மயூரன் இலங்கையைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற அவரது உயிரைக் காப்பாற்ற ஆஸ்திரேலிய அரசு இறுதிவரை தீவிரமாக முயன்றது. அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கும்படி மன்றாடியது. ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை இந்தோனேசியா ஏற்கவில்லை. மயூரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.

மயூரன் வழக்கை இந்தோனேசிய அரசும் நீதிமன்றமும் எப்படிக் கையாண்டன என்பது குறித்த விவாதத்தை விரிவாக்குவது சட்ட நிபுணர்களின் கடமை. அதே சமயம், சட்ட நிபுணர்களாக இல்லாதவர்கள்கூட, மயூரன் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்துப் பேசியாக வேண்டும்.

மயூரன் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த இந்தோனேசிய நீதிமன்றம், அங்கிருக்கும் கடுமையான சட்டதிட்டங்களின்கீழ் மரணதண்டனையை அறிவித்தது. அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரியது ஆஸ்திரேலியா. அந்த வேண்டுகோளை நிராகரித்த இந்தோனேசிய அரசு, மரணதண்டனையை நிறைவேற்றியது. தன் நாட்டுச் சட்டப்படியே மரணதண்டனை – என்பது இந்தோனேசியாவின் வாதம். மரணதண்டனை மனிதநேயத்துக்கு எதிரானது – என்பது ஆஸ்திரேலியாவின் வாதம்.

மரணதண்டனை வேண்டாம் – என்று கேட்டுக்கொண்ட ஆஸ்திரேலியா, அது நிறைவேற்றப்பட்டதும் என்ன செய்தது என்பதுதான் வரலாற்றுச் செய்தியாக மாறியிருக்கிறது இன்று! மயூரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவுடன், நட்பு கிட்பு என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கவில்லை ஆஸ்திரேலியா. அடுத்த நொடியே, இந்தோனேசியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்தது. சர்வதேச அளவில் இந்தோனேசியா சந்தித்திருக்கும் ஆகப்பெரிய அவமானம் இது.

மயூரன் என்ன ஆஸ்திரேலிய வெள்ளையரா – என்றோ,

போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளி தானே – என்றோ,

இந்தோனேசியாவின் சட்டதிட்டங்கள் அப்படித்தானே – என்றோ,

தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளவும், பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் ஆஸ்திரேலியாவால் முடியாதா என்ன? ஆனால், அப்படியெல்லாம் நழுவ முயற்சிக்காமல், இந்தோனேசியாவின் தலையில் தட்டியிருக்கிறது ஆஸ்திரேலியா.

மயூரன் என்கிற ஒற்றை உயிருக்காக ஒரு நாட்டுடனான நட்பையும் உறவையும் அறவே முறித்துக்கொண்டது ஆஸ்திரேலியா. அதன்மூலம், தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றியிருப்பதுடன், தனக்கிருக்கும் மனிதநேயத்தையும் முழுமையாக நிரூபித்திருக்கிறது. ஒன்றரை லட்சம் பேரை விரட்டி விரட்டிக் கொன்ற பிறகும், இலங்கையுடனான நட்பை முறித்துக்கொள்ள மறுப்பதன் மூலம் எங்கள் இந்தியா எதை நிரூபித்திருக்கிறது?

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், எம் இனத்துக்கு இந்தியா செய்துகொண்டிருப்பது பச்சைத்துரோகம் மட்டுமல்ல காவித் துரோகம் என்பதை உணரமுடிகிறது. 26வது மைலில், பறிக்கப்பட்டது ஒற்றை உயிரல்ல….. ஒன்றரை லட்சம் உயிர்கள். அவர்கள் வேறு எவரோ கூட அல்ல, தமிழகத்திலிருக்கும் எங்கள் எட்டரை கோடி பேரின் தொப்புள்கொடி உறவுகள். அந்த உறவுகளின் உயிரைப் பறித்த இலங்கை உனக்கு நட்பு நாடா என்பது, சகோதரி ஜெயலலிதாவின் கேள்வி மட்டுமல்ல… எங்கள் ஒவ்வொருவரின் கேள்வி!

நட்பு கிட்பு என்றெல்லாம் கதை விடாமல், ஒற்றை உயிருக்காக நட்பை முறிக்கிறது ஆஸ்திரேலியா. கூப்பிடு தொலைவில் நடந்த இனப்படுகொலையில் ஒன்றரை லட்சம் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு நியாயம் தேவை – என்கிற எங்கள் குரலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், மன்மோகன் ஆண்டாலும் மோடி ஆண்டாலும் மலைவிழுங்கி மகாதேவன் மாதிரி சோம்பல் முறிக்கிறது இந்தியா! இதற்கு என்ன அர்த்தம்? குற்றவாளி இலங்கைதான் இந்தியாவின் நண்பன் என்றால், தமிழ்நாட்டிலிருக்கும் நாங்கள் இந்தியாவுக்கு யார்?

இனப்படுகொலை செய்த இலங்கையின் ஒருமைப்பாடு முக்கியமா, இந்தியாவின் ஒருமைப்பாடு முக்கியமா என்று கேட்பவர்கள்தான் தேசபக்தர்கள் என்பதை இந்தியா முதலில் புரிந்துகொள்ள வேண்டும்……

இலங்கையைக் காப்பாற்றுவதுதான் முக்கியம், இந்தியாவைப் பற்றி பிறகு கவலைப்படலாம் என்கிற வாதம் பிடிவாதம் மட்டுமில்லை, விஷம வாதம்….

நாட்டை ஆளும் பாரதீயஜனதா இதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறதா இல்லையா?

நாங்களே விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்போம் – என்று சர்வதேச அரங்கில் வேஷம்போடும் இலங்கை, ‘குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றமற்றவர்கள் என்று ஞானஸ்நானம் செய்வதற்காகத்தான் விசாரணை’ என்று சிங்கள மக்களிடையே போய் வேஷம் கலைக்கிறது. இந்தியாவுக்கு இது புரியவில்லை – என்று நம்புகிற அளவுக்கு நாம் ஒன்றும் மக்கு பிளாஸ்திரிகள் இல்லை.

கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு….. என்கிறது வள்ளுவம்.

இந்தக் குறளின் பொருள் என்ன என்பதைத் தமிழறிந்த அறிஞரான தனது தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் தமிழிசை. அவர் எதிர்க்கட்சி ஆயிற்றே – என்று நினைத்தால், பாரதீய ஜனதாவின் பரிமேலழகரான தருண் விஜயிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டு தனது தலைமைக்குத் தெரிவிக்கட்டும்! தலைமைக்கு அதைத் தெரிவித்தபிறகு, நயவஞ்சக இலங்கையுடன் நட்பு பாராட்டுவது இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்கிற தகவலை நமக்கோ, மீண்டும் முதல்வராகப் போகும் ஜெயலலிதாவுக்கோ தெரிவிக்கட்டும்!

-புகழேந்தி தங்கராஜ்