தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோர்வே ஈழத்தமிழர் அவையால் மாலை 6 மணியில் இருந்து 8 மணிரை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டமானது ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பாராளுமன்றத்தின் முன்திடலில், சிறீலங்காவாலும் அதன் துணைநாடுகளாலும் இன அழிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு பல்வேறு இனமக்களின் தலைவர்களின் உரையும் நோர்வே அரசியல் பிரமுகர்களின் உரையும் மற்றும் கலைப் படைப்புக்களின் காணிக்கையும் இடம்பெற்றது.

IMG_2882 (1)IMG_2886

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு நினைவுரைகளை வழங்கிய பிரமுகர்கள் கருத்துதெரிவிக்கையில்,

தமிழ்மக்கள் மீது நாடாத்தப்பட்டுள்ள இன அழிப்பிற்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும், தமிழ்மக்கள் தங்களை தாங்களே ஆள உரித்துடையவர்கள் என்றும், தமிழ்மக்களின் அவலநிலையை அகற்றுவதற்கு நோர்வே முன்னின்று உதவவேண்டும் என்ற முக்கியமான கருத்துகள் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை

நோர்வேயில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் மிகவும் முக்கியமானது காரணம் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை சிதைப்பதற்கு அமேரிக்காவின் அன்புமுகத்துடன் சமாதான வேடம் தரித்தவர்கள் என்பதை தமிழர்களாகிய நாம் எளிதில் மறந்திவிடப்போவதில்லை. ஆனாலும் விட்ட தவறை திருத்தவேண்டும் என்பதே எமது ஆணையாக இருக்கின்றது.

IMG_2911IMG_2927

பர்மா, ஈரான், சீனா ஆகியவற்றின் கூட்டோடு தமிழின அழிவிற்கு நோர்வேயும் தன்னை இணைத்துள்ளது. சிறீலங்காவின் இனவெறிப் போர் வெற்றியின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தமிழர் தாயகம் எங்கும் சிங்களச் சின்னங்களை விதைக்கும் முயற்சிக்குப் பொருளாதாரரீதியாக நோர்வே துணை நின்றுள்ளது

தடுப்பு முகாம்களுக்கான நோர்வேயின் நிதி உதவியே அந்தத் தடுப்பு முகாம்களைத் தக்கவைத்து தமிழினத்தின் சிறைவைப்பை நீடிப்பதற்கு உதவி இருக்கின்றது. மே 17, 2009 அன்று நோர்வேயில் இறைச்சிவகைகளையும் குளிர்களிகளையும் உண்டு நோர்வே மக்களும், நோர்வே அரசாங்கமும் மகிழ்ந்திருந்த வேளையில் (மே 17 நோர்வேயின் தேசிய தினம்), ஆசியாவின் நீண்ட போராட்டம் ஒன்று சடுதியான பெரும் இரத்தக்களரியுடன் கொடூரமான முடிவுக்கு வந்தது.

சமீபத்தில் கூட நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சூல்கைம் விடுதலைப்புலிகள் மீது குற்றங்களை சுமத்திவருகின்ற சூழ்நிலையை அவதானிக்கமுடிகிறது. நோர்வேயின் நயவஞ்சகம் தமிழர்களை இன்னும் வேதனைப்படுத்தியே வருகின்றது.

இந்த சூழ்நிலையில் நோர்வேயில் முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு போராட்டமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது என்பது பலரின் கருத்தாக அமைந்துள்ளது.