அண்மையில் ஒரு ஊடகமொன்றில் நடப்பு அரசியல் சம்பந்தமான கருத்துகூறல் ஒன்றை கேட்டுக்கொண்டிருக்க நேரிட்டது.அதில் கதைத்து கொண்டிருந்தவர் மிக லாகவமாக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு 13ம்திருத்தம்,மாவட்டசபை என்று அடிபணிவுகருத்துகளை கூறிக்கொண்டு இருந்தார்.
இதில் மிக மிலேச்சத்தனமும்,கேவலமும் எதுவென்றால் போகிற போக்கில் தனது கருத்து ஆதரவாக,தனது கருத்துக்கு கேடயமாக

‘ நான் தலைவரை சந்தித்தபோது…”

‘நான் தலைவருடனும் பாலா அண்ணையுடனும் கதைத்து கொண்டிருந்தபோது….” என்ற சொற்பதங்களை இடைக்கிடை கூறிக்கொண்டே இருந்தார்.இத்தனைக்கும் தலைவரும் தமிழீழமக்களும் கடந்தகாலங்களில் நிராகரித்த தீர்வுகளை இப்போது ஆதரித்து கதைப்பதற்குகூட ” தலைவரை சந்தித்தபோது” என்ற அடைமொழியுடன் நிறுவ முற்படுவது எத்தனை அற்பமானது .இப்படியாக 2009க்கு பின்பான அரசியலை வியாக்கியானம் செய்பவர்கள் இந்த யுக்தியை அடிக்கடி  பயன்படுத்துவதை கேட்கவும் பார்க்கவும் நேரிடுகிறது தலைவருடன் பக்கத்தில் இருந்தோம் என்பதோ, படம் எடுத்தோம் என்பதோ சந்தித்தோம் என்பதோ, தலைவரின் இலட்சியத்தை இன்னும் வலுப்பெற வைக்க ஒரு நிரூபணமாக முன்வைக்கலாமே தவிர தலைவரே நிராகரித்த தீர்வுகளை இப்போது திணிப்பதற்கு ஒரு ஆவணமாக வைக்கமுடியாது.அது எவ்வளவு வரலாற்று துரோகம்.

தமிழீழஇலட்சியத்தை அடைந்துவிட்ட பின்னர் வேண்டுமானால் தலைவருடன் இருந்தோம் என்பதோ தலைவருடன் நின்றிருந்தோம் என்பதோ,புலத்தில் இருந்து தலைவரை சென்று சந்தித்துவந்தோம் என்பதோ ஒருவேளை  ஒருவிதமான மரியாதையையும் கௌரவத்தையும் தரக்கூடும்.
ஆனால் தமிழீழவிடுதலை இலட்சியத்துக்கான பெரும் பாதை  இன்னும் நீண்டுள்ள இந்த பொழுதில் ‘ நீ தலைவருடன் இருந்திருந்தாலென்ன, தலைவரை எத்தனை தடைவை சந்தித்திருந்தாலென்ன… அவருடைய இலட்சியத்தை வென்றெடுக்க இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய், அல்லது இப்போது என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்.. அல்லது இப்போது உன் நிலைப்பாடு என்ன’ என்பதுதான் மிக முக்கியம்.இன்னும் பலநூறு நெருப்பாறுகளையும் மேடுகளையும் பள்ளங்களையும் கடக்க இருக்கும் ஒரு விடுதலைப்போராட்டம் அதனைத்தான் பார்க்கும்.கேட்கும்..

மற்றது,தலைவருடன் இருந்த,சந்தித்த எல்லோருமே தலைவரின் கருத்துகளில் எத்தனைதூரம் உறுதியாக இன்னும் தொடர்ந்து  இருக்கிறார்கள் என்பதும், தலைவரின் உறுதியில் நேர்மையில் எவ்வளவுதூரம் தாமும் தொடர்கிறார்கள் என்பதுமே தலைவருடன் இருந்ததற்கான அத்தாட்சியே தவிர வேறெதுவும் இல்லை..
இதற்கு வெகுதூரம் போகத்தேவையில்லை..தேசியத்தலைவர் தான் ஆரம்பித்த அமைப்பான தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்புக்கு மத்தியகுழுதலைவராக உமாமகேஸ்வரனை நியமிக்கின்றார்.முதன்முதலில் தமிழீழவிடுதலைப்புலிகளால் பத்திரிகைககளுக்கு அனுப்பபட்ட கடிதம்கூட மத்தியகுழுவின் தலைவர் என்றமுறையில் உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனேயே வெளியும் வந்தது நினைவிருக்கலாம்.

அப்படி நியமித்து சொற்ப காலத்திலேயே உமாமகேஸ்வரன் தனது சுயதழும்பல்களை வெளிப்படுத்தி அம்பலமாகி அமைப்புக்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்தி வெளியேற்றப்படுகின்றார்.
தலைவருடன் கிட்டுவுக்கு பிறகு மிக நெருக்கமாக மிக நம்பிக்கைக்கு உரித்தாக இருந்த சிலரில் கருணாவும் ஒருவன்.தலைவருடன் பல பொழுதுகளில் ஒன்றாக நின்றவன்.ஆனால் என்ன நடந்தது…தலைவர் நேசித்த இலட்சியத்துக்கே முழுஎதிரியாக,முழு இனத்துக்குமே துரோகியாக கருணா மாறிப்போகின்றார்.
இப்போது சிங்கதேசத்தின் செல்லப்பிள்ளையாக ஆளும்-எதிர் கட்சிகள் இரண்டினதும் அரவணைப்பில் உலாவந்து அடிபணிவு கருத்துகளின் ஊற்றாக இருக்கும் கேபி எத்தனை நாட்கள் தலைவரின் பக்கத்திலேயே தலைவருடனயே இருந்திருப்பான். கதைத்திருப்பான்..

ஆனால் இன்று மாவீரர்களதும்,தலைவரதும் இலட்சியத்தை ஏலம்போட்டு கூறி மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பவர்களில் கேபியும் ஒருவர்.தலைவருடன் பல பொழுதுகளில் பக்கத்தில் இருந்து அவரது இலட்சியஉறுதியையும் போராட்டத்தின் மீதான நேர்மைமிகு பங்களிப்பையும் கதைத்தும் பார்த்தும் அறிந்த இவர்களில் எவரதும் இன்றைய நிலையையும் தலைவருடன் இருந்தவர்கள் என்ற ஒரு காரணத்துக்காக ஏற்றுக்கொள்ளப்படவோ ஆமோதிக்கப்படவோ  ஒருபோதும் மாட்டா.

தேசியத்தலைவர் என்பது இரண்டுவிதமான பரிணாமங்களை கொண்டது.ஒன்று நேரில் உலாவி, போர் புரிந்து இலட்சிய யாகம் வளர்த்து,விடுதலை வென்றெடுக்க முழுக்க முழுக்க அர்ப்பணமும் தியாகமும் நிறைந்து, இரத்தத்தாலும் சதைகளாலும் நரம்புகளாலும் ஆன ஐந்துஅடி ஏழுஅங்குல உயரமான ஒரு உருவம்.
இரண்டாவது,தனது இலட்சிய உறுதியாலும்,எந்த பொழுதிலும் இலட்சியத்தை தனது பதவிக்காகவோ,சுயநலனுக்காகவோ விற்றுவிடாத தன்’மையாலும்,தான் வரித்துக் கொண்ட இலட்சியத்துக்காக தனது வாழ்வு,உயிர் தனது குடும்பம் முழுமையையும் அர்ப்பணித்து நின்றிருந்த நேர்மையாலும்,,அடிமுடி அறிய வெண்ணாத வீரத்தாலும்,தனது தாயக மக்களை வளமும் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களாக்க அவர் முன்வைத்த அரசியலாலும். உருவான கருத்துகளால் உருவாகி மனமெங்கும் படிந்துநிற்கும் ஒரு படிமம்,ஒரு குறியீடு.ஒரு பெரும் கருத்தியல்.விடுதலையை நோக்கி உந்தித்தள்ளும் பெரும் ஆதர்சம்.

இந்த தமிழீழவிடுதலைப்போராட்டக்களத்தில் தம் இறுதிமூச்சை நிறுத்தி கொள்ளும்வரை வீரமுடனும் அர்ப்பணிப்புடனும் களமாடிய பல்லாயிரம் மாவீரர்களில் மிகமிக அதிகமானோர் தேசியதலைவரின் கருத்துகளால்,அவர் வெளிக்காட்டிய வழிகாட்டலால்,வீரத்தால் ஈர்ப்படைந்தே அமைப்புக்கு வந்து சேர்ந்தவர்கள் ஆகும்.தலைவரை நேரடியாக பார்த்து பழகி வந்தவர்கள் மிகமிக சொற்பமே.இப்படித்தான்,1979ன் நடுப்பகுதியல் மாங்குளத்தில் அமைந்திருந்த அமைப்பின் முகாமுக்கு புதிய போராளி ஒருவர் அனுப்பபட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு தேசியதலைவரை தெரியாது.ஒருபோதும் பார்த்ததும் இல்லை.அந்த நேரத்தில் தலைவரின் புகைப்படம் ஒன்றுகூட வெளியாகி இருக்கவில்லை.பாடசாலை பரீட்சை அடையாளஅட்டைக்கு என எடுக்கப்பட்ட ஒரு சிறுவனின் முகமே பிரபாகரன் என்ற பெயரில் சிங்களபேரினவாத தேடும்பட்டியலில் வெளியாகி இருந்தது.மாங்குளம் முகாமுக்கு புதிதாக வந்திருந்த போராளி அந்த முகாமுக்கு யார் வந்தாலும் உடனே செல்லக்கிளி அம்மானையோ,கிட்டுவையோ அழைத்து ‘ இவரா தம்பி,இவரா தலைவர்’ என்று கேட்டு கொண்டே இருப்பார்.

தலைவரை தெரியாமலேயே அவரது உண்’மையான வழிகாட்டலை ஏற்று வந்திருந்த அந்த ஆரம்பபொழுதில் வந்திருந்த போராளியை போலவே இற்றைவரை எத்தனை எத்தனை போராளிகள் தலைவரை சந்திக்காமலேயே ஒரு பொழுது அவருடன் இருந்து கதைக்காமலேயே தம் இலட்சியத்துக்காக வீரமரணமாகியுள்ளார்கள்.இவர்களை தியாகவேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கவும்,எத்தனை இடர்வரினும்,எந்த நிலையிலும் தளராது விடுதலைக்களத்தில் நின்றிருக்க செய்தது எது..?அது பிரபாகரன் என்ற கருத்து.பிரபாகரம் என்ற தத்துவம்,பிரபாகரன் என்ற மனிதன் தன் வாழ்வின்மூலம்,தன் செயலின் வழியாக,தன்னையே முன்னிறுத்தி தானே செய்து காட்டிய மகத்தான வழிகாட்டல்மூலம் ஏற்பட்ட ஒரு பெரு நம்பிக்கையே பல்லாயிரம் பல்லாயிரம் போராளிகளை அவர் காட்டும் திசையில் வீரமுடன் செல்லவைத்தது.இனியும் வைக்கும்.

சரி அதைத்தான் விடுவோம்.இன்றைக்கு ஆறுவருடத்துக்கு பின்னரும் அவர் களமாடிய நந்திக்கடல் மணல்மேட்டில் இருந்து அடுத்த தேசத்தில் தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் நல்லம்மாபட்டியில் (உசிலம்பட்டிக்கு மேற்கே மூன்று கிமீ தூரம்) ஒரு அரசியலே அறியாத பெண்ணிடம் ‘ பிரபாகரன் தெரியுமா’ என்று கேட்டவுடனேயே அந்த பெண்ணின் பதில் ‘ “ஆமா தலைவர்’ என்று சொல்வதும்,”
அப்படின்னா,ஏன் அவரை தீவிரவாதி என்கிறார்கள்” என்று கேட்டதும் அந்த கிராமக்கள்

‘அவருக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலகமே எதிராக இருக்கிறது’ என்கிறார்கள்.அதற்கு அந்த காணொளி நிருபர்

‘ ஏன் அப்படி ‘ என்று கேட்டபோது
‘ ஏன்னா அவர் கொள்கையில் உறுதியா நிற்கிறார்.அதனாலேயே எல்லோரும் எதிர்க்கிறார்கள்’ என்று பதிலளிக்கிறார்கள்.

தொடர்ந்து நிருபரின் கேள்வி ‘ அவர் உயிருடன் இருக்கிறாரா’ என்பது.

அதற்கு அந்த மக்களின் பதில்’ அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையான்னு நமக்கு தெரியாது ஆனா அவர் திரும்பவர வேணும் இந்த இனத்துக்கு..’ என்று சொல்லும் போது ஒரு மனிதனின் கருத்தும் உண்மையாக அவன் வாழும் இலட்சியவாழ்வும் தூரங்கள் கடந்தும் மனிதர்களை பற்றிக்கொள்ளும் என்று தெரிகிறது..
தேசியதலைவரை தம் வாழ்வில் நேரில் ஒரு பொழுதில்கூட காணாத எத்தனையோ செயற்பாட்டாளர்கள்
இத்தனை பின்னடைவுக்கு பின்னரும்,இத்தனை தோல்விக்கு பின்னரும்,அனைத்து கட்டமைப்பும் சிதறி உருத்தெரியாமல் ஆகிவிட்டபின்னரும் இன்னும் தொடர்ச்சியாக அதே வேகத்துடன் செயற்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை வழிநடாத்துவது அவரது கருத்துக்களே,தத்துவமே தவிர அவரின் முகம் பார்த்த பெரும்பேறல்ல.

அண்ணையை சந்தித்த எல்லோருமே அவரது இலட்சியஉறுதியை,அதற்கான நேர்மைமிகு அவரது வாழ்வை,அரசியலை புரிந்திருப்பார்களா என்ன..?

இந்த இடத்தில் இன்னுமொரு போராளியை குறிப்பிட்டு இதனை முடிக்கலாம் என நினைக்கிறேன்.(ஏனென்றால் அவனது நினைவுநாளும் 18மே தான்-18.05.1984)

.1983இனப்படுகொலை நாட்களின்போது ஏற்பட்ட பேரெழுச்சி பல இளைஞர்களை எமது போராட்டத்தில் இணைய செய்தது.அப்படியே லண்டனில் இருந்தும் சில இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பில் இணைய.வந்தவர்களில் குமரனை(குமரப்பா) தவிர வேறு யாரும் தேசியதலைவரை நேரில் கண்டதில்லை.அவர்களின் பகீனும் ஒருவன்.ஆனால் இலட்சியத்திலும் தலைவரின் வழிகாட்டலை முழுமையாக ஏற்றதும் அப்போதே அவன் கதையில் தெரிந்தது.
பின்னர் ஒருசில வாரத்தில் தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். புதிதாக இணையவந்தவர்களை சந்திக்கும் அந்த பொழுதில் தலைவரை முழுமையாகவே பகீன் உள்வாங்கி விட்டான் என்றே சொல்ல வேண்டும்.தலைவரை சந்தித்த பின்னர் தனக்கு பயிற்சிகூட தேவையில்லை என்று சொல்லி தான் தாயகம்போய் வேலை செய்ய சென்றான்.

அவன் அங்கு சென்றிருந்த பொழுதில் 18.05.84ல் வல்வெட்டித்துறையில் நடந்த ஒரு தற்செயலான சம்பவம் ஒன்றில் எந்தவொரு அடுத்த கண தயக்கமும் இன்றி அமைப்பின் கொள்கைக்கு முழுமையாக சயனைட் அருந்தி வீரமணமடைகிறான்.தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது சயனைட்மரணம் அவனது.சயனைட் வேலை செய்யுமா செய்யாதா இதனை கடித்தால் தப்பவே முடியாது என்பன போன்ற கேள்விகளுக்கு அப்பால் தலைவரின் வழிகாட்டலும் அதன் வழியான போராட்டமும் காப்பாற்றபடவேண்டும் என்பதற்காக தன்னை ஆகுதியாக்கினான்.இத்தனைக்கும அவன் கடித்த குப்பி வேலை செய்ய கிட்டத்தட்ட 45நிமிடங்கள் எடுத்தது.

ஒரு சந்திப்பு.அதனிலேயே தலைவரை முழுமையாக உள்வாங்கி அவரை போலவே சிந்திக்கும் திறன் பெற்ற பகீன் எங்கே பல தடவை தலைவரை சந்தித்ததாக சொல்லிக் கொண்டே தலைவரின் இலட்சியத்தை மண்போட்டு மூடுபவர்கள் எங்கே..

“தாயை நேசிக்க
மீசைமுளைக்க
தேவையில்லை ,,”என்று புதுவை எழுதியது போலவே
தேசியதலைவரை புரிந்து கொள்ளவும் அவரை பின்தொடரவும் அவரது இலட்சிய பாதையில் பயணிக்கவும் அவரை சந்தித்து இருக்கதேவையில்லை.உணர்ந்து கொண்டாலே போதும்.

தலைவரை உணர்ந்து கொண்டவர்கள் ஒருபோதும் தடம்மாறி பயணிக்க மாட்டார்கள்.பயணிக்கவும் முடியாது.

– ச.ச.முத்து-