அரசு கூறியது போன்று வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை, மீள்குடியேற்றக் குழு குற்றச்சாட்டு May 29, 2015 News வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாக மைத்திரி அரசாங்கம் தெரிவித்த போதிலும் குறைந்தளவான குடும்பங்களே இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய நிலப்பரப்பை விடுவித்து ஒட்டுமொத்த மக்களையும் குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் வலி.வடக்கு உப தவிசாளருமான ச.சஜீவன் தெரிவித்துள்ளார். சொந்த நிலமிருந்தும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழும் வலிகாமம் வடக்கு மக்களின் அகதி வாழ்க்கை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கு மக்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்களினது வீடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். இந்த மக்களில் குறிப்பிட்டளவானோர் கடந்த ஆட்சிக் காலத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர். அதேபோன்று ஏனையோரும் மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என்று கூறியபோதும் அவ்வாறு மீள்குடியேற்றம் ஏதும் நடைபெறாத நிலையே இருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீள்குடியமர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வலி. வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று புதிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது. இதற்கமைய முதற்கட்டமாக ஆயிரம் ஏக்கரை விடுவிப்பதாகவும் தொடர்ந்து ஏனைய பகுதிகளை விடுவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஆயிரம் ஏக்கரை விடுவித்ததோடு மட்டும் அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நின்றுவிட்டது. இதற்குப் பின்னர் காணிகளை விடுவித்து மக்களை மீளக் குடியமர்த்தும் எந்தவித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவோமா அல்லது முன்னைய அரசாங்கங்கள் செய்தது போன்று மீண்டும் ஏமாற்றப்படுவோமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆகவே கடந்த காலங்களைப் போலல்லாது மைத்திரி ஆட்சிக்காலத்திலேயே மீள்குடியேற்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டுமென்று மக்கள் கோருகின்றனர் என்றும் சஜீவன் தெரிவித்தார்.