வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தை அருகே உள்ள வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமி, நேற்றுமாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் வவுனியாவுக்குச் சென்றிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், பாடசாலையை விட்டு இடை விலகிய இந்தச் சிறுமியே, தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் சென்றிருந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் சமையல் மற்றும் ஏனைய வீட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார்.

சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக வடக்கில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கில் பாடசாலை மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறிலங்காவின் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களில் இத்தகைய 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுமி ஒருவர் மர்மமாக இறந்துள்ளார்.

வடக்கில் இளம் சமூகத்தினர் வழிதவறிப் போவது மற்றும் குற்றசெயல்கள், துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு, பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கல்வி அதிகாரி ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.