21.06.2015 ஞாயிறு மாவீரர் நினைவாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா இரண்டாம்நாள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

காலை 9மணியளவில் ஆரம்பமாகிய தமிழர் விளையாட்டு விழாவில் சுவாரசியமான விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன அத்தோடு மதியம் 11:30 மணியளவில் இடம்பெற்ற மரதன் ஒட்டத்தில் 6 அகவையில் இருந்து 60 அகவை வரையான வீரவீராங்கனைகள் அதிகளவில் பங்கு கொண்டு சிறப்பித்தமை பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.அத்தோடு தேசியக்கொடிகளை தாங்கிச்சென்ற அணிநடையும் அதனைத்தொடர்ந்து காற்றடைத்த பலூன்களை காற்றலையில் பறக்கவிட்டு கவிதையூடாக தேசத்திற்கு செய்தி அனுப்பியதும் மனதில் எழுச்சியையும் உறுதியையும் ஒன்று சேர்த்து ஊட்டியது.

கழகங்களின் பங்களிப்போடும் ஒற்றுமையோடும் பார்வையாளர்களின் உற்சாகவெளிப்படுத்தலோடும் வீரவீராங்கனைகளின் சாதனைகள் தமிழர்விளையாட்டு விழாவை மிகவும் மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது. இதேவேளை தமிழர் விளையாட்டு விழாவின் களத்தில் கடந்த காலங்களில் சிறுவனாக சாதனைகளை நிலைநாட்டிய  வைத்தியர் செந்தூரன் சிறீதரன் அவர்கள் தமிழர் விளையாட்டு விழா 2015 இன் பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவை சிறப்பித்தது இளையவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

தமிழர் விளையாட்டு விழாவில் வழமைபோன்று 16 அகவைக்கு கீழ்ப்பட்ட பிரிவு மேற்பட்ட பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது இப்பிரிவுகளில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் 16 அகவைக்கு உட்ப்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை Stovner தமிழ் விளையாட்டுக்கழகம் 387 புள்ளிகளை பெற்று வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றது. இரண்டாவது இடத்தில் 11stars விளையாட்டுக்கழகம் 299 புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது.மூன்றாவது இடத்தில் லோரன்ஸ்குக் நார்விக் கழகம் 140 புள்ளிகளை பெற்று முன்றாம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

அகவை 16இற்கு மேற்பட்ட பிரிவில் 309 புள்ளிகளை பெற்று 11star விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தை தட்டிக்கொண்டது இரண்டாம் இடத்தில் 262 புள்ளிகளை பெற்று Stovner விளையாட்டுக்கழகம் வெற்றியை தம தாக்கியது மூன்றாம் இடத்தில் 155 புள்ளிகளை பெற்று North boys விளையாட்டுக்கழகம் வெற்றியை பெற்றுக்கொண்டது.