தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமையை பாதுகாக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET)

icet logo
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே!

முள்ளிவாய்க்காலோடு எம் தேசத்தின் மூச்சடங்கிப் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எம் இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இத்தருணத்தில் ‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை’ ஆகிய நாம் உங்கள் வாசல் தேடி வருகிறோம்.

தமிழின அழிப்பில் சிங்கள தேசம் இராணுவரீதியாக வெற்றியீட்டிய போதும், திம்புக் கோட்பாட்டின் அடிநாதமாக திகழ்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை ஆகிய எமது அடிப்படை அரசியல் கோட்பாடுகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, அக்கொள்கைகளை நேர்மையுடன் கொன்டு செல்லும் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழர் தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகவே ‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை’ ஆகிய நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். தொடர்ந்தும் போராடுவோம். ஆயினும், இலங்கைத் தீவில் அமுலிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத சட்டங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் அரசியல் நடவடிக்கைகளை அடக்குமுறைக்குள் வைத்திருக்கிறது என்பதை நாமறிவோம். அந்த அடக்குமுறைக்குள்ளும், தமிழர் ஒரு தேசம் என்ற கொள்கையோடு, தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமையை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அர்ப்பணிப்போடு பணியாற்றிவருவதனால், தாயகத்திலுள்ள எமது மக்களை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.  

‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்.

‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை’ என்பது இனஅழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவருவதோடு, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதை இறுதி இலட்சியமாக வரிந்துகொண்டு, உலகின் பல பாகங்களிலும் சனநாயக ரீதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் பதினான்கு  தேசிய அவைகளின் தாய் அமைப்பாகும்.


‘அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை’ (ICET)

சுவிஸ் ஈழத்தமிழரவை  – சுவிஸ்

நோர்வே ஈழத்தமிழர் அவை  – நோர்வே
கனேடிய தமிழர் தேசிய அவை – கனடா
இத்தாலி ஈழத்தமிழரவை – இத்தாலி
பிரான்ஸ் தமிழர் பேரவை – பிரான்ஸ்

சுவீடன் தமிழர் தேசிய அவை – சுவீடன்

தமிழர் நீதிக்கான அமைப்பு – அவுஸ்திரேலியா
பெல்ஜியம்  தமிழர் தேசிய அவை – பெல்ஜியம்
பின்லாந்து தமிழர் பேரவை – பின்லாந்து
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்
நெதர்லாந்து தமிழர் அவை  – நெதர்லாந்து
நியூசீலந்து தமிழர் தேசிய அவை – நியூசீலந்து
தமிழர் இன அழிப்புக்கு  எதிரான கூட்டமைப்பு – மொரிசியஸ்
யேர்மன்  ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி