என்னிடமிருந்து கௌரவத்தைப் பெறவேண்டுமானால் மரியாதையாக வெளியே சென்றுவிடுங்களென எச்சரித்து தனது அமைச்சர்கள் இருவரை வெளியேற்றியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டிவருமென எச்சரித்த அமைச்சர்களான குருகுலராஜா மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரையே முதலமைச்சர் இவ்வாறு கூறி வெளியேற்றியுள்ளார்.

தன்னை வடமாகாணசபையில் அமைச்சு கதிரையேற்றிய சிறீதரனை வெல்ல வைக்க குருகுலராஜா பாடுபட்டு வருகின்றார். இந்நிலையில் முதலமைச்சர் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமை கூட்டமைப்பிற்கு குறிப்பாக அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முற்பட்ட சிறீதரனிற்கு பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று வவுனியாவில் பலமான தமிழரசுக்கட்சி பிரமுகராக தன்னை காட்டிவரும் சத்தியலிங்கமும் தள்ளாட தொடங்கியுள்ளார். அவரது ஆதரவு பலமும் படுவீழ்ச்சியடைந்துள்ளது.

இதையடுத்தே முதலமைச்சரினை மிரட்டி கூட்டமைப்பிற்கு ஆதரவான அறிக்கையொன்றை விடுக்க இருவரும் முற்பட்டு மூக்குடைபட்டு திரும்பியுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து விலக்கு பிடிக்க சென்றிருந்த மற்றொரு அமைச்சரிடமும் இப்பிரச்சினை பற்றி தான் பேசவந்திருந்தால் இது தான் எமக்கிடையேயான தனிப்பட்ட கலந்துரையாடலாக இருக்குமென முதலமைச்சர் எச்சரித்துள்ளார். இதையடுத்து குறித்த அமைச்சரும் துண்டை காணோம் துணியை காணோமென தப்பியோடியதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதுடன் விக்கினேஸ்வரன் என்பவரை முதலமைச்சர் கதிரையினை பேரம் பேசி அடிபணிய வைக்கமுடியாதென அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.