இலங்கையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில், தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாடுகள் பற்றி, கனடாவிலிருக்கும் ஆய்வாளர் “சுதர்மா” அவர்களின் செவ்வியொன்று, இன்றைய “லங்காசிறி” இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது! சுதர்மா அவர்களின் ஆய்வு பற்றி, ஒரு சாதாரண ஈழத்தமிழனாக எனக்குள் எழுந்த விமர்சனங்களை இங்கு பதிவிட விழைகிறேன்.

ஆய்வாளரின் அலசலில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான அவரின் ஆதரவும், தமிழ் தேசிய முன்னனியின்மீதான காழ்ப்புணர்ச்சியும் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது! தமிழர்களின் பலம் மிக்க குரலாக இருக்கும் கூட்டமைப்பை பலமிழக்க செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு இலங்கை அரச ஆதரவோடு திட்டமிடப்பட்ட நிரலுக்கு அமைவாக, முன்னணி திட்டமிட்டே செயற்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். கூட்டமைப்பு, தமிழர்களின் ஏகோபித்த குரலாக இருக்கவேண்டும் என்பதுதான், கூட்டமைப்பிற்கு கடந்த தேர்தலில் வாக்களித்த பாவப்பட்ட தமிழர்கள் விரும்பினார்கள். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடந்தவை என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். மத்திய அரசின் அனுமதி இன்றி தன்னுடைய முடியை கூட புடுங்க இயலாத மாகாண சபையை கண்டது; சிங்கக்கொடியை கையில் பிடித்து அசைத்தது; ஆட்சியாளர்களின் சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தந்தை செல்வா காலம் தொட்டே இருந்துவந்த மரபை உடைத்தது; தென்னிலங்கை சிங்கள சமூகத்தை சினம்கொள்ளும்படி, வடக்கு கிழக்கு தமிழர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்று புத்திமதி சொன்னமை; ஐ.நா.வில், சர்வதேச விசாரணை வேண்டாம், உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு என்று தெரிவித்தமை; இனவழிப்பு போரின்போது நடந்த உண்மைகளை ஐ.நா.சபையிலே போட்டு உடைக்கக்கூடாது என்று “ஆனந்தி” யை மிரட்டி பணியவைத்தது; அதையும் மீறி பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்தி சர்வதேச சமூகத்தின் முன்னால் பேசியமைக்காக, அவரை ஒதுக்கியமை; பிரித்தானிய பிரதமரின் யாழ் விஜயத்தின்போது இனவழிப்பு பற்றி விரிவாக பேச கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டமை (பிரித்தானிய பிரதமரே தன்னுடைய தனிப்பட்ட குறிப்பேட்டில் இதை குறிப்பிட்டுள்ளார் என்று அண்மையில் ஆதாரத்தோடு செய்தி வந்தது) போன்றவைதான் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட பொன்னான காலப்பகுதியில் வாக்களித்த தமிழருக்கு செய்த சேவைகள்!

தமிழர்கள் பயணிக்கவேண்டிய “தமிழ்தேசிய ஆன்மா” என்கிற விடயத்திலிருந்து மக்களை திசைதிருப்பும் சதியாகவே முன்னணி இத்தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்து நிற்கிறது என்று சுதர்மா குற்றம் சாட்டுகிறார். தமிழ்த்தேசிய ஆன்மா என்கிற உயிர்நாடியை விட்டு கூட்டமைப்பு எப்போதோ விலகி விட்டமை சுதர்மாவுக்கு தெரியாதா..? முன்னணியின் வெற்றிக்காக பாடுபடும் அனைவரும், தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலே தவறு செய்கிறார்களாம். தமிழர்கள் அவ்வளவு முட்டாள்கள் என்றோ, அல்லது தாய்மொழியே புரியாதவர்கள் என்றோ சுதர்மா முடிவு செய்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது!

சம்பந்தர், சுமந்திரன், மாவை போன்றவர்கள் இல்லாத கூட்டமைப்போடு இணைந்து செயலாற்ற தயார் என்று முன்னணி தெரிவித்தமையானது, சூட்சுமம் என்கிறார் சுதர்மா! அய்யா, இதில் சூட்சுமத்துக்கு என்ன இருக்கிறது? மேற்குறிப்பிட்ட மூவரும், இந்திய, இலங்கை, அமெரிக்க நிரல்களுக்கு ஒத்திசைவாக காய் நகர்த்துவதால்தானே மக்கள் கூட்டமைப்பில் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார்கள்? இதற்கு வலு சேர்க்கும்விதமாக கடந்த காலங்களில் செய்திகள் வந்திருந்தமை, ஆய்வாளரான உங்களுக்கு தெரிந்திருக்கவில்லையா? கூட்டமைப்பை, பேரம்பேசும் சக்தி என்று சொல்லிச்சொல்லியே மக்களை ஏமாற்றிவரும் இந்த மும்மூர்த்திகள்தான் தமிழ்தேசியத்தின் முதல் எதிரிகள் என்பதை உணர்ந்துகொள்ள ராஜதந்திரம் தேவையில்லை.

கூட்டமைப்பு தன்னை ஒரு கட்சியாக பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டும், கஜேந்திரகுமார், முன்னணியையும் பதிவு செய்யாமல், “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” என்ற பெயரை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறார் என்பது சுதர்மாவின் கண்களை உறுத்துகிறது! அதனால் என்ன..? கஜேந்திரகுமார் வெளிப்படையாக செய்கிறார்; ஆனால், கூட்டமைப்பு மறைத்து செய்கிறது. கூட்டமைப்பு எடுக்கும் அத்தனை முடிவுகளிலும் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் இருக்கிறது என்று, கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவ கட்சிகள் தொடர்ந்து முறையிட்டு வந்தமை சுதர்மாவுக்கு ஞாபகம் இல்லையா?? ஒரேநாடு என்பதற்கு அமைவாக தீர்வு என்பதாக முன்னணி காய்நகர்த்துகிறது என்கிறார் சுதர்மா! “ஒருநாடு இரு தேசம்” என்ற, முன்னணியின் கொள்கையையும் சாத்தியமில்லாதது என்கிறார் சுதர்மா. கூட்டமைப்பு வித்தியாசமாகவா செய்கிறது? சிங்கக்கொடி அசைத்ததும், சுதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டதும், தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு இரகசிய சந்திப்புக்கள் நிகழ்த்தியதும் எந்த வகையில் அடக்கம் என்றும் சுதர்மா விளக்கவேண்டும். கூட்டமைப்பு மாத்திரம், “இருநாடு” என்ற கொள்கையை முன்வைத்தா பேசப்போகிறது? “ஒரே நாடு”; “பிரிவினை கோரமாட்டோம்” போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கக்கூடிய சட்டவிதிகளுக்கு அமைவாகவே முன்னணி தேர்தல் களத்தில் நிற்கிறது என்று சுதர்மா சொல்கிறார். சுதர்மா அவர்களே! கூட்டமைப்பும் அதே நிலையில்தானே..? இலங்கையின் சட்ட விதிகளுக்கு முரணாக கூட்டமைப்பால் இப்போது கோட்பாடுகளை இயற்ற முடியுமா..?

இலங்கை அரசு எதை செய்ய நினைத்ததோ அதைத்தான் முன்னணி செய்ய விழைகிறது என்று ஏராளமானவர்கள் சொல்கிறார்கள் என்று குறிப்பிடும் சுதர்மா அவர்களே!, யார் அந்த ஏராளமானவர்கள்? எங்கிருந்து இந்த கணக்கெடுப்பை கண்டு பிடித்தீர்கள்?? எத்தனை பேர் இதில் அடக்கம்?? குத்து மதிப்பாக ஒரு இலட்சம் பேர் இருப்பார்களா??? உங்களின் கருத்துக்களை சொல்வது உங்கள் உரிமை, அது வேறு. உங்கள் கருத்திற்கு வலு வேண்டும் என்பதற்காக, “ஏராளமானோர்” என்ற மலின உத்தியை விட்டுவிடுங்கள்.
இலங்கை அரசு எதை செய்ய நினைத்ததோ அதைத்தான் முன்னணி செய்ய விழைகிறது என்பது, களநிலைமையை பார்க்கும் யாவருக்கும் தெரியும் என்பது சுதர்மாவின் கருத்து. சரிதானே! கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் நடைபெற்ற களநிலைமைகளை உற்றுநோக்கும்போதுகூட, இலங்கை அரசு எதை செய்ய நினைத்ததோ அதைத்தான் கூட்டமைப்பு செய்ய விழைகிறது என்று, கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்கள் சொல்கிறார்களே..! அதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் சுயேச்சைகள் களமிறக்கப்பட்டு, தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதுபோல், இப்போது வடக்கிலும் பல சுயேச்சைகள் களமிறக்கப்பட்டமை கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கும் சுதர்மாவிற்கு, கூட்டமைப்பு, கொண்ட கொள்கையின்பால் நின்று, வடக்கு – கிழக்கு மக்களின் நம்பிக்கையை பெற்று, அமோக ஆதரவு பெற்றிருந்தால், சுயேச்சைகள் தோன்றியிருப்பார்களா? அப்படி வருவதற்கு சுயேச்சைகளுக்கு தைரியம்தான் வருமா, அல்லது மக்கள்தான் விட்டிருப்பார்களா?

இறுதி இனவழிப்பு யுத்தத்தின்போது நடந்த விடயங்கள் தொடர்பாக, ஐ.நா.சபையில் கூட்டமைப்பு நடந்துகொண்ட விதம் தொடர்பான விமர்சனங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள விடயமே அல்ல என்று சொல்லி சுதர்மா நாசூக்காக நழுவிவிட்டார்! பரவாயில்லை. அதைப்பற்றி விவாதித்தால் கூட்டமைப்பு நாறும் என்பதை நன்கு அறிந்தே, அந்த சங்கடத்தை சுதர்மா தவிர்த்தார். ஆனாலும், அவர் இன்னொன்று சொன்னார் பாருங்கள்… அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக இயற்றப்பட்ட ஜெனீவா தீர்மானம் அது என்றும், அதை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்யமுடியாது என்றும், இந்த அமெரிக்க ஜெனீவா தீர்மானம் என்பது போலியானது என்றும் விளக்கமளித்தார், சுதர்மா. ஆக, அமெரிக்க நிரலுக்கு அமைவாக போடப்பட்ட அந்த போலியான ஜெனீவா தீர்மானம் பற்றி, கூட்டமைப்பு அலட்டிக்கொள்ளாதது நியாயமே என்று, கூட்டமைப்பை நியாயப்படுத்துகிறார், சுதர்மா! சரி, அப்படியே அவர் வாதத்திற்கு வந்தாலும், தமிழருக்கு தீர்வு என்பது எதுவாக அமைந்தாலும், அமெரிக்க தலையீடின்றி இருக்காது என்பது புரியாத ஆளா நீங்கள், சுதர்மா? அப்படிதான் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டாலும், “அது அமெரிக்க நிரலுக்கு அமைவாக முன்வைக்கப்படும் போலியான தீர்வு” என்று கூட்டமைப்பு ஒதுங்கிவிடுமா, சுதர்மா அவர்களே..? இறுதி யுத்தத்தில், கஜேந்திரகுமார், ஆட்சியாளர்களோடு தொடர்பில் இருந்தார் என்பதை சுட்டிக்காட்டும் சுதர்மா அவர்களே… அந்த நேரத்தில், சம்பந்தரை தொடர்பு கொள்ள கஜேந்திரகுமார் முயன்றதும், சம்பந்தர் ஓடி ஒளிந்ததும் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா..? இறுதி யுத்தத்தின்போது புலிகளை ஒழிக்க, ஆட்சியாளர்களோடு கஜேந்திரகுமார் ஒத்துழைத்தார் என்று காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி கச்சிதமாகவே தெரிகிறது, சுதர்மா அவர்களே!

சுதர்மாவின் ஆய்வில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது. முன்னணிக்கு மக்களிடையே பெருகிவரும் நம்பிக்கை, கூட்டமைப்பிற்கு சங்கடமாக இருப்பதை நாமும் உணர்கிறோம். கூட்டமைப்பு சரியாக இருந்திருந்தால், மக்கள் ஏன் முன்னணியில் நம்பிக்கை வைக்கிறார்கள்? ஆக, முன்னணியின் பக்கம் மக்கள் சாய்வதை தடுக்கும் அவசியத்தால் மக்களை குழப்புவதற்கு களமிறக்கப்பட்டிருக்கும் ஒருவராகவே சுதர்மா பார்க்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு ஆய்வாளர், இருபக்க விடயங்களையும் சமானமாக ஆராயவேண்டும் என்ற தார்மீகத்திலிருந்து பிறழ்ந்து, கூட்டமைப்பை உயர்த்தி, முன்னணியை தாழ்த்தி ஆராய்ந்திருப்பதன் மூலம், நீங்கள் சிறுமைப்பட்டு போயுள்ளீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து, சுதர்மா அவர்களே! மக்கள் எப்போதும் விழிப்புடன்தான் இருப்பார்கள். தேர்தல் முடிவுகள் காட்டும், மக்கள் தெரியாமல் செய்கிறார்களா அல்லது தெரிந்தேதான் செய்கிறார்களா என்று!

-குகன் யோகராஜா-