இந்த ஆக்கம் வெளிவரும்போது ஒருவேளை வாக்குஎண்ணிக்கை தொடங்கிவிட்டிருக்கலாம்.முடிவுகளில் சிலகூட வெளியாகி இருக்கவும்கூடும்.புலத்தின் ஊடகங்கள் தமது நேரலை நிகழ்வுகளில் ஆய்வுகளை நடாத்தி மாற்றத்துக்கான ஒரு தேர்தல்போல ஒரு மாயையை உருவாக்கி கொண்டும் இருக்கலாம்.

ஆனால் நிஜத்தில் இந்த தேர்தல் முன்னைய தேர்தல்போலவே ஒன்றுதான்.எந்தவொரு மாற்றமும் இதன்மூலம் நிகழ்ந்துவிடப்போவதில்லை என்பதுதான் கடந்தகாலங்களின் பாடங்கள்தரும் மிகப்பெரும் வரலாற்று படிப்பினை.

இன்’றைய வரையிலான தமிழ்மக்கள்மீதான அனைத்து அடக்குமுறைகளையும் சட்டரீதியாக தயாரித்த ஒரு நிறுவனமாகவே இலங்கைபாராளுமன்றம் விளங்குகின்றது.தமிழ்மக்கள்மீதான கொடூரமான இனஅழிப்புகளையும்,இனச்சுத்திகரிப்புகளையும்,நிலஅபகரிப்புகளையும் நியாயப்படுத்தும் சட்டமூலங்களின் பிறப்பிடமாகவே இன்றைவரை இலங்கைபாராளுமன்றம் இயங்கிவருகின்றது.இனியும் அதன் போக்கில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.

இன்றைய உலகில் ஜனநாயகஆட்சிமுறையே அதிஉன்னதமான ஒன்றாக உருவகிக்கப்படுகின்றது.உண்’மையும் அதுதான்.இதற்கு மாற்றாக இதனைவிட சிறப்பான ஒன்று உருவாகும்வரை இதுவே நீடிக்கும் என்பதிலும் சந்தேகமேயில்லை.உலகம் ஏற்றுக்கொண்டுள்ள ஆட்சிமுறையாக அதுவே விளங்கியும் வருகின்றது.இங்குதான் சிங்களத்தின் நரித்தனமும்,சமயோசிதமும் வெளிப்படுகின்றது.உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆட்சிமுறை ஒன்றின் ஊடாக  நடாத்தப்படும் ஆட்சி இது என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டு மறுபுறத்தே அதே ஆட்சியின் சட்டங்கள், மற்றும் அரச இயந்திரங்கள் அனைத்தின் மூலமும் தமிழ்மக்கள்மீது உலகத்தின் சட்டங்களுக்கு முரணாண ஒரு இனஅழிப்பு அடக்குமுறை ஆட்சியை கடந்த அறுபதுவருடங்களாக நடாத்தி வருகின்றது.இனியும் அதுவே எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடரும்.அதிசயம் ஏதேனும் நிகழ்வதற்கான வால்நட்சத்திரம் எதுவுமே வானத்தில் இல்லை.சிங்களமனங்களிலும்கூட.

இந்த பாராளுமன்றத்துக்கான  தேர்தலே இப்போது நடக்கின்றது.ஆனால் இந்த பாராமன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் சிறகுவிரித்தெழுந்து பறந்திடும் விடுதலைவாழ்வும், ராணுவ சந்தடியற்ற தமிழர்கள் தெருக்களும் வந்துவிடும் என்பதைப்போன்ற பசப்புகளே எமது மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டு வருகின்றன.இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் ஏறத்தாள 1977 வரை இத்தகையை ஒரு மாயையே தமிழர் தேர்தல் மேடைகளில் இரண்டுகட்சிகளாலும் ஏற்படுத்தப்பட்டுவந்தது.ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இளைஞர்களின் கரங்களுக்கு வந்து அர்ப்பணிப்பும்,உலக அரசியலின் மாற்றங்களை உள்வாங்கிய ஒரு தெளிவும் ஏற்பட்டபோது இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் தமிழர்களின் வாழ்வினுள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாத ஒன்றாகவே வந்துபோனது தெரிந்ததே.ஆனாலும் இந்த தேர்தலை எமது விடுதலைக்கான குரலை ஓங்கி வெளிப்படுத்தும் ஒரு களமாகவும், இந்த பாராளுமன்றத்தை உலக நடைமுறையுடன் ஒன்றித்து எமது விடுதலையை வெளிப்படுத்தும் முறைமையாகவும் வரலாற்றின் போக்கு மாற்றியது.77ல் இலங்கைப்பாராளுமன்றத்துக்கான தேர்தலை தமிழீழத்துக்கான ஒரு வாக்குஎண்ணிக்கையாகவே இளைஞர்களின் அமைப்புகள் பார்த்தன. ஏறத்தாள அனைத்து அமைப்புகளும் அந்த தேர்தலில் இறங்கி வேலையும் செய்தன என்றே சொல்லலாம்.

அதன் பின்னர் 82 ஆகஸ்ட் 1ம்திகதி அப்போதைய வட்டுக்கோட்டை பா.உ திருநாவுக்கரசு மரணமடைந்தபோது இலங்கை பாராளுமன்றத்தினை இன்னொரு முறையில் பயன்படுத்தும் ஒரு முறைமை உருவாகியது.வட்டுக்கோட்டை பா.உ திருநாவுக்கரசின் இடத்துக்கு இளைஞர்களின் அழுத்தம் காரணமாக தமிழர்விடுதலைக்கூட்டணி,அப்போது வெலிக்கடை சிறையில் மரணதண்டனையை (1982 ஓகஸ்ட மாதம் குட்டிமணி,ஜெகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது)எதிர்நோக்கி இருந்த குட்டிமணியை பா.உ வாக நியமித்தனர்.இந்த வரலாறு நிகழ்வதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜரிஸ்விடுதலை அமைப்பை சேர்ந்த பொபி சாண்டஸ் பிரித்தானிய பாராமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று அயர்லாந்து விடுதலைக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை ஏற்றபடுத்தி இருந்தமை குட்டிமணியின் நியமனத்துக்கு இளைஞர்களின் ஆதரவை பெற்றது.

ஆனால் சிங்கள பேரினவாதம் தனது அரச இயந்திரத்தின் இன்னொரு கட்டமைப்பான சிறைச்சாலை திணைக்களத்தின் ஆணையர் பிரிய தெல்கொட மூலம் இந்த நகர்வை தடுத்தது சிங்களத்தின் ஜனநாயம் மீதான இன்னொரு அடியாகும்.

இதன்மூலம் இன்னொரு படிப்பினையையும் தமிழ்தேசியம் பெற்று கொண்டது.உலகம் வாய்கிழிய கத்தி கூப்பாடு போடும் ஜனநாயத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சிங்களம் எப்போதும் தமிழர்மீது அடக்குமுறையை இனஅழிப்பை தொடரும் என்பதே அது.

தமிழர்களின் போராட்ட பாதையில் அர்ப்பணங்களும், தியாகங்களும்,பெருவீரமும் நிறைந்த ஒரு போர் வான்வரை எழுந்தாடிய போது தமிழர்களின் போராட்டம் சர்வதேச வாசல்படியின் வெகு கொதிநிலையான ஒன்றாக உருமாறிய பொழுதினில் இலங்கை பாராமன்றத்தை தமிழர்களின் விடுதலைக்கான ஒரு பரப்புரை மேடையாக பயன்படுத்தும் ராஜதந்திரம் எழுந்தது.அத்தகைய ஒரு வரலாற்று தேவையும் எழுந்து இருந்தது.

மானுட வரலாறு கண்டு கேட்டறிந்திராத ஒப்பற்ற ஒரு விடுதலைப்போராட்ட களத்தினில் நின்றிருந்த தமிழர் தேசியதலைமை இலங்கைபாராமன்றத்தின் இனவெறி முகத்தினை தமிழர்களுக்கு புரிய வைத்து அதனை பொருட்படுத்தாத ஒரு அரசியலை உருவாக்கிவைத்திருந்த அதே நேரம் அந்த பாராமன்றத்தின் மேடையை தமிழர்களின் உரிமை வேட்கையை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவும் மிகவும் ஆழமான வழிநடாத்தலில் செய்துவந்தது.

தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையின் இந்த பொறிமுறையால் வெகுண்டெழுந்த சிங்களம் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள்மீதே கொலை வெறியை கட்டவிழ்த்து விட்டது.தன் ஜனநாயக நடிப்பு முகமூடியை கழற்றி வீசிய   சிங்களத்தை அம்பலம் செய்தது தமிழ்தேசியம்.

ஆனால் 2009 மே மாதத்துக்கு பின்னர் எல்லாமே தலைகீழானது.இலங்கை பாராமன்றம் தமிழர்களின் தாயகவிடுதலைப் போராட்ட பாதையில் ஒரு மேடையாக பயன்படுத்திய தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஏதோ இலங்கை பாராமன்றத்தின் மூலம் மட்டுமே தமிழர்களின் உரிமை வென்றெடுக்க முடியும் என்ற பெரும் மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது.

துரதிஸ்ட வசமாக இந்த 2015 தேர்தலில் எவருமே மறந்துபோய்க்கூட ‘ இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஒரு பிரச்சார மேடை மட்டுமே ‘ என்பதை சொல்லவே இல்லை.ஏதோ இந்த தேர்தலால் ஒரு பெரும் மாற்றமொன்று நிகழப்போகுது என்ற குடுகுடுப்பை காரனின் குரலாகவே எல்லோர் பிரச்சாரமும் அமைந்திருந்தது.சிங்களத்துடன் இணக்க அரசியலை செய்திருந்த இலங்கை பாராமன்ற எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தை கூட 83ல் தலைமறைவாக மாற்று வேடத்தில் சிங்களதலைநகரை விட்டு தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட வைத்த பாராளுமன்றம் ஒரு போதும் தமிழர்களுக்கு உரிமைகள் எதனையும் தந்துவிடப்போவது இல்லை என்ற பெரிய வரலாற்று பாடத்தை எந்தவொரு தமிழ்வேட்பாளரும் சொல்லாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை…

அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ்மக்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து புரிந்து வைத்திருக்க வேண்டியது காலம் தந்த கட்டளையாக இருக்கிறது.இந்த பாராளுமன்றத்தின் பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள்தான் பகிரங்கமாகவே ‘ போர் என்றால் போர் ‘ என்றும் தமிழர்கள்மீதான விமான,எறிகளை தாக்குதல்களை நியாயப்படுத்திய ஒவ்வொரு சொல்லும் இன்றும்கூட புதிய புதிய சனாதிபதிகளாலும்,பிரதமர்களாலும் அதே அறைகூவலுடன் எமக்கு எதிராக முரசறையப்படுகின்றது.இந்த பாராமன்றத்தை எமது உரிமை வேட்கையை,எமக்கு எதிராக சிங்களம் தொடர்ந்து நடாத்தும் இனிஅழிப்பை உலகுக்கு சொல்லும் ஒரு சாளரமாக பயன்படுத்தலாம் அவ்வளவே தான்.வேறு எதுவுமே இல்லை.

மற்றப்படி,எமக்கான விடுதலை என்பது எமது மக்கள் ஒன்றிணைந்து எழுந்து,உலக தமிழினத்துடன் கைகோர்த்து,உலகம் முழுதும் எமக்காக குரல் கொடுக்கும் அனைத்து தரப்புடனும் சேர்ந்தெழுந்து போராடும் ஒரு பொழுதில்தான் எமது விடுதலை கைகூடும்.இதற்கான உறுதியை பெற நாம் வேறு எங்கும் போய் தேடவேண்டியதில்லை. கடலினில்,தலையினில், வானத்தில் என்று வீரம்விளைத்த எம் மாவீரர்களின் உறுதியில் லட்சத்தில் ஒரு பங்கை எம் மனதில் உள்வாங்கினாலே போதும். அது ஒன்றே எம் தாயகவிடுதலைக்கான ஒரே வழி.ஒரே பாதை.