“ரிமோர்ட் கண்ரோல்” அரசியல் செய்ய முடியாது! என்ற கருத்தின் மீதான ஒரு பார்வை August 23, 2015 News இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில், குறிப்பாக தமிழர் பிரதேசங்களில், “தமிழ்தேசிய மக்கள் முன்னணி” யின்பால் அதிகமான தமிழ்மக்கள் சாய்ந்து விடுவார்களோ என்ற அச்சம், “தமிழ் தேசிய கூட்டமைப்பு” க்கு வந்துவிட்டதோ என்னவோ, தமக்கு ஆதரவானவர்களை வைத்து, முன்னணியினை வாரித்தூற்றும் வேலைகள் கனகச்சிதமாக நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. நேற்றைய தினம் “லங்கா சிறி” இணையத்தில், கனடாவில் வாழும் “சுதர்மா” அவர்களை வைத்து ஒரு ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது. ஆய்வு முழுவதும், முன்னணியை தூற்றுவதும், சேறு வாருவதும், வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அதே நேரம், கூட்டமைப்பை தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகவும் காட்டும் கைங்கர்யம் மேலோங்கி இருந்ததையும், அந்த ஆய்வை கேட்ட, சுயசிந்தனை உள்ள அத்தனை பேருக்கும் புரிந்திருப்பார்கள். இன்றும், அதே பாணியில், அதே லங்கா சிறியில் இன்னொருவர் களமிறக்கி விடப்பட்டுள்ளார். அவர், பிரான்சில் வாழும், மனித உரிமை ஆர்வலர், “ச.வி.கிருபாகரன்” அவர்கள்! சுதர்மாவின் வழியிலேயே, முன்னணியை வசைபாட கிருபாகரனும் தவறவில்லை. கிருபாகரனின் செவ்வி என்பது, நன்கு திட்டமிடப்பட்ட, முன்னணியை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று காட்டும் நிரலுக்குள் புனையப்பட்டது என்பது, கிருபாகரனின் செவ்வியின் தொடக்கத்திலேயே புலப்படுகிறது. உண்மையில், கூட்டமைப்பின் உறுப்பினர்களை விடவும், முன்னணியின் உறுப்பினர்களோடேயே தான் அதிகமாக பழகியதாக கிருபாகரன் குறிப்பிடுகிறார். அதாவது, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் போன்றவர்களோடு தன அதிகமாக பழகியதாக சொல்கிறார். அப்படி இருந்தும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயர் தனக்கு சரியாக தெரியாது என்று சொல்கிறார், கிருபாகரன். “சொல்பவன் சொன்னால் கேட்பவன் மடையன்” என்பது இதற்கும் பொருந்தும்! அந்த கட்சியை பற்றி அறிந்துகொள்வதில் தான் ஆர்வம் காட்டவில்லை என்று கிருபாகரன் குறிப்பிடுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், கூட்டமைப்பை அங்கலாய்க்க வைக்கும் ஒரு கட்சியாக வளர்ந்து வரும் முன்னணி, அதுவும், கிருபாகரன் அதிகமாக பழகிய கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியின் பெயர் தெரியாது என்று கிருபாகரன் சொல்வது, அவரை அவரது நிலையிலிருந்தும் பல படிகள் கீழிறக்கி விட்டுள்ள, ஒரு பண்பற்ற செயலாகும். அதுவும், “கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள்” என்ற சொற்பதத்தை அடிக்கடி பாவித்து, முன்னணியை தரக்குறைவாகவே கிருபாகரன் சுட்டிக்காட்டினார். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், தமிழருக்கான அரசியல் கூட்டமைப்பிற்கு மாத்திரம்தான் சொந்தம் என்று சொல்ல வருகிறாரா கிருபாகரன்? ஒரு கட்சியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடையும் மக்கள், இன்னொரு நம்பிக்கை தரும் கட்சியை நாடி போவதோ அல்லது புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவதோ வழமையான ஒன்றுதானே?? “தமிழரசு கட்சி”, “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்”, “தமிழர் விடுதலை கூட்டணி”, “ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி / சுரேஷ் அணி”, “ஈழமக்கள் ஜனநாயக கட்சி”, அந்த கட்சி, இந்த கட்சி என்பவை எல்லாம் இப்படி உருவானவை தானே??? எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து செயற்பட்டவைதானே???? கிருபாகரனின் கருத்துப்படி இலங்கையில் தமிழ் கட்சி என்றால் தமிழரசு கட்சி ஒன்றுதான் இருந்திருக்க முடியும்! கிருபாகரனின் கேள்வி ஒன்று இங்கு முக்கியமாகிறது. கூட்டமைப்பு, முன்னணி, சுயேச்சைகள் என்று தனித்தனியாக வென்று, நாடாளுமன்றம் போய் எதை சாதிக்கப்போகிறார்கள் என்றும், இப்படி தனித்தனியாக போய் சிங்கள ஆட்சியாளர்களுடன் எப்படி பேரம் பேசப்போகிறார்கள் என்றும் கேட்கிறார், கிருபாகரன். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு கேள்வி, கிருபாகரன் அவர்களே! கடந்த ஐந்து வருடங்களாக, பெரும்பான்மையோடு தமிழர்களின் பிரதிநிதிகளாக “பஜீரோ” களிலும், “லாண்ட் குரூசர்” களிலும் வலம் வந்த கூட்டமைப்பு என்ன சாதித்தது என்றும், சிங்கள ஆட்சியாளர்களுடன் என்னென்ன பேரங்களை பேசிக்கிழித்தது என்றும் விளக்குவீர்களா, கிருபாகரன் அவர்களே? சிங்களவர்களின் தயவு இல்லாமல் தமிழருக்கு தீர்வு பெறமுடியாது என்று அடித்துக்கூறும் நீங்கள், சிங்கக்கொடியை அசைத்தும், சுதந்திர நிகழ்வுகளில் பங்குபற்றியும், கைகுலுக்கி விருந்துண்டு சிங்களவர்களோடு சிநேகம் பேணிய கூட்டமைப்பால் ஒரு தற்காலிக தீர்வை தானும் ஏன் பெற முடியவில்லை? சிங்கள ஆட்சியாளர்களோடு இணக்க அரசியல்தானே நடத்தியது கூட்டமைப்பு?? இந்த தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றால் மாத்திரமே தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்று உறுதி கூறும் நீங்கள், விடிவு பிறக்க வேண்டும் என்ற அவாவில் கூட்டமைப்பை தெரிவு செய்துவிட்ட மக்களுக்கு, அதே கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக, உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும், ஐ.நா.விலும் பாவப்பட்ட அந்த மக்களுக்கு செய்த துரோகங்கள் உங்களுக்கு தெரியாதா என்ன..? நீங்கள் சொல்லும் அத்தனையையும் நம்பிவிடும் முட்டாள்கள் மக்கள் என்று நினைத்தீர்களோ..! சம்பந்தர், சுமந்திரன், மாவை ஆகியோரோடு ஏற்பட்ட முரண்பாடுகளினால்தான் முன்னணி தோன்றியது என்பதை கூறிய நீங்கள், என்ன முரண்பாடு என்பதையும் அறிவீர்கள்தானே..? ஆதாரங்கள் உங்களின் கைகளில் இருப்பதாகத்தானே கூறுகிறீர்கள்! அவற்றை பகிரங்கப்படுத்த என்ன தயக்கம்..? சம்பந்தர், மாவை, சுமந்திரன் ஆகியோர் தவறு இழைத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், அந்த தவறுகளை பெரிது படுத்தக்கூடாது என்ற கருத்து பொதிந்த உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ள கூடியதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். சுமந்திரன் தனது சொந்த செலவில் தமிழர்களின் வழக்குகளை நடாத்தியிருக்கலாம். அனால் அவை எல்லாம் ஒரு தூர நோக்கு எதிர்பார்ப்புக்களோடு செய்யப்பட்டவை என்று ஏன் நினைக்க கூடாது? அதுதான் அந்த விடயத்தை இப்போது நீங்களே சொல்லி சுமந்திரனுக்கு ஆதரவு தேட முனைகிறீர்களே! இது ஒன்றே நல்ல உதாரணமாக இருக்கும். தேசியப்பட்டியல் என்ற, மக்கள் வாக்குகள் இல்லாமல் உள்ளே நுழைந்த சுமந்திரன், எதிர்காலத்தில் மக்கள் வாக்குக்களை கவரும் ஒரு தந்திரோபாயமாக இந்த வழக்கு விடயங்களை ஏன் கையாண்டிருக்க கூடாது? (சுமந்திரன் போலவே கஜேந்திரகுமாரும் ஏன் செய்யவில்லை என்ற உங்கள் கேள்வி நிச்சயம் கஜேந்திரகுமாரை சென்றடையும். பதில் தருவார் என்று நம்புவோம்) கூட்டமைப்பில் அதிருப்தி அடைந்து, முன்னணிக்கு ஆதரவு தேடும் புலம்பெயர் தமிழர்கள் அங்கு சென்றுதான் அரசியல் செய்யவேண்டும் என்ற உங்கள் வாதம் மிகச்சரியானது! புறப்படுங்கள்.. உங்கள் கூடவே வருகிறோம். கட்டாயம் நீங்களும் வரவேண்டும். ஏனெனில், உங்கள் வாதப்படி நீங்களும் பிரான்சில் இருந்துகொண்டு கூட்டமைப்புக்கு ஆதரவாக “ரிமோர்ட் கண்ரோல்” அரசியல் செய்ய முடியாது! காணாமல் போனவர்கள் பற்றியும், காணி விடுவிப்பு பற்றியும் தென்னிலங்கையிலும், தமிழர் பிரதேசங்களிலும் நடைபெறும் ஒன்றுகூடல்களில் கஜேந்திரகுமார் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டும் கிருபாகரன் அவர்களே…! கஜேந்திரகுமாராவது மக்களோடு இணைந்து அவற்றில் கலந்து கொண்டு மக்களுக்கான தனது ஆதரவை தெரிவிக்கிறார். சம்பந்தன் என்ன செய்தார்? பிரித்தானிய பிரதமர் யாழில் நின்றிருந்த வேளையில், காணாமல் போன தங்கள் உறவுகளை கண்டுபிடித்து தரும்படி போராடிய மக்களை சந்திக்க திராணியில்லாமல் தனது வாகனத்தை “ரிவர்ஸ்” சில் விட்டு, காவல்துறையின் துணையுடன் தலை தெறிக்க ஓடினாரே! நீங்கள் பார்க்கவில்லையா? பிரித்தானிய பிரதமர் அங்கு நின்றிருந்த அந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி, பிரதமரை மக்கள் முன் அழைத்து வந்து பேச வைத்திருந்தால், சிறிய அளவிலாவது பலன் கிடைத்திருக்காதா? இது எல்லாவற்றையும் விட பெரிய துரோகம் என்னவென்றால், பிரித்தானிய பிரதமருடன் சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது வேறு யாருமோ தமிழர் பிரச்னை பற்றி வாய் திறக்கவேயில்லை. இதை பிரதமரே தன்னுடைய பிரத்தியேக குறிப்பில் பதிவிட்டிருந்தமை, ஆதாரத்தோடு இணையங்களில் வந்ததே அதையும் நீங்கள் பார்க்கவில்லை போலும்! பிரதமரோடு எதுவும் பேசக்கூடாது என்பது தென்னிலங்கை கூட்டமைப்புக்கு இட்ட கட்டளை! தென்னிலங்கையின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றும் கூட்டமைப்பு, தமிழ் தேசியத்தின் பாதுகாவலாக இருக்குமா என்பதை மக்கள் சிந்தனைக்கு விடுவோம். கஜேந்திரகுமாருக்கும், பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான தொடர்புகளில் பல மர்மங்கள், இரகசியங்கள் இருக்கின்றன என்று சொல்லும் கிருபாகரன் அவர்களே.. உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த ரகசியங்களை நீங்கள் பகிரங்கப்படுத்தும் வரையிலும், உங்களின் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் இல்லாதவை என்பதை ஞாபகம் வைத்திருங்கள். பொதுமக்கள் விடயத்தில் இருவருக்கும் தொடர்புகள் இருந்திருந்தால் அதில் இரகசியம், மர்மம் ஏதும் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே! ஆனால் நீங்கள் சொல்லும் அந்த “இரகசியம், மர்மம்” வித்தியாசமான கருத்து பொதிந்ததாக இருக்கிறது. காலம் தாழ்த்தி இந்த விடயம் வெளியிடப்பட்டிருப்பது, தேர்தல் நலனுக்காக என்று நீங்கள் சொல்லும் இந்த குற்ற சாட்டுக்கு கஜேந்திரகுமார் பதிலளிப்பார் என்றும் நம்புவோம். வடமாகாண முதல்வரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை நீங்கள் அவதானமாக நிச்சயம் வாசித்திருப்பீர்கள், கிருபாகரன் அவர்களே! கூட்டமைப்புக்கோ அல்லது முன்னணிக்கோ வாக்கு போடுங்கள் என்று முதல்வர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இதில் எல்லோருக்கும் ஒரே கருத்துதான். ஆனால், முதல்வர் கூட்டமைப்பின் அங்கத்தவர் என்ற காரணத்தால், அவர் தன கட்சிக்கு சார்பாகத்தான் அந்த அறிக்கையை வெளியிட்டிருப்பார் என்று எதை ஆதாரமாக வைத்து நீங்கள் கருதுகிறீர்களோ, அதே போலத்தான் மற்றவர்களுக்கும். ஏனெனில், முதல்வரின் அறிக்கை மக்களுக்கான ஒரு எச்சரிக்கையாகத்தான் வந்திருக்கிறது. பொதுவான வார்த்தை பிரயோகங்கள்தான் அதி பாவிக்கப்பட்டுள்ளன. ஆக, கூட்டமைப்புக்கு சார்பாக இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்; அதேபோல், முன்னணிக்கு சார்பாக இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்! – குகன் யோகராஜா-