ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கையில் இருக்கிற தமிழர்களின் பிரச்சினை…..
அவர்களாகவே அதற்கு முடிவு கட்டிக் கொள்ள விடுவதுதான் நியாயம்….
இப்படியொரு பார்வை தமிழக பத்திரிகையாளர்கள் பலருக்கும் இருந்தது, இருக்கிறது.

பொத்தாம்பொதுவில் பார்த்தால், இந்தக் கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றும். உற்றுப் பார்த்தால்தான், இதிலிருக்கும் அயோக்கியத்தனத்தை உணரமுடியும்.

‘ஈழத்தமிழர் பிரச்சினை என்பது இலங்கையில் இருக்கிற தமிழர்களின் பிரச்சினை’ என்பதை, இந்திய ராணுவம் ராஜீவ்காந்தியால் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது மெத்தப்படித்த இந்தப் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினார்களா இல்லையா?

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது, ஒரு வினோதமான அமைப்பு அல்ல! ஆயுதம் தாங்கிப் போராடிய விடுதலைப்போராட்ட இயக்கங்களை வரலாற்றின் வழிநெடுகிலும் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒன்று தான் – விடுதலைப் புலிகள் இயக்கம். ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்துக்கும், ஒரு இனவெறி ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் போரில், சிங்கள ராணுவத்தின் கூலிப்படையாக இறங்கவேண்டிய அவசியமென்ன – என்று ராஜீவை இவர்கள் கேட்டார்களா, இல்லையா?

2009ல் தமிழ் மக்களை இலங்கை ராணுவம் விரட்டி விரட்டி வேட்டையாடியபோது, அதற்குத் தேவையான சகல ஒத்தாசையையும் செய்தவர்கள், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள். அப்போதிருந்த முதல்வருக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய வண்ண ஜிகினா விழாக்களையெல்லாம் விலாவாரியாகச் விவரித்தவர்கள், ‘ஒரு இனப்படுகொலைக்கு இத்தனை நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் துணைபோவது நியாயமா’ என்று நச்சென்று நாலு வார்த்தை கேட்காதது ஏன்?

ஐந்தாயிரம் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, பத்திரிகையாளனும் இயக்குநருமான கல்லம் மேக்ரே என்கிற மானுடன் ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடிகிறது. 26வது மைலில் இருக்கும் நம்மால் எதுவுமே கிழித்திருக்க முடியாது என்றா நினைக்கிறீர்கள்!

கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரமா, எழுபதாயிரமா, ஒன்றரை லட்சமா என்பதல்ல கேள்வி! தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நூறே நூறு தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் அது இனப்படுகொலைதான்! ஒரே ஒரு கொலை செய்தவன் கூட தன்னைத் தானே விசாரித்துக் கொள்ள முடியாது – என்றால், இனப்படுகொலை செய்தவன் மட்டும் எப்படி தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள முடியும்! இந்த விஷயத்தில் கூட மௌனம் சாதிக்கலாமா பத்திரிகையாளர்கள்?

Financial Express போன்ற சில பத்திரிகைகள் இதில் விதிவிலக்கு. ‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு 2009ல் நடந்த படுகொலைகள் பற்றிய நம்பகமான விசாரணையும் முக்கியம்’ என்று இரண்டு நாட்களுக்கு முன் தனது தலையங்கத்தில் எழுதியிருக்கிறது Financial Express.

இதற்கு நேர் எதிராக இருக்கிறது, வேறொரு ஆங்கிலப் பத்திரிகை. உதவி செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே – என்று நாம் வேதனையுடன் வேண்டுகோள் விடுக்க வேண்டிய அளவுக்கு, 2009 இனப்படுகொலையை மூடி மறைக்க முயலுகிறது அது.

ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்துமுடிந்த பின்னால், ‘நீங்கள் தான் பயங்கரவாதத்தை ஒழித்த பராக்கிரமசாலி’ என்று ராஜபக்சவுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார், அந்தப் பத்திரிகையின் ஜாம்பவான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், மூத்த பத்திரிகையாளரான அவருக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில்தான், ‘இலங்கைக்குக் கலப்பினம் தான் சரிப்பட்டு வரும்’ என்று திமிரோடு பேசியது மகிந்த மிருகம். ‘பண்ணை நடத்துகிறாயா, ஆட்சி நடத்துகிறாயா’ என்று இந்தப் பிதாமகன் ஒரு வார்த்தை திருப்பிக் கேட்கவில்லை.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவை இலங்கையின் கதாநாயகனாகச் சித்தரித்த அதே மனிதர், அந்த மிருகத்தைக் குப்பைத்தொட்டியில் வீசியிருக்கும் ரணிலிடம் பேட்டி எடுத்திருக்கிறார், இப்போது!

பத்திரிகைப் பேட்டிகளில் கேட்கப்படுகிற கேள்விகளை வைத்தே, அந்தப் பேட்டி எதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ரணில் பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன். அதைவைத்து நீங்கள் சகலத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

“மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை – என்றொரு கோரிக்கை இருக்கிறது. ஆனால், அந்த விசாரணை உள்ளக விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கருத்தொற்றுமை (இலங்கையில்) இப்போது ஏற்பட்டுள்ளது….”

இது கேள்வியா, பதிலா என்று குழம்பாதீர்கள். இது, கேள்வி. (நல்லாக் கேட்கறாங்கல்ல!) கேள்வியே இந்த லட்சணம் என்றால் பதில் எப்படியிருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

‘ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால், மகிந்த ராஜபக்ச தப்பிக்க முடிந்துள்ளது…… மகிந்தனை நான்தான் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்’ என்பது ரணில் ஏற்கெனவே அடிக்கிற டமாரம். இதையேதான் ரணில் இப்போதும் சொல்லியிருக்கிறார்.

ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாததால், சர்வதேச குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சவை நிறுத்த முடியாது…..
உள்ளக விசாரணை தான் நடைபெறும்…..

இதுதான் ரணிலின் பதில்.

ராஜபக்சவின் ராணுவம் ஆயிரமாயிரம் நிரபராதித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. பல்லாயிரம் சகோதரிகளைச் சீரழித்திருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை. ஒரு இனத்தைத் திட்டமிட்டுக் கொன்று குவித்திருக்கும் இன்னொரு இனம், தன்னைத் தானே எப்படி விசாரித்துக் கொள்ள முடியும்? சர்வதேச விசாரணை நடந்தால்தான், உண்மைகள் வெளிவரும். 2009ல் என்ன நடந்ததென்கிற உண்மையை மூடிமறைத்துவிட்டு கொடுங்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது – நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அடியோடு தகர்த்துவிடும்…

இதைத்தான் மனித உரிமையை மதிக்கும் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

இனப்படுகொலை – என்பதை மறைக்கத்தான் ‘போர்க்குற்றம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள், இலங்கையும் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தவர்களும்! ‘ஒரு புல் பூண்டுக்குக் கூட சேதாரமின்றி போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன்’ என்பது கொலைகார ராஜபக்சக்களின் கோயபல்ஸ் பிரச்சாரமாக இருந்தது. கொன்றுகுவித்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் உடல்களை உழுது புதைத்த திமிரில் அப்படிப் பேசினார்கள் அவர்கள். என்ன நடந்தது என்கிற உண்மையை அறிந்தே, இந்தியாவும் வேறு சில நாடுகளும் கொடுக்கும் நெருக்கடியால், சர்வதேச விசாரணை முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது, இருக்கிறது – ஐ.நா.

இதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்துவதற்குக் காரணம் – ரணில்.

ராஜபக்ச மீது எழுப்பப்படுகிற மனித உரிமை மீறல் புகார்களை, ரணில் மறுக்கவேயில்லை. ராஜபக்சவின் ராணுவம் அப்படியெல்லாம் அத்துமீறி செயல்படவில்லை – என்று சான்றிதழ் கொடுக்கவுமில்லை. ‘நான்தான் மகிந்தனை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்’ என்பதுதான் ரணிலின் வாக்குமூலம்.

ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால்தான் மகிந்தன் தப்பிக்க முடிந்தது – என்று ரணில் சொல்வதற்கு, ‘அதில் கையெழுத்திட்டிருந்தால் மகிந்த மிருகம் இந்நேரம் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும்’ – என்பதுதானே அர்த்தம்! மகிந்தன் மீதான குற்றச்சாட்டை மறுக்காமல், ‘நான்தான் காப்பாற்றினேன்’ என்று ரணில் சொல்வதற்கு – ‘ஒரு குற்றவாளியைக் காப்பாற்றியிருக்கிறேன்’ என்றுதானே பொருள்! ‘ஒரு நிரபராதியை எப்படி சர்வதேச கூண்டில் ஏற்ற முடியும்’ என்று ரணில் ஒருபோதும் கேட்டதேயில்லையே….. ஏன்?

பேட்டி எடுத்த நமது பெருமரியாதைக்குரிய பத்திரிகையுலக ஜாம்பவானுக்கு இது புரியவேயில்லையா? ‘ரோம் சாசனத்தில் கையெழுத்திட்டிருந்தால் மகிந்தன் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பான் என்று சொல்ல வருகிறீர்களா….’ என்று திருப்பிக் கேட்டிருக்க வேண்டாமா அவர்? ‘மகிந்தன் குற்றவாளி இல்லை – என்று நேரடியாக நீங்கள் மறுக்காததற்கு என்ன காரணம்’ – என்றாவது கேட்டிருக்க வேண்டாமா?

அப்படியெல்லாம் கேட்காததோடு நின்றுவிடவில்லை ஜாம்பவான். குதிரை குப்புறத் தள்ளிவிட்டு குழியும் பறிக்குமே…. அந்த மாதிரி கேள்வி (!) கேட்டிருக்கிறார். மகிந்தனுக்கு எதிராக ரணில் ஒரு துரும்பைக்கூட தூக்கிவைத்துவிடக் கூடாது என்பதுதான் அவர் கேட்கிற கேள்வியின் தொனியாக இருக்கிறது.

“மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை உள்ளக விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கருத்தொற்றுமை இப்போது ஏற்பட்டுள்ளது….” என்கிற அந்தக் கேள்வியை (!) மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

உள்ளக விசாரணையே போதும் – என்று ‘அடித்துச்’ சொல்வதற்காகத்தான், ‘கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டது’ என்கிறார் ஜாம்பவான். இந்தக் கருத்தொற்றுமைக்கு விரோதமாக அதிபரோ பிரதமரோ முடிவெடுத்துவிடக் கூடாது – என்று வலியுறுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிகிறது. அதையும் நேரடியாகச் செய்யாமல், மறைமுகமாகச் செய்கிறார். (நடுநிலைன்னா சும்மாவா?)

‘கருத்தொற்றுமை’ என்கிற வார்த்தையை எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறார் ஜாம்பவான்? இலங்கைத் தேர்தல் முடிவின் அடிப்படையிலா? தமிழர் தாயகத்தில் பெருவெற்றி ஈட்டியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ‘உள்ளக விசாரணையே போதும்’ என்கிற கோஷத்தை முன்வைத்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நினைக்கிறாரா அவர்?

தேர்தல் அறிக்கையில், சர்வதேச விசாரணை என்பதை சுற்றிவளைத்துத்தான் சொல்லியிருந்தது கூட்டமைப்பு. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் அதை வெளிப்படையாக வலியுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. முதல்வர் விக்னேஸ்வரனும் சகோதரி அனந்தியும் சிவில் சொசைட்டியும் வலியுறுத்திய பிறகு, அதைப் பேசியே ஆக வேண்டிய நிலை. நீதி கேட்கும் அந்தக் குரல் ஓங்கி ஒலித்தபிறகுதான், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று வாக்களித்திருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். உண்மை இப்படியிருக்க, ‘உள்ளக விசாரணையே போதும்’ – என்கிற கருத்தொற்றுமையை கூட்டமைப்பின் கூடாரத்துக்குள் எந்த இடத்தில் கண்டுபிடித்தார் நமது ஜாம்பவான்?

சர்வதேச விசாரணை தேவை – என்பதுதான் தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடு. ஏனென்றால், அவர்களில் பலரும், தங்கள் சொந்தங்களைக் கண்ணெதிரில் பறிகொடுத்தவர்கள். அவர்களது மனநிலையைப் புரிந்துகொண்டுதான், சர்வதேச விசாரணைக் கோரிக்கையை, தேர்தல் பிரச்சாரத்தில் உயர்த்திப் பிடித்தார்கள் கூட்டமைப்பின் வேட்பாளர்கள்.

மற்ற வேட்பாளர்களை விடுங்கள்…. அவர்களில் பலரும் சர்வதேச விசாரணையை ஏற்கெனவே வலியுறுத்தியவர்கள். அவர்கள் புதிதாக அதைச் சொல்லவில்லை. சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முறியடிப்பதற்காக அமெரிக்கா முதல் ஜெனிவா வரை, உலகம் முழுக்க, ஓடி ஓடி வேலை பார்த்த திருவாளர் சுமந்திரனின் உச்சக்கட்டப் பிரச்சாரத்தின் போது என்ன நடந்தது என்பதைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்கிற உண்மை விளங்கும்.

எந்தக் கோரிக்கையை முறியடிப்பதற்காகப் போராடினாரோ, அதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசவேண்டிய நிலைக்கு சுமந்திரனும் தள்ளப்பட்டார். இன்னொரு பக்கம், சர்வதேச விசாரணைக் கோரிக்கையை எழுப்பியவரே அவர்தான் என்கிற பிரச்சாரத்தைக் கூட அவரது தோழர்கள் திட்டமிட்டு மேற்கொண்டனர். (அவர்கள் அனுப்பிவைத்த மின்னஞ்சல்களை – ‘சர்வதேச விசாரணை கோரி சுமந்திரன் முழக்கம்’ – உள்ளிட்ட அத்தனையையும் அப்படியே வைத்திருக்கிறேன்!) இந்தக் கடைசி நிமிடப் பிரச்சாரம்தான், சுமந்திரனைக் காப்பாற்றியது என்பதை ஜாம்பவான் கூட மறுக்க முடியாது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, உள்ளக விசாரணை தான் நடத்தப்படவேண்டும் என்கிற கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டதாக, நடுநிலை ஜாம்பவான்கள் கயிறு திரிக்கலாமா?

இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் முதலானவற்றை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைப்பதென்ற ரோம் சாசனத்தில் இதுவரை 123 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.

‘ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால்தான் மகிந்தன் தப்பிக்க முடிந்தது’ என்று ரணில் சொல்வதிலிருந்தே, மகிந்தன் குற்றவாளிதான் என்பது உறுதியாகி விடுகிறது. அதைப் பற்றிக் கேள்வி எழுப்பக் கிடைத்த வாய்ப்பைத் தவிர்ப்பதும், தமிழ் மக்களின் தீர்ப்பைத் திரித்துக் கூறி ‘உள்ளக விசாரணையே போதும்’ என்று தன்னிச்சையாகத் தீர்ப்பு வழங்குவதும் நாம் மதிக்கும் பத்திரிகையுலக ஜாம்பவான் ஒருவருக்கு அழகா? நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அவர், மோசமான முன்மாதிரியாக நிறம் மாறலாமா? இந்தக் கேள்வியை சம்பந்தப் பட்டவரின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.