ஏறத்தாள ஏழு தசாப்தங்களாகத் தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டிப் புலம்பெயர் தேசங்களில் அறப்போர் தொடுப்பதற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் தயாராகி வருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக வரும் 31.08.2015 திங்கட்கிழமை மதியம் 12:00 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் ஆரம்பிக்கப்படுகின்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ் மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுத் தொடங்கி வைக்கின்றார்.

பரமேஸ்வரன் அவர்களுக்கு சமாந்தரமாக பிரித்தானியாவில் இயங்கும் மற்றுமொரு தமிழ்க் கட்டமைப்பின் பிரதிநிதிகளான நீதிராஜா, திருக்குமாரன் ஆகியோரும் அதேயிடத்தில் இருந்து மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இலண்டனில் இருந்து நெதர்லாந்து நோக்கிய பாதையில் பிரித்தானியாவின் கிழக்குக் கோடியில் உள்ள ஹார்விச் துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் இம்மூவருடனும் இடைநடுவில் மறுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கோபி சிவந்தன் அவர்கள் இணைந்து கொண்டு பரமேஸ்வரனிடம் இருந்து மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார்.

இதனைத் தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள டென்ஹாக் நகரம் வரை பயணிக்கும் கோபி சிவந்தன் அவர்களிடமிருந்து மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்திற்கான பொறுப்பை நெதர்லாந்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஏற்று அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள்.

மிதிவண்டி அஞ்சலோட்டமாக நடைபெறும் இப் பரப்புரைப் பயணத்தில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் இணைந்து கொண்டு, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் வரை தொடர் மிதிவண்டிப் பரப்புரைப் பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.

இதற்கு தமது முழு அளவிலான ஒத்துழைப்பைப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வழங்குவதோடு, வரும் திங்கட்கிழமை பிரித்தானிய பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெறவிருக்கும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுப் பன்னாட்டு நீதிவிசாரணைக்கான தமது குரலை உரத்து எழுப்ப வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.

தொடர்புகளுக்கு: 07401 664 266

நன்றி;பதிவு