வணக்கம் உறவுகளே
2009 இற்கு முன்பும் 2009இலும் திட்டமிட்டு கொத்துக்கொத்தாக கந்தகத்தால் குதறப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயம் கேட்டு போராடிவந்த புலம்பெயர்மக்களின் இன அழிப்பிற்கான போராட்டத்தினை நலிவடையச்செய்து சிறீலங்காவை காப்பாற்றும் முயற்சியில் அமேரிக்காவும் அதன் ஊது குழல்களும் வல்லாதிக்க மாயைக்குள் தமிழர்களை வளைத்துப்போட முயல்கின்றார்கள்

2009இல் எப்படி எமது இனத்தை அழிப்பதற்கு ஆயதரீதியிலும் அறிவுரீதியிலும் சிறீலங்காவுக்கு உதவிசெய்து எமது மக்களை பிணக்குவியலாக்குவற்கு ஏகாதிபத்திய புத்தியை காட்டினார்களோ அதேபோன்று இப்போதும் தமிழ்மக்களின் அரசியல் போரை கருவறுக்க கங்கணம் கட்டி நிற்கின்றார்கள் என்பதை உள்ளக விசாரணை என்ற கூற்றுக்களினூடாக அவர்களின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆகவே எமது அரசியல் போராட்டத்தினையாவது பாதுகாக்கவேண்டியவர்களாக மக்களாகிய நீங்கள்தான் இருக்கின்றீர்கள் இந்த இடத்தில் உங்கள் மனதில் வலுவான சந்தேகம் எழலாம் அதாவது எப்படி மக்களாகிய எம்மால் காப்பாற்ற முடியுமென்று உண்மதான் காரணம் ஆயுதப்போராட்டத்தின் வெற்றி உடனடியாக கண்ணுக்கு தெரிவதுபோன்று அரசியல் போரட்டத்தில் உடனடியாகவும் நேரடியாகவும் கண்ணுக்கு தெரிவதில்லை இதனாலேயே உளவியல் தாக்கத்தை மிக இலகுவாக அரசியல் போராட்டத்தில் ஏற்படுத்திவிடுகின்றது.

இதேபோன்று சனநாயகப்போராட்டத்தில் புதிது புதிதாக முளைவிடுகின்ற மாற்றுக்கருத்துக்களும் மக்களை உறங்குநிலைக்கு தள்ளிவிடுகின்றது மாற்றுக்கருத்தும் ஒருவகையில் அரசியலில் பாவிக்கப்படும் வியூகங்களின் வெளிப்பாடுதான்.

ஆகவே கொள்கையில் விலகாது இருப்பதோடு இலக்கை நோக்கி சரியாக நடப்போமானால் எந்த இடர்களையும் தாங்கிச்செல்லும் மனோதிடத்தை எமது இதயம் சகித்துக்கொள்ளும்.
உலகமக்கள் சக்தியின் வெளிப்பாடுதான் காயங்கள் தந்தவர்களின் கயமைத்தனத்தை கருவறுக்கும் இதை சரியாக புரிந்துகொண்டு ஜநாவின் மனச்சாட்சியை திறப்பதற்காய் ஒன்றாகி உரத்து குரல் கொடுக்க தயாராகவேண்டும்.

-தூயவன்-